இந்திய அணி நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியை 67 ரன்களில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா மாற்றம் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி கோலியின் அபாரமான சதத்தைன் மூலம் 373 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து ஆடிய இலங்கை அணி 306 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் தஷுன் ஷனகா 98 ரன்களில் விளையாடிய போது பந்துவீசிய ஷமி மன்கட் முறையில் அவரை அவுட் ஆக்க அப்பீல் செய்தார்.
ஆனால் அப்போது குறுக்கிட்ட கேப்டன் ரோஹித் ஷர்மா அப்பீல் செய்யாமல், முகமது ஷமியை சமாதானப்படுத்தி தொடர்ந்து பந்துவீச வைத்தார். இதையடுத்து தொடர்ந்து விளையாடிய ஷனகா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
போட்டிக்கு பின்னர் பேசிய ரோஹித் ஷர்மா “ஷமி ஏன் அப்படி செய்தார் என தெரியவில்லை. ஷனகா 98 ரன்களில் இருக்கிறார். அவரை அப்படி அவுட் ஆக்க நாங்கள் விரும்பவில்லை” எனக் கூறியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.