இன்று பிற்பகல் போட்டியில் லக்னோ – கொல்கத்தா அணிகள் மோதிக் கொண்ட நிலையில் கொல்கத்தா அணி அதிரடி ஆட்டத்தால் 15 ஓவரிலேயே வெற்றியை கைப்பற்றியுள்ளது.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலிங் தேர்வு செய்ய பேட்டிங்கில் இறங்கிய லக்னோவுக்கு ஆரம்பமே சோதனையாக அமைந்தது. ஓபனிங் இறங்கிய டி காக் 10 ரன்களுக்கு அதிர்ச்சிகரமாக அவுட் ஆனார். தொடர்ந்து வந்த தீபக் ஹூடாவும் 8 ரன்களுக்கு அவுட். முதல் 4 ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட் விழுந்த நிலையில் நிதானமாக ஆடிய கே எல் ராகுல் 27 பந்துகளுக்கு 39 அடித்து அவுட் ஆனார். அதன்பின்னர் வந்த நிகோலஸ் பூரன் மட்டும் 32 பந்துகளுக்கு 42 ரன்கள் என்ற சுமாரான ஸ்கோரையே தேற்றினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.
அதை தொடர்ந்து சேஸிங்கில் இறங்கிய கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பில் சால்ட் மட்டுமே அவுட்டே ஆகாமல் நின்று 47 பந்துகளுக்கு 89 ரன்கள் அடித்தார். சுனில் நரைன், ரகுவன்சி சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் டீம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பந்துக்கு ஒரு ரன் என 38 பந்துகளுக்கு 38 ரன்கள் அடித்துக் கொண்டு பில் சல்ட்டை விளையாட விட்டுவிட்டார்.
இதனால் 15.4 பந்துகளில் 2 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் (26 பந்துகள் மீதம்) வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.