விமான நிலையத்தில் பிறந்ததும் குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட பச்சிளம் குழந்தையை தாயைக் கத்தார் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கத்தாரில் இருக்கும் ஹமத் சர்வதேச விமான நிலையத்தில், கடந்த அக்டோபர் 02, 2020 அன்று, விமான நிலையத்தின் லாஞ்ச் சேவைப் பகுதியில் ஒரு பெண் பச்சிளம் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக, இந்த குழந்தையின் தாயைத் தேடும் வேலையில் இறங்கினார்கள் கத்தார் விமான நிலைய அதிகாரிகள். அப்போது குழந்தை கண்டு பிடிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி இருந்த 10 விமானங்களில் தேடத் தொடங்குகினர்.
சிட்னிக்குச் செல்ல, கத்தார் ஏர்வேஸில் தயாராகிக் கொண்டு இருந்த பல பெண்கள், வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டு, ஆம்புலன்ஸுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லி, அவர்கள் சமீபத்தில் குழந்தை பெற்றுள்ளனரா என்று சோதனைசெய்யப்பட்டது.
ஏன் இப்படிச் செய்கிறார்கள் என பெண்களுக்கு, அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த விவரங்களும் சொல்லப்படவில்லை. ஏன் சோதனைக்கு உள்படுத்தப்படுகிறோம் என்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு, அதற்கு சம்மதத்தை வழங்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை அந்த பெண்கள் கூறினர்.
ஆனால் அந்தக் குழந்தையின் தாய், குழந்தையை கைவிட்டுவிட்டு, வேறு ஒரு நாட்டுக்கு பறந்து சென்றுவிட்டார். ஆடைகளைக் களைந்து பெண்கள் சோதனைக்கு உள்படுத்தபட்டது குறித்து கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இந்த மாதிரியான நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என அப்போது தெரிவித்திருந்தார்.
நிலையான வழிமுறைகள் மீறப்பட்டு இருக்கின்றன. சில பெண் பயணிகளுக்கு நடந்த இந்த சம்பவத்துக்கு தான் மன்னிப்பு கேட்பதாக, கத்தார் நாட்டின் பிரதமர் ஷேக் காலித் பின் கலீஃபா அல் தானி தெரிவித்திருந்தார். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்து இருப்பதாக, கடந்த திங்கட்கிழமை அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் விதிகளை மீறி, பெண் மருத்துவ ஊழியர்களை அழைத்து, சில பெண் பயணிகளை சோதனை செய்து இருக்கிறார்கள். இவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.
இந்த குழந்தையின் தாயையும் இப்போது அடையாளம் கண்டுள்ளனர் கத்தார் அதிகாரிகள். தாய் ஓர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர். இந்த குழந்தையின் தந்தையையும் கண்டுபிடித்துள்ளனர். இவரும் ஓர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர். இருவருக்கும் இடையில் உடல் ரீதியிலான உறவு முறை இருந்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.
அந்தக் குழந்தையின் தந்தை, குழந்தையின் தாயுடன் உறவு கொண்டதை ஆமோதித்து இருக்கிறார். அதோடு, குழந்தையின் தாய், குழந்தையைப் பெற்றெடுத்த பின், ஒரு செய்தி உடன், புதிதாகப் பிறந்த பச்சைக் குழந்தையின் படத்தை தந்தைக்கு அனுப்பி இருக்கிறார்.
அந்தத் தாய் அனுப்பிய செய்தியில், தான் அந்தக் குழந்தையை கைவிட்டுவிட்டதாகவும், தன்னுடைய சொந்த நாட்டுக்கு போய்விடுவதாகவும் சொல்லி இருக்கிறார். இவரும் விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் ஒருவர்.
அந்தக் குழந்தையின் தந்தை கத்தாரில்தான் இருக்கிறார் எனக் கருதப்படுகிறது. தற்போது, தந்தை ஏதாவது சட்ட நடவடிக்கைக்கு ஆளாவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், தாயின் மீது, கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, அவரை மீண்டும் கத்தாருக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நீதிமன்ற ஒத்துழைப்புக்கு உட்பட்டு, அந்தப் பெண்ணைக் கைது செய்ய, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இந்த பெண், தன் சொந்த நாட்டில் இருந்து, கத்தாருக்கு கொண்டு வரப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம். இப்போது குழந்தையை கத்தார் அதிகாரிகள், பார்த்துக் கொள்கிறார்கள்.