Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க அதிபருக்கு எதிரான தீர்மானம்: நீங்கள் எளிமையாக புரிந்துகொள்ள 300 வார்த்தைகளில்

Advertiesment
அமெரிக்க அதிபருக்கு எதிரான தீர்மானம்: நீங்கள் எளிமையாக புரிந்துகொள்ள 300 வார்த்தைகளில்
, வியாழன், 19 டிசம்பர் 2019 (19:29 IST)
அமெரிக்காவில் அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிப் பெற உக்ரைனின் உதவியை நாடினார் என்ற குற்றச்சாட்டில் டிரம்பை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக எவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து புரிந்து கொள்ள இதோ ஒரு எளிமையான தொகுப்பு.

தனது போட்டியாளரான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பிடனுக்கு எதிராக தவறான தகவல்களை தெரிவிக்குமாறு டிரம்ப், உக்ரைன் அதிபரிடம் கோரி சட்டத்தை மீறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வருடம் ஜூலை மாதம், அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

டிரம்ப் - உக்ரைன் அதிபர் தொலைப்பேசி விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற வெளிநாட்டின் உதவியை கோருவது சட்டவிரோதமானது என தெரிவித்தனர்.

எனவே டிரம்பை பதவி நீக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

ஆனால், டொனால்ட் டிரம்ப் சட்டத்தை மீறினாரா அல்லது பதவிநீக்கம் செய்ய ஏதுவான குற்றம் புரிந்தாரா என்பது குறித்து பல விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தான் எந்த தவறும் செய்யவில்லை என டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

இந்த பதவி நீக்க தீர்மானத்தின் தொடக்கம் பெயர் வெளியிடாத உளவுத் துறை அதிகாரி ஒருவரால் ஆரம்பமானது.

ஜூலை 25ஆம் தேதியன்று உக்ரைனின் பிரதமருடன் டிரம்ப் பேசியது குறித்து கடிதம் ஒன்றை எழுதினார் அவர்.

அந்த கடிதத்தில் அவர், 2020ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற வெளிநாட்டின் தலையீட்டை டிரம்ப் கோரியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன்பின் அந்த தொலைப்பேசி அழைப்பு குறித்த உரையாடல் விவரங்கள் வெளியான பிறகு அதில் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மற்றும் அவரின் மகனை விசாரிக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்தது தெரியவந்தது.

அந்த அழைப்பு உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் நிறுத்திய பிறகு வந்துள்ளது. அதன்பின், மூத்த அதிகாரி ஒருவர் ஜோ பிடனை விசாரித்தால் இந்த உதவியை வழங்குவதாக அதிபர் டிரம்ப் தெளிவாக கூறியதாக தெரிவித்தார். ஆனால், வெள்ளை மாளிகை அதை மறுக்கிறது.
webdunia

டிரம்ப் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், உக்ரைனின் ஆற்றல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ஜோ பிடனின் மகனை குற்ற விசாரணை ஒன்றிலிருந்து காப்பாற்ற ஜோ பிடன் உக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்தார் எனவும், அதன்மூலம் ஜோ பிடன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. தனது மகனுக்காக ஜோ பிடன் அம்மாதிரியான ஒரு செய்கையில் ஈடுபட்டார் என்பதற்கும் சரி அல்லது ஜோ பிடனின் மகன் ஹண்டர் பிடன் தவறு செய்தார் என்பதற்கும் சரி எந்த ஆதாரமும் இல்லை.
ஜனநாயகக் கட்சியினர் அந்த தொலைப்பேசி அழைப்பே டிரம்ப் தவறு செய்தார் என்பதற்கான சாட்சி என்கின்றனர்.

ஜனநாயகக் கட்சியினர் டிரம்பின் மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கையை தடுத்தது என இரு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர்.

எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் குறித்து வெளிநாட்டில் விசாரிக்க சொல்வது பதவி நீக்கத்திற்கான குற்றமா என்றும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அதே சமயம், பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்ற டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் செனட் சபையின் அனுமதியை பெற வேண்டும். அதற்கு பெரும்பான்மையாக டிரம்பின் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்ப வேண்டும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 வயதில் யூ டியூப்பில் கல்லா கட்டும் சிறுவன் ...