Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண வயதில் வித்தியாசம் ஏன்?

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (20:02 IST)
ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண வயதில் வித்தியாசம் ஏன்? பெண்களுக்கு திருமண வயது குறைவாக இருக்க வேண்டும். ஆனால், ஆண்களுக்கு வயது அதிகமாக இருக்க வேண்டும் என்ற நியதி உருவானது எப்படி?

ஆண்களுக்கும், பெண்களுக்கும் சட்டபூர்வ வயதில் வித்தியாசம் இருப்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சட்டபூர்வ வயதில் வித்தியாசம் காணப்படுகிறது.

இந்தியாவில் வயதுவந்தோர் என கருதப்படுவதற்கான வயது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றுதான். ஆனால், திருமணம் செய்துகொள்வதற்கு சட்டபூர்வ வயது இரு பாலினத்தவருக்கும் வேறுபடுகிறது.

திருமண வயதில் வித்தியாசம் கூடாது என வழக்கு

திருமணம் செய்துகொள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கும் சட்டபூர்வ வயது வித்தியாசம் முடிவுக்கு வர வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அறிவியல் அடிப்படை ஏதுவும் இல்லாமல், ஆணாதிக்க மனப்பான்மையில் இந்த திருமண வயது வித்தியாசம் காணப்படுவதாக அவர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
முதல்முறையாக இல்லைதான் என்றாலும், இந்த வழக்குக்கு பின்னர், திருமண வயது வித்தியாசம் மீண்டும் அனைவராலும் விவாதிக்கப்படும் கருத்தாகியுள்ளது.

பெண்களின் வாழ்க்கையும், சட்டபூர்வ திருமண வயதும்

பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த குழந்தை திருமண வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, சட்டபூர்வ திருமண வயது அறிவிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காலம் விவாத பொருளாக இருந்தது.

குறிப்பாக, இதனுடைய முக்கிய மையம் பெண்களின் மேம்பட்ட வாழ்க்கை பற்றியதாக இருந்தது. இந்தப் பிரச்சனை மீண்டும் மீண்டும் எழுப்பப்படுவதற்கும் இதுவே காரணமாகும்.

திருமண வயது விவாத பொருளான பின்னணி

ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் இந்தியா இருந்தபோது, 1884ம் ஆண்டு டாக்டர் ருக்மாபாய் வழக்குக்கு பின்னரும், 1889ம் ஆண்டு புல்மோனி தாசியின் இறப்புக்கு பின்னரும் திருமண வயது விவாதத்தின் மையமானது.

குழந்தை திருமணம் செய்துகொள்வதை ருக்மாபாய் மறுத்திருந்தார். 11 வயதான புல்மோனி தாசி, 35 வயதான கணவர் வண்புணர்வு செய்தபோது உயிரிழந்தார்.

கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற புல்மோனி தாசியின் கணவர், வன்புணர்வு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

குழந்தை திருமண ஆபத்தை தடுக்கும் வகையில், 1891ம் ஆண்டு திருமணம் செய்வதற்கான வயது வரம்பு சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது,
அதன்படி உடலுறவு வைத்துகொள்வதற்கு குறைந்தபட்சம் 12 வயதினராக இருக்க வேண்டும். .

பெஹ்ரம்ஜி மலபரி போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

நடப்பது என்ன?


தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் "இந்தியாவில் குழந்தை திருமணம்" என்ற அறிக்கையின்படி, 1894ம் ஆண்டு மைசூர் மாகாணத்தில் 8 வயதுக்கு கீழுள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்வதை தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது.

மன்னரால் ஆளப்பட்ட இந்தூர், 1918ம் ஆண்டு ஆண்களுக்கு திருமண வயது 14 என்றும், பெண்களுக்கு 12 என்றும் முடிவு செய்தது.

ஆனால், இன்னும் வலுவான சட்டம் வேண்டும் என்கிற பரப்புரை தொடர்ந்து இருந்து வந்தது.

சர்தா சட்டம்

குழந்தை திருமணத்தை தடுக்க 1927ம் ஆண்டு ராய் சாஹேப் ஹர்பிலாஸ் சர்தா அறிமுகம் செய்த மசோதாவில், திருமணம் செய்துகொள்ள ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும், பெண்களுக்கு 14 என்றும் முன்மொழியப்பட்டது. 1929ம் ஆண்டு சட்டமாக மாறிய இந்த மசோதா சர்தா சட்டம் என்று அறியப்படுகிறது.

இந்த சட்டம் 1978ம் ஆண்டு திருத்தப்பட்டது. அதன் பிறகுதான் ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 18 என்றும் ஆனது. ஆனாலும், இந்த வயதுக்கு கீழ் திருமணம் நடைபெறுவது தடைபடவில்லை.

2006ம் ஆண்டு புதிதாக கொண்டுவரப்பட்ட குழந்தை திருமண தடுப்புச் சட்டம், சர்தா சட்டத்திற்கு மாற்றாக உருவாகி, குழந்தை திருமணம் செய்வது கடும் குற்றம் என் நிலை உருவானது.

குழந்தை திருமணங்கள் இன்றும் நடைபெறுகின்றனவா?

18 வயதுக்குள் இருக்கிற பெண்கள் திருமணம் செய்துகொடுக்கப்படுவதை தடுக்க முடியவில்லை என்பதால்தான் 1978ம் ஆண்டு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. புள்ளவிவரங்கள் தெளிவாக இல்லாமல் இருந்தாலும், சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களுக்கு திருமணம் நடைபெற்றுகொண்டுதான் இருந்தது.

யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நிதியம், உலக அளவில் நடைபெறும் குழந்தைகள் திருமணங்களில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் நடைபெறுவதாக தெரிவிக்கிறது.

2015-16ம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 20 முதல் 24 வயது வரை இருந்த பெண்களில் 26.8 சதவீதம் பேர் 18 வயதுக்கு முன்னதாகவும், 25 முதல் 29 வயது வரை இருந்த ஆண்களில் 20.4 சதவீதம் பேர் அவர்களின் 21 வயதுக்கு முன்னரும் திருமணம் செய்திருந்தது தெரிய வருகிறது,

இந்த அறிக்கையின்படி, மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்னதாக திருமணம் செய்திருந்த பெண்கள் 40.7 சதவீதமாகவும், பீகாரில் 39.1 சதவீதமாகவும், ஜார்கண்டில் 35.4 சதவீதமாகவும், மத்திய பிரதேசத்தில் 30 சதவீதமாகவும், மகராஷ்டிராவில் 25.1 சதவீதமாகவும் இருந்தது.

மத நம்பிக்கையின் பாதிப்பு


குழந்தை திருமணம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் குறிப்பிடுகிறது. பெண்கள் பூப்புப் பருவம் அடைகிறபோதுதான் திருமணத்திற்கு சரியான காலம் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. மாதவிடாய் வருவதற்கு சற்று முன்னதாகவோ அல்லது வந்தவுடனோ பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மத நம்பிக்கைகள் உள்ளன.

இதனால், சுதந்திரத்திற்கு முன்னாலுள்ள அல்லது பின்னால் உருவான சட்டமாக இருந்தாலும், பெண்களின் திருமண வயது பற்றிய பிரச்சனை எழும்போது எல்லாம், பெருமளவு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இன்றும், 18 வயதுக்குட்ட திருமணத்திற்கு பெரியதொரு காரணமாக இதுவே உள்ளது. இதோடு, பெண்களை ஒரு சுமையாக கருதுதல், பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்கள் கெட்டு போவார்கள் என்கிற அச்சம், வரதட்சணை, வறுமை, பெண்களின் குறைவான கல்வி நிலை என திருமண வயதுக்கு முன்னால் திருமணம் நடைபெற பல காரணங்கள் உள்ளன.

ஆண், பெண் திருமண வயதிலுள்ள வித்தியாசம் ஏன்?

பெரியதொரு போராட்டத்திற்கு பின்னர்தான், ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண வயதில் வேறுபாடு இருக்க வேண்டும் என்ற நிலை தோன்றியது.

பெண்களுக்கான திருமண வயது ஆண்களை விட குறைவாக இருப்பதாக குறிக்கப்பட்டது.குழந்தை திருமண தடுப்புச் சட்டம், சிறப்பு திருமண சட்டம், இந்து திருமண சட்டம், பார்சி திருணம் மற்றும் விவாகரத்து சட்டம், முஸ்லிம் திருமண சட்டம் என எல்லா சட்டங்களிலும் திருமணம் செய்துகொள்ள குறைந்தபட்சமாக ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் இருக்க வேண்டுமென குறிப்பிடப்படுகிறது.

திருமண வயதிலுள்ள வேறுபாடு பற்றி பிகாரின் ஒரு கிராமத்தில் கலந்து பேசுகையில், திருமணம் செய்து கொள்ளும் ஆணைவிட பெண்ணுக்கு வயது அதிகமாக இருந்தால், அவரை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்று கூறப்பட்டது.

எனவே, மத காரணங்களுக்கு அப்பாற்பட்டு பெண்களின் திருமண வயது ஆண்களைவிட குறைவாக இருக்க வேண்டும் என்பதற்கு வேறு பல காரணங்களும் இருக்கதான் செய்கின்றன.

திருமண வயது வேறுபாடு இல்லாமல் சமமாக இருந்தால் எப்படி இருக்கும்?

திருமண வயதில் வேறுபாடு இல்லாமல் சமமாக இருந்தால் எல்லாவற்றிலும் சமத்துவம் இருக்க வேண்டும் என்று கோரப்படும்.

சமத்துவம் பற்றி நமது ஆணாதிக்க சமூகம் மிகுந்த உற்சாகத்தோடு பேசினாலும், பெண்களின் சமத்துவம் என்று வரும்போது, பெரிய நாட்டமில்லை. இதனால்தான் மனைவி, கணவரைவிட குறைந்த வயதினராக இருக்க வேண்டும். அப்போதுதான் பலவீனமான அந்த பெண்ணை, ஆண்கள் நினைப்பதுபோல பக்குவப்படுத்தி கொள்ள முடியும் என ஆண் சமூகம் நினைக்கிறது.

எனவே, பெண்களை சென்னால் கேட்பவர்களாக, தங்களின் தன்மையை இழந்தவர்களாக, பயந்தவர்களாக, திணறிய ஆளுமைகளாக ஆக்குவதன் மூலம், தங்களின் விரும்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு ஆண்களால் மாற்றிக்கொள்ள முடியும். இதன் மூலம் பெண்கள் தங்களின் அபிலாஷைகளை அடக்கி கொண்டு பிறரின் ஆசைகளை நிறைவு செய்பவர்களாக உருவாகின்றனர்.

வாக்களிக்கும் வயது சம்மாக இருக்கும்போது, வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதற்கு வயது வித்தியாசமா?

சீரான சிவில் கோடு (Uniform Civil Code) பற்றிய தனது அறிக்கையில் திருமண வயது பற்றி சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

வயதுக்கு வந்தவராக கருதப்படும் வயதும், ஓர் அரசை தேர்வு செய்யவதற்கான உரிமையான வாக்களிக்கும் வயதும் சமமாக இருக்கிறபோது, குடிமக்கள் தங்களின் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்து கொள்ளவும் திறனுடையவர்களாக நிச்சயம் இருக்க வேண்டும். உண்மையிலேயே சமத்துவம் நிலவ வேண்டுமென விரும்பினால், வயதுவந்தோர் பரஸ்பர சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ளும் வகையில் திருமணத்திற்கு இருக்கும் வயது வித்தியாசம் முடிவுக்கு வர வேண்டும் என்று சட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

1875ம் ஆண்டு இந்திய பெரும்பான்மை சட்டப்படி, 18 வயதில் ஒருவர் வயதுவந்தவராகிறார். இந்த வயது ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்துகொள்கின்ற சட்டபூர்வ வயதாக இருக்க வேண்டும்.

கணவருக்கும், மனைவிக்கும் இருக்க வேண்டிய வயது வித்தியாசத்தில் சட்ட அடிப்படைகள் எதுவும் இல்லை. திருமணத்தில் இணைகின்ற தம்பதி எல்லா நிலையிலும் சமமானவர்கள், அவர்களின் கூட்டு உறவும் சமமானதாக இருக்க வேண்டும்.

திருமண வயதில் வேறுபாடு இருப்பது சமத்துவம் இல்லாதது. இத்தகைய சமத்துவமின்மை குறைந்தது சட்டபூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். பெண்கள் முன்னதாகவே பருவ வயதை அடைகிறார்கள், அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதால் பெண்களின் வயது குறைந்ததாக இருக்க வேண்டும் என்கிற நிலை முடிவுக்கு வர வேண்டும். பெண்கள் முன்னதாகவே பருவ வயதை அடைவதாக நமது சமூகம் நம்புமானால், அதனை சமத்துவம் மற்றும் மரியாதை மூலம் வெளிகாட்ட வேண்டும். வயதில் சமத்துவம் வேண்டும் என்பதைவிட இதுவொரு கண்ணோட்டம் பற்றிய விடயம். இந்த கண்ணோட்டம் மாறாவிட்டால், திருமண வயதில் வேறுபாடுகள் இல்லாமல் சமமாகி விட்டாலும், பெண்ணின் வாழ்க்கையில் சமத்துவம் என்பது அவர்களது வாழ்க்கையை விட்டு வெகுதொலைவு சென்றுவிடும்.

திருமண வயது பற்றிய பிரச்சனைக்கு முடிவு காணும்போது, சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துகொள்ளும் என்று நம்புகிறோம். எல்லா விதத்திலும் சமத்துவத்திற்கு எதிராகவும், அரசமைப்பு சட்டத்திற்கும், பொருத்தமான சர்வதேச ஒப்பந்தங்களுக்கும் எதிராகவும் இருக்கின்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபட்ட திருமண வயது வரம்பு என்பது நியாயமற்ற கொள்கையாகும். 18 வயதில் பெண்கள் திருமணம் செய்து கெள்ளலாம் என்பது மிகவும் இளம் பருவத்திலேயே திருமணம் செய்துகொள்வதையும், இளம் பருவத்திலேயே தாய்மை அடைய வேண்டும் என்பதையும் குறிக்கிறது, இதனால், அந்த பெண் திடீரென அதிக பொறுப்புக்களை ஏற்க வேண்டியிருக்கும்.

இதற்கு அப்பாற்பட்டு சிந்தனை செய்வது விவேகமாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டும் சீனா! இந்தியாவுக்கு தொல்லை தர புதிய ப்ளான்?

மன்மோகன் சிங் மறைவு எதிரொலி: இன்று அதிமுக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து..!

13000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒப்பந்த தொழிலாளி.. ரூ.21 கோடி மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம்..!

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய WHO தலைவர்

இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்