Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவைவிட்டு வெளியேறி மலேசியாவில் வசிக்க முடிவெடுத்தது ஏன்? - ஜாகிர் நாயக் விளக்கம்

இந்தியாவைவிட்டு வெளியேறி மலேசியாவில் வசிக்க முடிவெடுத்தது ஏன்? - ஜாகிர் நாயக் விளக்கம்
, செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (12:18 IST)
இந்தியாவில் தம் மீதான வழக்கு, விசாரணைகள் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியதும், மலேசியாவுக்குப் பயணமானார் மதபோதகர் ஜாகிர்  நாயக்.

தனக்கு நிரந்தர குடியுரிமை உள்ளிட்ட சலுகைகளை அளிக்க பல நாடுகள் முன்வந்ததாக பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ள அவர், ஏன் மலேசியாவில் தங்கியிருக்க தீர்மானித்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
 
அதற்கு அவரே விளக்கமாகப் பதிலளித்துள்ளார். கொரோனா ஊரடங்கு வேளையில் இணையம் வழியிலான ஒரு கலந்துரையாடலில் மலேசியா குறித்து பாராட்டி  இருப்பதுடன், தாம் அந்நாட்டில் தங்கியிருப்பதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார் ஜாகிர் நாயக்.
 
இவருக்கு மலேசிய அரசு நிரந்திர வசிப்பிட உரிமை அளித்துள்ளது. மலேசியா வந்த பிறகு தமது வாழ்க்கை முறை சற்றே மாறி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மும்பையில் இருந்த போது தம்மிடம் 500 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில், மலேசியாவில் இருவர் மட்டுமே இருப்பதாகப் புன்னகையுடன் கலந்துரையாடலில்  தெரிவித்துள்ளார்.
 
"இத்தகைய மாற்றங்கள் அனைத்தையும் நல்லவிதமாகவே கருதுகிறேன். என் நாட்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என திட்டமிட்டார்களோ, அவற்றை எல்லாம் செய்கிறார்கள். நாட்டை விட்டு என்னை வெளியேற்ற வேண்டும் என்பதும் அவற்றுள் ஒன்று," என்று ஜாகிர் நாயக் மேலும் கூறியுள்ளார்.
 
மலேசியாவில் தங்கியிருப்பதற்காக அவர் தெரிவித்துள்ள காரணங்களைப் பார்ப்போம்:
 
"இந்தப் பிரச்சனை சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. அதாவது, 2016 ஜூலையில் தொடங்கியது.
 
எனினும் அடுத்த இரு மாதங்களில் 13 முதல் 15 நாடுகள் எனக்கு அழைப்பு விடுத்தன. நான் அந்நாடுகளில் தங்கிக் கொள்ளலாம் என்றும், எனக்கு தங்கள் நாட்டில் தகுந்த பாதுகாப்பு வழங்குவதாகவும், நல்லபடி கவனித்துக் கொள்வதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
 
நல்ல, சாதகமான மற்றும் சாதகமற்ற அம்சங்களைப் பரிசீலித்து எனக்கு அழைப்பு விடுத்த நாடுகளில் இருந்து மூன்று நாடுகளை தேர்ந்தெடுத்தேன்.
 
"அவற்றுள் மலேசியாதான் சிறப்பானது எனத் தோன்றியது. நான் எடுத்த முடிவு குறித்து இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.
 
"உலகில் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் பிரச்சனைகள் உள்ளன. எனவே மோசமான நிலையில் உள்ளவற்றில் சிறந்த நாடு (BEST OF THE  WORST) மலேசியா என்ற அடிப்படையிலும், ஒரு நபர் வாழ்வதற்கு சிறந்த நாடு என்ற வகையிலும் எனது தேர்வு அமைந்தது.
 
"இந்த தேர்வுக்கான முதல் காரணம், மலேசியா போர் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தற்போது போர் பகுதியில் உள்ளன. ஏமன், ஈராக், வளைகுடா நாடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மலேசியா அப்படி அல்ல.
 
"இரண்டாவதாக, தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளதால் மேற்கத்திய நாடுகளின் நேரடி ஆதிக்கம் மற்றும் கொடுமைகளில் இருந்தும் மலேசியா விலகியுள்ளது.
 
"தற்போது உலகளவில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் மலேசிய கடப்பிதழுக்குதான் அதிக மதிப்புள்ளது. மலேசிய கடப்பிதழ் இருப்பின் ஒருவர் 185 நாடுகளுக்கு  'விசா' இன்றி சென்று வர முடியும் என்பது மூன்றாவது காரணம்.
 
"நான்காவதாக, அரபு பிராந்தியத்தில் இல்லாத இஸ்லாமிய நாடுகளிலேயே மலேசியாவில்தான் இஸ்லாம் அதிகம் பின்பற்றப்படுவதாகக் கருதுகிறேன். சராசரி  அளவில் பார்க்கும்போது இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தானில் உள்ளவர்களைக் காட்டிலும் மலேசிய இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை பின்பற்றுவது அதிகமாக  உள்ளது. இதுவும் மலேசியாவை நான் தேர்வு செய்ய காரணம்.
 
மலேசியாவில் வாழ்க்கைச் செலவினங்கள் குறைவு. கிட்டத்தட்ட இந்தியாவுக்கு இணையான வாழ்க்கைச் செலவுகள்தான் இங்கும் ஏற்படுகின்றன. இது ஐந்தாவது  காரணம்.
 
இறுதியாக, மலேசியா மிக அழகான நாடு. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பிட்டுச் சொல்வதானால் இங்குள்ள 'புத்ரா ஜெயா'  (மலேசியாவின் நிர்வாகத் தலைநகர்) தான் உலகத்திலேயே மிகச் சிறந்த இஸ்லாமிய நகரம், இஸ்லாமியர்கள் வாழக்கூடிய நகரம் என்பேன்.
 
இங்கு இரவு வாழ்க்கை, நடன விடுதிகள் (கூடங்கள்) கிடையாது. மதுக்கூடங்களும் இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது எனது சரியானது என்றே நினைக்கிறேன்," என்று ஜாகிர் நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்றை போல இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை!