Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபாகரன் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசியல் களத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

Advertiesment
Prabhakaran
, புதன், 15 பிப்ரவரி 2023 (10:18 IST)
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் சொல்வது தமிழ்நாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அந்தத் தாக்கம் யாருக்கு சாதகமாக இருக்கும்? இந்தத் தருணத்தில் அந்த அறிவிப்பு வெளியானது ஏன்?
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கவிஞர் காசி ஆனந்தனும் பழ. நெடுமாறனும் நேற்று அறிவித்த நிலையில், இலங்கை ராணுவம் அந்தக் கூற்றை முற்றிலுமாக மறுத்துவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் சீமான், வைகோ ஆகியோர் பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தைத் தெரிவித்துவிட்டனர்.
 
நெடுமாறனைப் பொறுத்தவரை இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டம் முடிவடைந்து பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்ததிலிருந்தே, அதனை மறுத்துவருகிறார். இதுவரை நான்கிற்கும் மேற்பட்ட தடவைகள் பிரபாகரன் திரும்பவருவார் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில்தான், திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் அதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
 
இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம் என்ற விவகாரம் தமிழ்நாட்டில் எப்போதுமே உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனால், அது தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்திருக்கிறதா என்பது கேள்விக்குரியதுதான். இந்தப் பின்னணியில், நெடுமாறனின் தகவல் குறித்து பலரும் பல்வேறு கோணங்களில் மறுப்புகளையும் சந்தேகங்களையும் தெரிவித்துவருகின்றனர்.
webdunia
"பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" என்ற இந்தக் கருத்து தமிழ்நாடு அரசியலில், தற்போதைய சூழலில் எந்தத் தாக்கத்தையாவது ஏற்படுத்துமா என்ற கேள்வியும் இருக்கிறது.
 
"இதெல்லாம் நான்சென்ஸ். இப்படிச் சொல்வதால் தமிழ்நாட்டிலும் ஒன்றும் நடக்காது, இலங்கையிலும் ஒன்றும் நடக்காது. ஏனென்றால் இலங்கை ராணுவம் பிரபாகரனின் உடலுக்கு டி.என்.ஏ. சோதனை செய்திருக்கிறது. பிரபாகரன் கொல்லப்பட்டாரா இல்லை என்ற உண்மை அவர்களுக்குத் தெரியும். நெடுமாறன் நீண்ட காலமாக இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனால், தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக எதுவும் நடக்காது" என்கிறார் தி இந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம்.
 
ஆனால், இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சதி இருக்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "2009ஆம் ஆண்டில் இலங்கையில் இறுதிப் போர் நடந்தது. அப்போது வைகோ சென்ற இடங்களுக்கெல்லாம் மிகப் பெரிய கூட்டம் வந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 27 இடங்களைப் பிடித்தது. ஆகவே, பிரபாகரன் இருக்கிறார் அல்லது இல்லை என்பது தேர்தல் களத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
 
ஆனால், நெடுமாறன் இதை இப்போது சொல்ல வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி இருக்கிறது. இறுதிப் போரில் தமிழர்கள் இறந்ததற்கு காங்கிரஸ் காரணம் என்ற குற்றச்சாட்டை எழுப்பி, தி.மு.கவிற்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்த நினைக்கலாம். இது மத்திய உளவுத் துறையின் திட்டமாகவும் இருக்கலாம்.
 
பிரபாகரனை இவர் பார்க்கவில்லை என்கிறார். அவரை சந்தித்த நபர் யாரையாவது சுட்டிக்காட்டலாம். அதையும் செய்யவில்லை. ஏதோ ஒரு நாட்டிலிருந்து நித்யானந்தா வீடியோ போடுவதைப் போல, பிரபாகரனே ஒரு வீடியோவைப் பேசியிருக்கலாம். அப்படியும் செய்யவில்லை. நெடுமாறன் இப்படி இந்தத் தருணத்தில் சொல்ல வேண்டிய நெருக்கடி என்ன என எனக்குத் தெரியவில்லை. 
 
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் முதலில் வைகோவும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், வெறும் அறிக்கை மட்டும்தான் இருக்கிறது. வேறு ஆதாரங்கள் இல்லை என்றவுடன் அவர் பின்வாங்கிவிட்டார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக 2010ல் நெடுமாறன் சொன்னார். 16ல் சொன்னார். 2018லும் சொன்னார். இப்போதும் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். இது நிச்சயம் எடுபடாது" என்கிறார் குபேந்திரன்.
webdunia
மூத்த பத்திரிகையாளரான ப்ரியனும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். "இதற்கு எந்தத் தாக்கமும் இருக்காது. ஈழப் பிரச்சனை குறித்து சீமானே இப்போது பேசுவதில்லை. தவிர, ஈழப் பிரச்சனை இனி தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தோன்றவில்லை. ஆனால், நெடுமாறன் ஏன் இப்போது இதைச் சொன்னார் என்பது ஒரு கேள்வி" என்கிறார் ப்ரியன்.
 
ஆனால், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என வலியுறுத்திச் சொல்கிறார் வழக்குரைஞரும் பிரபாகரனுடன் நீண்ட நாட்கள் பழகியவருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "இந்தச் செய்தி எனக்கும் அவருக்கும் மட்டும்தான் வந்தது. அது உண்மையானது. இந்தியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை இருக்கிறது. அதை சட்டரீதியாக நீக்க வேண்டிய முயற்சிகளை நீதிமன்றத்தில் மேற்கொள்வோம். இந்திய அரசின் ஆதரவை பெற வேண்டியிருக்கும். நிறைய வேலை இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இது ஒரு நல்ல தொடக்கம்" என்கிறார் அவர்.
 
இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி செய்யப்பட்ட 13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவது பற்றிய பேச்சுகள் அந்நாட்டில் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், இது போல அறிவிப்பது அங்குள்ள அரசிற்கு தயக்கத்தை ஏற்படுத்தாதா எனக் கேட்டபோது, "இந்திய - இலங்கை ஒப்பந்தம் நிறைவேறி 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை என்ன செய்திருக்கிறார்கள். இதுவரை செய்யாதவர்கள் இனியும் செய்ய மாட்டார்கள். பிரபாகரன் வரும்போது அங்குள்ள மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்" என்கிறார் அவர்.
 
பிரபாகரன் வரும்போது அவர் எந்த நாட்டிலிருந்து செயல்படுவார், இந்தியாவில் ராஜீவ் கொலை வழக்கு அவர் மீது இருக்கிறதே என்ற கேள்விகளைக் கேட்டபோது, "நீங்கள் கேட்பதைப் போல பல பெரிய கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு காலம் பதில் சொல்லும்" என்கிறார் அவர்.
 
பெ. மணியரசன் தலைமையிலான தமிழ் தேசியப் பேரியக்கம் நெடுமாறனின் அறிவிப்பு தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. "தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்று வாழ்கிறார் என்பது அவர் மீது தமிழர்களும் பன்னாட்டு மக்களும் வைத்துள்ள பெருமதிப்பைச் சிதைப்பதாக உள்ளது.
 
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தமிழின உணர்வை மடைமாற்றி, பா.ஜ.கவின் பக்கவாத்தியமாக திசைமாற்றும் உத்தி தெரிகிறது. மேலும், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உற்சாகத்தோடு தமிழ்நாட்டுத் தமிழர்கள் செயல்படும்போது, பயங்கரவாத அமைப்பை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆட்சியாளர்கள் அவர்களைச் சிறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இல்லாத விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு மீண்டும் மீண்டும் பிறப்பிக்க நெடுமாறனின் அறிக்கை வாய்ப்பளிக்கும்" என அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
 
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் இது தொடர்பாக அதிகாரபூர்வமாக இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று மட்டும் இவ்வளவு குறைவா?