Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏர் இந்தியாவை வாங்கிய டாடாவுக்கு முன்னுள்ள சவால்கள் என்ன?

ஏர் இந்தியாவை வாங்கிய டாடாவுக்கு முன்னுள்ள சவால்கள் என்ன?
, புதன், 13 அக்டோபர் 2021 (12:24 IST)
உப்பு தயாரிப்பிலிருந்து உயரே பறப்பது வரை அனைத்தும் சாத்தியம் என்று மீண்டும் ஒரு முறை மார்தட்டிக்கொள்ளலாம் டாடா குழுமம். ஏர் இந்தியாவின் சின்னமான மஹாராஜா மீண்டும் அதிகாரப்பூர்வமாக டாடா நிறுவனத்திடம் வந்துள்ளது

இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை அதிகத் தொகைக்கு வாங்கிய டாடா சன்ஸ் நிறுவனம் இப்போது மீண்டும் அதன் அதிகாரப்பூர்வ உரிமையாளராகிறது.

ஜே ஆர் டி டாடா-வால் உருவாக்கப்பட்ட ஏர் இந்தியாவை மீண்டும் உரிமை கொள்வதில் 'டாடா சன்ஸ்' மிகுந்த உற்சாகமடைந்துள்ளது. 1953 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்ட போதிலும், டாடா சன்ஸ் தான் அதனைத் தொடர்ந்து இயக்கியது. பின்னர் எழுபதுகளில், ஜனதா கட்சி அரசாங்கத்தில் இருந்தபோது, அதன் மேலாண்மை டாடா சன்ஸ் நிறுவனத்திடமிருந்து முற்றிலும் திரும்பப் பெறப்பட்டது.

அதன் பிறகும் கூட, 1993 வரை, ஏர் இந்தியாவின் தலைவராக, அதில் பல்வேறு பதவிகளை வகித்த அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்தனர் என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் பின்னர் இந்தப் பதவிக்கு சிவில் விமானத் துறையின் சவால்கள் குறித்த புரிதல் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஏர் இந்தியாவைக் கையகப்படுத்தியதையடுத்து, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் வெளியிட்ட ஒர் அறிக்கையில் இதை ஒரு "வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்" குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மிக முக்கியமான விமான நிறுவனத்தின் உரிமை பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சந்திரசேகரன் தனது அறிக்கையில், "ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய ஒரு உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை இயக்குவது எங்கள் முயற்சியாக இருக்கும். மஹாராஜா சின்னம் மீண்டும் உரிமையாவது, இந்தியாவில் விமான சேவையில் முன்னோடியாக இருந்த ஜேஆர்டி டாடாவுக்குச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

சிவில் விமானப் போக்குவரத்தில் இரண்டாவது பெரிய நிறுவனம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து ஏர் விஸ்தாரா விமான சேவையையும் மலேஷியன் ஏர்லைன்ஸுடன் இணைந்து ஏர் ஏஷியா விமான சேவையையும் நடத்தும் டாடா சன்ஸிடம் இப்போது மூன்றாவதாக ஏர் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதாவது, இந்த கையகப்படுத்தலுக்குப் பிறகு, 'சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில்' டாடா சன்ஸ் 'இரண்டாவது பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. முதல் இடத்தில் இருக்கும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' உள்நாட்டுச் சந்தையில் 57 சதவிகித பங்கைக் கொண்டுள்ளது. ஏர் இந்தியாவை கையகப்படுத்திய பிறகு, டாடா சன்ஸ் 27 சதவீத சந்தைப் பங்கைப் பெறும்.

ஏர் இந்தியாவைக் கையகப்படுத்திய பிறகு, 'டாடா சன்ஸ்' முன் நிற்கும் சவால்களும் கடினமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர், ஏனெனில் அது ஏற்கனவே இந்தியாவில் மேலும் இரண்டு 'விமான நிறுவனங்களை' இயக்கி வருகிறது.

பிபிசியிடம் பேசிய சிவில் ஏவியேஷன் விவகார நிபுணரும் மூத்த பத்திரிக்கையாளருமான அஷ்வினி ஃபட்னிஸ், "அவர்கள் இரண்டு விமான நிறுவனங்களுடன் சேர்த்து ஏர் இந்தியாவையும் எப்படி சிறப்பாக இயக்கப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏர் இந்தியாவின் சேவைகளை உலகத் தரத்திற்கு வழங்க முடியுமா என்பது அடுத்த சவால். இரண்டு விமான நிறுவனங்களில் டாடா சன்ஸ் மூலம் வழங்கப்படும் சேவைகள் மிகச் சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது." என்று கூறினார்

இழப்பு எவ்வாறு ஈடு செய்யப்படும்?

மேலும் அஷ்வினி ஃபட்னிஸ், 'ஏர் இந்தியாவின் இழப்பு எப்படி ஈடு செய்யப்பட்டு லாபகரமான விமான நிறுவனமாக்கப்படவிருக்கிறது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்" என்று கூறுகிறார். அரசின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, 'ஏர் இந்தியா' ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ .20 கோடி இழப்பைச் சந்தித்து வருகிறது என்றும் அரசு இதைத் தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்ததற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
webdunia

"இப்போது அரசின் சுமை குறைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், கிடைத்ததைக் கொண்டு டாடா சன்ஸ் என்ன செய்யப்போகிறது என்பதும் ஒரு சவாலாக முன் நிற்கிறது. பெரும் இழப்பைச் சந்தித்து வந்த ஒரு விமான நிறுவனத்தைத் தலைகீழாக எப்படி மாற்றப்போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். இதற்காக அவர்கள் மொத்த அமைப்பையுமே மாற்ற வேண்டியிருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், கையகப்படுத்தலின் போது டாடா குழுமத்திற்கு அரசாங்கம் விதித்த நிபந்தனைகளும் குறிப்பிடத்தக்கவை. நிபந்தனைகளை விளக்கிய இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவ் பன்சல், ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம், ஓராண்டிற்கு எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய முடியாது என்றும் ஓராண்டுக்குப் பிறகும், பணி நீக்கம் செய்யாமல் ஊழியர்கள் தாமாக முன்வந்து பணி ஓய்வு பெற வழி வகை செய்ய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார். இதனுடன், 'வருங்கால வைப்பு நிதி' மற்றும் 'கிராச்சுட்டி' ஆகியவையும் கொடுக்கப்பட வேண்டும் என்பவையும் நிபந்தனைகளாக விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது, 'ஏர் இந்தியா' மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - ஒன்று 'ஏர் இந்தியா இன்டர்நேஷனல்' வெளிநாட்டுச் சேவை, மற்றொன்று 'ஏர் இந்தியா' உள்நாட்டுச் சேவை மற்றும் மூன்றாவது 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' வளைகுடா நாடுகளுக்கும் தென்னிந்திய மாநிலமான கேரளாவிற்கும் இடையேயான விமானச் சேவை.

'ஏர் இந்தியா'வில் 12,085 ஊழியர்கள் உள்ளனர், அவர்களில் சுமார் 4,000 பேர் ஒப்பந்தப் பணியாளர்களாகவும் 8084 பேர் நிரந்தரப் பணியாளர்களாகவும் உள்ளனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் 1434 நிரந்தர ஊழியர்கள் உள்ளனர். எனவே, ஊழியர்களின் நிர்வாகமும் 'டாடா சன்ஸ்' முன் ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

அஷ்வினி ஃபட்னிஸ் குறிப்பிடும் மற்றொரு சவால் விமானங்களின் மேலாண்மை. இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலத்தில், 'ஏர் இந்தியா'வில் 107 விமானங்கள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக அவர் கூறுகிறார். ஏர்பஸ் மற்றும் போயிங்கின் நவீன விமானங்களான சிறிய மற்றும் பெரிய விமானங்கள் இதில் அடங்கும். நவீன 'ஜம்போ ஜெட்' 'ஏர் இந்தியா' -வில் இணைக்கப்பட்ட 1971-ல் நிர்வாகம் டாடாவின் கையில் தான் இருந்தது என்றும் ஃபட்னிஸ் கூறுகிறார்.

அனைத்து பெரிய 'விமான நிறுவனங்களும்' இப்போது விமானங்களை வாங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றன, ஏனெனில் வாங்குவதற்கு அதிக அளவு பணம் செலுத்த வேண்டும், அதேசமயம் விமானத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்வதற்கு, கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும். உள்நாட்டு விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் போயிங் -737 விமானமாக இருந்தாலும், ஏர்பஸ் அல்லது ட்ரீம்லைனராக இருந்தாலும், அவற்றின் கட்டணமும் மாதத்திற்கு 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட அனைத்து 'விமான நிறுவனங்களும்' இந்த முறையில் தான் இயங்குகின்றன என்று ஃபட்னிஸ் கூறுகிறார். அதாவது, வாடகைக்கு விமானத்தை எடுத்துக்கொண்டு அவற்றை இயக்குகிறார்கள்.

இந்தக் கையகப்படுத்தல் மூலம் டாடா குழுமத்திற்கு 1500 பயிற்சி பெற்ற விமானிகளும் 2000 பொறியாளர்களும் கிடைப்பது ஒரு நல்ல விஷயம். இதை விடப் பெரிய நல்ல விஷயம் என்னவென்றால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் விமானங்களுக்கான 'ஸ்லாட்'கள் கிடைப்பதுதான்.

'ஸ்லாட்' என்பது என்ன?

விமான நிலையங்களில் விமானங்களும் அதிகரித்து வருகின்றன; பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், 'விமான நிறுவனங்கள்' ஒவ்வொரு விமான நிலையத்திலும் தங்கள் விமானங்கள் சீராக இயங்குவதற்குத் தேவையான இடங்களைப் பெற வேண்டியது அவசியம். இதுவும் ஒரு வகையில் வாடகை இடம் தான். இதற்காக நிறைய பணமும் செலுத்த வேண்டும்.

தற்போது ஏர் இந்தியாவிற்கு 6200 உள்நாட்டுச் சேவை இடங்களும் 900 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சேவை இடங்களும் உள்ளன.

ஃபட்னிஸ் மற்றும் விமான வல்லுநர்கள் விமான நிறுவனங்களுக்கிடையில் இந்த 'ஸ்லாட்டுகளை' வாங்க ஒரு வர்த்தகப் போர்ச் சூழலே நிலவுகிறது என்று கூறுகிறார்கள். 'ஜெட் ஏர்வேஸ்' லண்டன் விமான நிலையத்தில் தனது இடங்களை 'எத்திஹாட் ஏர்வேஸ்'க்கு பல பில்லியன் டாலர்களுக்கு விற்ற உதாரணத்தை மேற்கோள் காட்டி ஃபஜ்னிஸ் இதைக் கூறினார்.

'டாடா சன்ஸ்' நிறுவனம் 'ஏர் இந்தியா'வை வாங்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அதற்குச் சாதகமாகவே உள்ளன. மொத்தமாக ரூ.18,000 கோடி சுமை இருந்தாலும், இதில் ரூ.15,000 கோடி கடனாகவும் மற்றும் ரூ.2,700 கோடி சொத்தின் பேரிலும் செலுத்தப்பட்டது.

தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' போன்ற ஒரு நிறுவனமும் அவர்களிடம் இருப்பதுதான் 'டாடா சன்ஸ்' இன் மிகப்பெரிய பலம் என்று பட்னிஸ் கூறுகிறார். அது அவர்களிடம் இருப்பது அவர்களுக்கு லாபத்தை அளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனிக்கிழமை லீவ் கிடைக்குமா?