Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய ரயில்வே எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்கி, தூய்மையாக்க புதிய திட்டம்; உதவும் தொழில்நுட்பம்

இந்திய ரயில்வே எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்கி, தூய்மையாக்க புதிய திட்டம்; உதவும் தொழில்நுட்பம்
, திங்கள், 11 அக்டோபர் 2021 (12:38 IST)
கொரோனா பெருந்தொற்று காலத்தில் காலத்தில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பொது இடங்களில் எச்சில் துப்புவது இன்னும் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது.

இதைச் சமாளிப்பதற்காக ஒரு பசுமையான கண்டுபிடிப்பை இந்திய ரயில்வே பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

எச்சில் துப்புவதற்காக சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளும் அளவு சிறிய, மக்கக்கூடிய பை ஒன்றை இந்திய ரயில்வே பயணிகளின் பயன்பாட்டுக்கு வழங்க உள்ளது.

இவை தூக்கி எறியப்பட்ட பின்பு பைக்குள் இருக்கும் விதைகள் செடிகளாக முளைக்கும்.

இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான வளாகங்களில் எச்சில் துப்புவதால், குறிப்பாக பான் மற்றும் புகையிலை பயன்படுத்துவோர் எச்சில் துப்புவதால் உண்டாகும் கறைகளை நீக்க ஏராளமான தண்ணீரை மட்டுமல்லாது ஆண்டுக்கு ரூபாய் 1200 கோடி ரூபாயை இந்திய ரயில்வே செலவிடுகிறது என கணிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வளாகங்களில் பயணிகள் எச்சில் துப்புவவதைத் தடுப்பதற்காக ரூபாய் 5 முதல் 10 மதிப்புள்ள இந்தப் பைகளை விநியோகம் செய்யும் தானியங்கி இயந்திரங்களை 42 ரயில் நிலையங்களில் இந்திய ரயில்வே தற்போது அமைத்து வருகிறது.

மேற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வே ஆகிய மூன்று ரயில்வே மண்டலங்களில் இந்தக் கருவிகளை நிறுவ ஈஸிஸ்பிட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எச்சில் துப்புவதற்கான இந்தப் பைகளை பயணிகள் பாக்கெட்டில் கொண்டு செல்ல முடியும்.

இந்தப் பையில் மேக்ரோமாலிக்யூல்கள் பல்ப் டெக்னாலஜி எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை வெளியே கசிய விடாமல் தடுக்க செய்யும் பொருளும் இதில் உள்ளது என்று இதன் தயாரிப்பாளர் கூறுகிறார் என்று பிடியை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறிய பைகளை 15 முதல் 20 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் இதில் விதை மட்டுமல்லாமல் எச்சிலை உறிஞ்சி அதை திடப் பொருளாக மாற்றும் பொருட்களும் இருக்கும்.

மண்ணில் தூக்கி எறிந்த பின்னர் இதில் இருக்கும் விதை முளைக்கத் தொடங்கும்.

நாக்பூரைச் சேர்ந்த ஈசிஸ்பிட் நிறுவனம் இந்த தானியங்கி இயந்திரங்களை ரயில் நிலையங்களில் நிறுவத் தொடங்கிவிட்டது.

இந்திய ரயில்வே மட்டுமல்லாமல் நாக்பூர் மாநகராட்சி மற்றும் அவுரங்காபாத் மாநகராட்சி ஆகியவற்றுடனும் இவற்றை பொது இடங்களில் நிறுவுவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்ளும் சிறிய பைகள் மட்டுமல்லாது 20,30 அல்லது 40 முறை எச்சில் துப்ப கூடிய எடுத்துச் செல்லும் வகையிலான சிறிய குவளைகள் மற்றும் துப்புவதற்கென வடிவமைக்கப்பட்ட கூடைகள் ஆகியவையும் இந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரயில்வே வளாகத்துக்குள் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படுகிறது.
மனிதர்களின் எச்சில் கழிவுகளிலிருந்து மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்று ஈசிஸ்பிட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ரித்து மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!