Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்ப் - ஆபாச பட நடிகை விவகாரம்: 7 கேள்விகளில் எளிய விளக்கம்

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (22:09 IST)
நியூயார்க்கின் க்ராண்ட் ஜூரி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றப்பதிவு செய்ய முடிவெடுத்துள்ள நிலையில், குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபராகியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
 
குற்றச்சாட்டுகள் இன்னும் பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை என்பதால் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது மாவட்ட வழக்கறிஞர் என்ன குற்றச்சாட்டு வைக்கிறார் என்பது நமக்குத் தெரியாது.
 
குற்றச்சாட்டு அதிகாரப்பூர்வமாக வெளியுலகிற்குச் சொல்லப்படும் வரை, குற்றப்பத்திரிகை விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.
 
ஆனால், ட்ரம்புடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி வந்த ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்கு 2016 பிரசாரத்தின்போது பணம் கொடுத்த விவகாரத்தை மையப்படுத்தியதாக இந்த வழக்கு இருக்க வாய்ப்புள்ளது.
 
கீழ்காணும் 7 கேள்விகள் இந்த வழக்கின் பின்னணி குறித்து நமக்குப் புரிதலை வழங்கும்.
 
கடந்த வியாழக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்த கிராண்ட் ஜூரி எனப்படும் மக்கள் பிரதிநிதிகள் குழு வாக்களித்தது.
 
இதன் பொருள் என்னவென்றால் குற்றம் இழைத்ததாக நம்பப்படும் நபருக்கு எதிராக வழக்கறிஞர்களால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
 
குற்றப்பத்திரிகை ஆவணத்தில் குற்றச்சாட்டு பற்றிய அடிப்படைத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். ட்ரம்பின் வழக்கில் ஒன்று அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றங்களும் உள்ளன.
 
வழக்கறிஞரால் சுமத்தப்படும் வழக்கமான குற்றச்சாட்டுகளைப் போல் அல்லாமல், கிராண்ட் ஜூரியின் ரகசிய வாக்கெடுப்பு மூலம் indictment என்ற இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். டிரம்ப் வழக்கில் நியூயார்க்கின் மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
 
கிராண்ட் ஜூரி என்பது ஒரு வழக்கில் சாட்சியங்களைக் கேட்டு, ஒரு நபர் மீது குற்றம் சாட்டப் போதுமான ஆதாரம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும் குடிமக்களின் குழு.
 
 
ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பால் டிரம்ப் கைது செய்யப்பட்டதாக இணையத்தில் பரவிய 'போலி புகைப்படங்கள்'
 
கைது செய்யப்படுவது என்பது எல்லா நேரங்களிலும் குற்றப்பத்திரிகையின் அடுத்த நடவடிக்கையாக இருப்பதில்லை.
 
ஆனால், வழக்கறிஞர்கள் ட்ரம்பின் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்ட பின்னர், பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் டிரம்ப்பின் குழு மற்றும் மற்ற நிபுணர்கள் அவர் இன்று(செவ்வாய்) சரணடைவார் என்கின்றனர்.
 
எனினும், என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ட்ரம்ப் சரணடைந்தால் ஓராண்டுக்கும் மேலான தண்டனை கிடைக்கக்கூடிய வழக்குகளில் நடக்கும் வழக்கமான கைது நடைமுறை பின்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
விசாரணைக்குச் செல்லும்போது 'பெர்ப் வாக்' என்ற செயல்முறைக்கு அவர் உள்ளாவதால் அவருக்கு கைகளில் விலங்கிடப்படலாம்.
 
'பெர்ப் வாக்' என்றால் என்ன?
தற்போது ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் செவ்வாய்க் கிழமை சரணடைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதலில் அவர் நியூயார்க் நீதிமன்றத்திற்கு வெளியே கேமரா மற்றும் மைக்குகளுடன் திரண்டிருக்கும் செய்தியாளர்களைக் கடக்க வேண்டியிருக்கும்.
 
இதைத்தான் அமெரிக்காவில் பெர்ப் வாக் என்று அழைக்கின்றனர்.
 
சில சந்தேக நபர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்படுவர், மற்றவர்கள் சுதந்திரமாக வர அனுமதிக்கப்படுவர்.
 
பெர்ப் வாக்கின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட அந்த வழக்கின் மறக்க முடியாத தருணங்களாக இருக்கும்.
 
முன்னாள் ஹாலிவுட் பிரபலம் ஹார்வி வெய்ன்ஸ்டீன் இரண்டு பெண்கள் தொடர்பான பாலியல் வல்லுறவு மற்றும் தண்டனைக்குரிய பாலியல் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அவர் கைவிலங்குகளுடன் நியூயார்க் காவல்துறை கட்டடத்திற்குள் பெர்ப் வாக் வந்தார்.
 
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மீடூ குற்றச்சாட்டு விவகாரத்தை ஒட்டிய முக்கிய படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
 
மற்றொரு பிரபலத்தின் பெர்ப் வாக், முன்னாள் ஐஎம்எஃப் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான், பாலியல் வன்கொடுமை மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு அழைத்துவரப்பட்டது நடந்தது.
 
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் வியர்த்து களைத்துப்போய் காணப்படுவார். பின்னர் அவர் தன்னை கைவிலங்கிட்டு செய்தியாளர்கள் முன் அழைத்து வந்தது நியாயமற்ற செயல் எனப் புகார் செய்தார்.
 
'’வழக்கில் தண்டிக்கப்படும்வரை நீங்கள் அப்பாவியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்று தெரியாத போது மற்றவர்கள் முன் நீங்கள் குற்றவாளியாக அழைத்து வரப்படுகிறீர்கள்,’’ என்று 2013ஆம் ஆண்டு சிஎன்என் அமெரிக்க ஊடகத்திடம் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் தெரிவித்தார்.
 
பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் வழக்கறிஞர்களால் கைவிடப்பட்டன. எனினும், ஐஎம்எஃப்-ல் தனது வேலையில் இருந்து அவர் விலகினார்.
 
ட்ரம்ப்பிற்கு நெருக்கமான சிலரும் பெர்ப் வாக் செய்துள்ளனர்.
 
விசாரணை எப்படி இருக்கும்?
டிரம்ப் வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இந்த விசாரணையின்போது ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் முதன்முறையாக நீதிமன்றத்தில் வாசிக்கப்படும்.
 
அப்போது டிரம்ப் குற்றம் இழைத்தாரா என்று அவரிடம் கேட்கப்படும். அப்போதுதான் அவர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பது தெரியவரும்.
 
நீதிபதிகள் அனுமதித்தால் விசாரணையின்போது கேமராக்கள் அனுமதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
 
விசாரணைக்குப் பிறகு, அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த ஜாமீன் என்பது நீதிமன்றத்திற்கு மீண்டும் விசாரணைக்கு வருவேன் என்று உறுதியளிப்பதை அடிப்படையாக வைத்து வழங்கப்படும்.
 
அமெரிக்க ஊடகங்களின் கூற்றுப்படி, குற்றப்பத்திரிகையில் மோசடி தொடர்பான வழக்குகள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. நியூயார்க் சட்டப்படி, இதுபோன்ற வழக்குகளில் குற்றம் இழைத்தவர் ஜாமீன் கோர முடியாது.
 
ஆபாச நடிகையுடன் தொடர்பால் ட்ரம்ப் கைதாவாரா? நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் உஷார் நிலை
 
ட்ரம்ப் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்கு தன்னுடைய வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
 
பணம் கொடுத்தது சட்டவிரோதமானது அல்ல. ஆனால் கோஹனுக்கு பணத்தைச் செலுத்தியதை சட்டக் கட்டணமாக டிரம்ப்பின் பதிவு கூறுகிறது. இதைத் தன்னுடைய கணக்கு விவரங்களில் டிரம்ப் பொய் சொல்வதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
 
மேலும், மாடல் கரேன் மெக்டௌகலுக்கும் கணிசமாக பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவரும் டிரம்புடன் தனக்கு தொடர்பு இருந்ததாகக் கூறியவர்.
 
 
குற்றப்பத்திரிகை விவரங்கள் இன்னும் தெரியாவிட்டாலும்கூட, சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
 
2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி டிரம்ப் நிகழ்த்திய உரைக்குப் பிறகு அவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் எதிர்கொள்வாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
 
ட்ரம்பின் ஃப்ளோரிடா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய ஆவணங்கள் மீதான விசாரணை தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படலாம்.
 
ஜோ பைடனின் 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவை மாற்ற ஜார்ஜியாவில் உள்ள அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததற்காகவும் டிரம்ப் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
 
இந்தக் குற்றப்பத்திரிகையோ அல்லது அதன் மீதான தண்டனையோ ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்காது.
 
அமெரிக்க அரசமைப்பின்படி, ஒருவர் அதிபராக இருக்க அவர் குற்றமற்றவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
 
"ஒரு குற்றத்திற்காக குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட வேட்பாளர், அதிபர் பதவிக்கு பிரசாரம் செய்வதையோ அல்லது அதிபராக பதவியில் இருப்பதையோ அமெரிக்க சட்டம் தடைசெய்யவில்லை.
 
சிறையில் இருந்தும்கூட ஒருவரால் பிரசாரம் செய்யவும் அதிபராகச் செயல்படவும் முடியும்" என்கிறார் பிபிசி வட அமெரிக்க நிருபர் அந்தோனி ஸர்ச்சர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்