Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசான் காட்டில் 36 நாட்கள் தனிமையில் தவித்த விமானியின் திகில் கதை

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (23:23 IST)
விமான விபத்து நடந்த பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்
 
பிரேசிலின் தொலைதூரப் பகுதியில் உள்ள அமேசான் காட்டின் அடர்ந்த பகுதிகளுக்குள் விமானி ஆண்டோனியோ சேனா தன்னந்தனியாக மாட்டிக்கொண்டபோது, அவரைச் சுற்றி கருஞ்சிறுத்தைகளும், பெரு முதலைகளும், அனகோண்டா பாம்புகளும் உள்ளன என்பதை அறிந்து கொண்டார்.
 
அமேசான் காட்டுக்குள் ஏற்பட்ட விமான விபத்துக்கு பின் தம்மைச் சுற்றியுள்ள உயிர்க்கொல்லி விலங்குகள் குறித்து மட்டுமல்ல, நீர், உணவு, உறைவிடம் ஆகியவை குறித்தும் அந்த 36 வயது விமானி கவலைப்பட வேண்டியிருந்தது.
 
தாம் மீட்கப்பட பல நாட்கள் ஆகும் என்று ஆண்டோனியோ அச்சப்பட்டது அப்படியே நடந்தது. விமானம் விபத்துக்குள்ளான பின் ஒரு மாத காலத்துக்கும் மேல் தாம் தனிமையில் உயிர் வாழப் போராட வேண்டியிருக்கும் என்று அப்போது அவர் எதிர்பார்க்கவில்லை.
 
விபத்துக்குள்ளான விமானம் - என்ன நடந்தது?
''மே டே... மே டே... மே டே... பாப்பா.. டேங்கோ.. இந்தியா.. ரோமியோ.. ஜூலியட் இஸ் ஃபாலிங்.." இப்படித்தான் ஆண்டோனியோ சேனா, கீழே விழும் முன் கடைசியாகப் பதிவு செய்த செய்தி தொடங்கியது.
 
2021 ஜனவரி மாதம் இந்த விபத்து நடந்தது. விமானம் கீழே விழுந்த சமயத்தில் ஆண்டோனியோ சேனா மட்டும் தனியாக அந்த விமானத்தில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார்.
 
தொலைதூர பகுதிகளில் உள்ள சுரங்கத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக அவர் பயணித்துக் கொண்டிருந்தார்.
 
"900 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது விமானத்தின் இன்ஜின் திடீரென நின்று விட்டது. காட்டின் நடுவே நான் வேறு வழியில்லாமல் தரை இறங்க வேண்டியதாயிற்று," என்று பிபிசி உலக சேவையிடம் பேசிய ஆண்டோனியோ தெரிவித்தார்.
 
அமேசான் ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள, ஏதோ ஒரு காட்டுப் பகுதியில் அடர்ந்த கிளைகளுக்கு நடுவே வேகமாக உரசிக்கொண்டு அந்த செஸ்னா சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது அவர் மரணத்திலிருந்து தப்பித்து விட்டார். ஆனால் அவருடைய பிரச்னைகள் அப்போதுதான் தொடங்கின.
 
"விமானத்தின் சிதைந்த பாகங்கள் முழுவதும் எரிபொருள் சிந்தியிருந்தது. நான் உடனடியாக அந்த விமானத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. ஏனென்றால் நான் அப்போது மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்தேன்," என்று அவர் கூறுகிறார்.
 
ஒரு மலைப் பாம்பு மனிதரை எப்படி விழுங்கும்?
கடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற இந்தோனீசிய கிராமம்
அந்த விமானம் முழுவதும் எரிபொருள் சிந்திக் கிடந்ததால் அதை அவரால் உறைவிடமாக பயன்படுத்த முடியவில்லை. தாம் கடைசியாக அனுப்பிய செய்தி தொடர்புடையவர்களைச் சென்று சேர்ந்திருக்கும், அவர்கள் தம்மை மீட்க வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர் விமானத்தின் அருகிலேயே அந்தக் காட்டுக்குள் தங்கியிருந்தார்.
 
"நான் அந்தக் காட்டுக்குள் சில நாட்கள் உயிர் வாழ என்னவெல்லாம் தேவைப்படுமோ, அவை அனைத்தையும் சேகரித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் அந்த மழைக் காட்டுக்குள் நான் 5 முதல் 8 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று கருதினேன். தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் வந்து சேர்வதற்கு வழக்கமாக ஆகும் காலம் இதுதான்," என்று அவர் பிபிசி உலக சேவையிடம் கூறினார்.
 
அமேசான் காட்டின் மூன்று பெரிய உயிர்கொல்லி விலங்குகளில் அனகோண்டா பாம்புகளும் அடக்கம்
 
யாரும் தேடி வரவில்லை... அடுத்து நடந்தது என்ன?
 
ஒரு வார காலத்துக்கும் மேலாகியும் அவரைத் தேடி யாரும் வரவில்லை. அப்போதுதான் ஆண்டோனியோ ஒரு முடிவுக்கு வந்தார். தாம் நேசிப்பவர்களையும் தன்னை நேசிப்பவர்களையும் அவர் மீண்டும் சந்திக்க வேண்டுமென்றால் அந்த இடத்திலேயே முடங்கிக் கிடக்காமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி நடக்க வேண்டும் என்பதுதான் அந்த முடிவு.
 
விமானம் விபத்துக்குள்ளான இடத்திலேயே தங்கி இருக்காமல், நகர வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
 
"என் குடும்பத்தை நான் மீண்டும் சந்திக்க அந்த இடத்தில் இருந்து வெளியேற ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது."
 
அவர் அந்த முடிவை செய்த அடுத்த நாளே விடியலுக்கு பின் தமது பயணத்தை தொடங்கினார்.
 
ஆண்டோனியோ சேனா தாம் இருக்கும் இடத்திலிருந்து மிகவும் அருகில் இருக்கும் மனித குடியிருப்பு பகுதி ஒன்றை கண்டறிவதற்கான தேடலைத் தொடங்கினார்.
 
"நான் கிழக்கு நோக்கி நடக்கத் தொடங்கினேன். சூரியன் இருக்கும் திசையைப் பார்த்து நான் நடந்தேன். தினமும் காலையில் இரண்டு முதல் நான்கு மணி நேரம் நடந்தேன். அதற்குப் பின்பு இரவில் நான் பாதுகாப்பு பாதுகாப்பாக இருப்பதற்காக திட்டமிட வேண்டியிருந்தது. நெருப்பு மற்றும் உறைவிடத்தை தயார் செய்வதற்காக நான் அந்த நேரத்தை பயன்படுத்தினேன்," என்று அவர் கூறுகிறார்.
 
அமேசான் மக்கள் மூலம் கிடைத்த அறிவு
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதி எதுவும் இல்லாத அமேசான் காட்டுப் பகுதிக்குள் தனியாக இருப்பது மிகமிக ஆபத்தானது.
 
ஆனால் தாம் உயிர் பிழைப்பதற்கான சில திறன்களை ஆண்டோனியோ சேனா முன்னரே கற்றுக்கொண்டவர்.
 
"நான் விமானப் போக்குவரத்து துறையில் இருப்பதால் காட்டுக்குள் தனிமையில் எவ்வாறு உயிர் பிழைப்பது என்பதற்கான பயிற்சி ஏற்கனவே எனக்குக் கிடைத்து இருந்தது. நான் இந்த அமேசான் வனப்பகுதியில் தான் பிறந்து வளர்ந்த இருந்தேன்," என்று அந்த விமானி கூறுகிறார்.
 
இதற்கு முன்பு பல முறை அமேசான் மழைக்காட்டின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களிடம் அவர் பேசியிருந்தார்.
 
அந்த உரையாடல்கள் மூலம் அவருக்கு கிடைத்த அறிவுதான் தற்போது அவரது வாழ்வையும் சாவையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
 
"எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைத்தது அப்போதெல்லாம் அந்த மக்களிடம் நான் பேசினேன். அவர்களிடம் கற்றுக் கொள்ள ஏராளமானவை உள்ளன," என்கிறார் ஆண்டோனியோ சேனா.
 
காட்டுக்குள் உணவு கிடைத்தது எப்படி?
ஆண்டோனியோ முதலில் தேட வேண்டியிருந்தது உணவைத்தான். அவரைச் சுற்றி இருக்கும் விலங்குகளை அவர் உன்னிப்பாக கவனித்தார்.
 
"இதற்கு முன்பு நான் வாழ்க்கையில் கண்டிருக்கவே செய்யாத பழம் ஒன்று அந்தக் காட்டுக்குள் இருந்தது. அங்கே இருக்கும் குரங்குகள் அவற்றை உண்பதை நான் பார்த்தேன். குரங்குகள் அந்தப் பழத்தை உண்டு உயிர்வாழ முடியும் என்றால் நானும் அதை உண்டு உயிர் வாழலாம் என்பதை உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார்.
 
காட்டுக்குள் முதலைகளை நினைத்துத்தான் தாம் அதிகம் அஞ்சியதாகக் கூறுகிறார் ஆண்டோனியோ சேனா
 
கொக்கோ செடிகளையும் சில முறை அந்த காட்டுக்குள் அவர் கண்டார். ஆனால் பழங்களை மட்டுமே நம்பி அவர் தொடர்ந்து உயிர்வாழ முடியாது. அப்படியானால் அவர் வேறு என்ன செய்தார் தெரியுமா?
 
'நண்டு தின்னி' பறவை முட்டைகள். 'நன்டு' என்பது அமேசான் காட்டுக்குள் மிகவும் இயல்பாக காணப்படும் பறவை இனங்களில் ஒன்று.
 
ஈமு கோழி போன்ற உருவமுடைய, பறக்க முடியாத இந்தப் பறவை 'நீல நிறத்தில் பெரிய முட்டை' இடும் என்று அவர் கூறுகிறார்.
 
அவ்வப்போது அந்த முட்டைகளை ஆண்டோனியோவால் கண்டுபிடிக்க முடிந்தது.
 
"முட்டைகள் எல்லாமே ஒன்றுதான். அவை புரதச் சத்து மிகுந்தவை. அப்போது எனக்கு அவை மிகவும் அவசியமானதாக இருந்தன. அதனால் நான் அப்படியே பச்சையாக அந்த முட்டைகளை உண்டு வாழ்ந்தேன்."
 
ஆபத்தான விலங்குகளிடம் இருந்து தப்பித்தது எப்படி?
எப்போதாவது கிடைக்கும் உணவுகள் மூலம் அவரால் தமது உயிரைக் காத்துக் கொள்ள முடிந்தது.
 
150 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் காடு எப்படி இருந்தது தெரியுமா?
'சென்டினல் பழங்குடியினர் தேடித் தாக்க விரும்புவதில்லை'- நேரில் சென்றவரின் அனுபவம்
ஆனால் உயிரோடு இருக்க உணவு மட்டும் போதுமானதல்ல. அங்கிருக்கும் மிகவும் ஆபத்தான விலங்குகளிடம் இருந்து தப்பி இருப்பது மிகவும் முக்கியம்.
 
"எப்போதெல்லாம் நான் உறைவிடத்தை எனக்காக தயார் செய்தாலும், நான் உயரமான இடங்களையே தேர்வு செய்தேன்," என்கிறார் அவர்.
 
"ஏனென்றால் அங்கு கருஞ்சிறுத்தைகள், பெரும் முதலைகள், அனகோண்டா பாம்புகள் அனைத்தும் அமேசான் காட்டில் நீர் இருக்கும் பகுதிகளில் வாழ்பவை. அதனால் நீர் நிலைகளின் அருகில் நான் தங்கவில்லை."
 
காட்டுக்குள் நடந்து செல்லும்பொழுது ஆண்டோனியோ அதிகமாக ஒலி எழுப்பிக் கொண்டே சென்றார். இவர் விலங்குகளைப் பார்ப்பதற்கு முன்பு இவர் வருவதை அங்கு இருக்கும் விலங்குகள் முன்கூட்டியே அறிய வேண்டும் என்பதால் இந்த உத்தி.
 
நீங்கள் கண்டறியும் விலங்குகளை விட உங்களைக் கண்டறியும் விலங்குகள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
 
இறுதி நம்பிக்கை - இன்னலின் முடிவு
 
ஆண்டோனியோவின் உயிர் பிழைப்பதற்கான உத்திகள் பலனளித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவரது உடல் எடை மிகவும் கணிசமாகக் குறைந்திருந்தது.
 
தம்மை மீட்ட விவசாயிகள் குழுவுடன் விமானி ஆண்டோனியோ சேனா
 
விமானத்தின் சிதிலமடைந்த பாகங்களிலிருந்து அவர் நடக்கத் தொடங்கி சில வாரங்கள் கடந்து விட்டன.
 
விபத்து நடந்து 36 நாட்கள் கழித்து அங்கே ஒரு சிறு மக்கள் கூட்டத்தை அவரால் பார்க்க முடிந்தது.
 
"இவ்வளவு தூரம் நடந்தும், மலைகளை ஏறியும் இறங்கியும் நதிகளைக் கடந்தும் வந்தபின்பு, நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பகுதியில் கொட்டைகளை சேகரிக்கும் ஒரு சிறு குழுவினரை நான் கண்டறிந்தேன்," என்று ஆண்டோனியோ கூறுகிறார்.
 
எடுத்த எடுப்பிலேயே இவரால் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. அவர்கள் எழுப்பிய ஒலிதான் இவரை முதலில் அடைந்தது. அந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
 
அப்பொழுதுதான் அவரது நீண்ட இன்னலில் முடிவு தொடங்கியது.
 
"என்னுடைய குடும்பத்தை நான் மீண்டும் பார்க்க போகிறேன் என்பதுதான் இப்படி அனைத்தையும் மீறி எனக்கு வலிமையும் உத்வேகத்தையும் கொடுத்தது. காட்டில் இருந்து வெளியே வந்து ஒரு வழியாக விமான நிலையத்தில் எனது குடும்பத்தினரை சந்தித்ததுதான் என் வாழ்க்கையிலேயே மிகவும் சிறந்த தருணம்," என்று நெகிழ்ச்சியுடன் அவர் கூறுகிறார்.
 
ஆண்டோனியோ காணாமல் போன பின்பு அவரைத் தேடி விமானங்களும் ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டன. ஆனால் அவர் காட்டை விட்டு வெளியேறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அந்தத் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டன.
 
ஒருவேளை அவர் அந்த இடத்திலிருந்து நடக்கத் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் தமது குடும்பத்தை மீண்டும் சந்தித்து இருக்கவே மாட்டார்.
 
"நான் இவை அனைத்தையும் என் குடும்பத்தினருக்காகத்தான் செய்தேன். அவர்களை நினைத்துக் கொண்டுதான் செய்தேன். கடைசியாக என்னால் அவர்களைக் கட்டியணைக்க முடிந்தது. நான் அவர்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதையும் கூற முடிந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments