ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய ஐந்து குரூப் ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது குரூப்பைச் சேர்ந்த இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இரு அணிகளும் சந்திக்கும் முதல் மற்றும் நாக் அவுட் பந்தயம் இதுவாகும். இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது நியூசிலாந்து. இந்தப் போட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது. அடிலெய்டில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய கேள்வி.
அடிலெய்ட் மைதானம்
அடிலெய்ட் ஓவல் மைதான ஆடுகளம் வடக்கு ஸ்டாண்டில் இருந்து தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இது எப்போதுமே பேட்டிங்கிற்கு துணைநிற்கும் மைதானமாக இருந்துள்ளது. இங்கு தங்கள் திறமையைக் காட்ட, மாறும் வானிலை மற்றும் மேகங்களின் வருகையை பந்துவீச்சாளர்கள் எதிர்நோக்குகிறார்கள். ஆனால் 2013-ல் இந்த ஆடுகளம் டிராப்-இன் பிட்சாக மாற்றப்பட்டது அதாவது இந்த ஆடுகளம் விரிக்கப்படுகிறது. அமைக்கப்படுவதில்லை. சிறப்பான விஷயம் என்னவென்றால் மைதானம் உண்மையில் ஓவல் வடிவத்தில் உள்ளது. நேராக அதாவது ஸ்ட்ரெய்ட் ஷாட்களால் சிக்ஸர் அடிப்பது கடினம். ஆனால் ஸ்கொயர் பவுண்ட்ரி சிறியது. அதை இந்திய பேட்ஸ்மேன்கள் குறிவைக்க வேண்டியிருக்கும்.
பெரிய இலக்கு எதிர்பார்ப்பு
"போட்டி மாலையில் தொடங்கும் என்பதால், கடலில் இருந்து வீசும் காற்று, வேகமாக அல்லது மெதுவாக பந்துவீசுவதற்கான திசையை தீர்மானிக்கும். ஆனாலும், விக்கெட் சிறப்பாக இருப்பதால் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்,”என்று மைதானத்தில் பணியாற்றும் பில்லி ஜான் பிபிசியிடம் கூறினார். இந்தியா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். ஏனெனில் அடிலெய்டின் T20 வரலாற்றில் முதலில் மட்டை வீசுபவர்களின் வெற்றி சதவிகிதம் அதிகமாக உள்ளது. அடிலெய்டு விக்கெட் மற்றும் வானிலையை கருத்தில் கொண்டு இறுதி 11 வீரர்கள் குறித்து முடிவெடுக்கப்போவதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். “அணியில் உள்ள 15 வீரர்களும் இறுதி அணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு முன் பரிசீலிக்கப்படுவார்கள். யார் விளையாடினாலும், விளையாடாமல் இருந்தாலும் அணி பலவீனமாக இருக்காது,” என்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அவர் கூறினார். ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு முன் இருக்கும் சவால்கள் பற்றி பார்ப்போம்.கேப்டனின் ஃபார்ம்
முதல் கவலை கேப்டன் ரோஹித் ஷர்மா தான். இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காரராக அவர் எடுத்த ரன்கள் 4, 53, 15, 2 மற்றும் 15. சிட்னியில் நெதர்லாந்திற்கு எதிராக அவர் அரைசதம் அடித்தார். தொடக்கத்திலேயே அவருடைய ஒரு எளிய கேட்ச் தவறவிடப்பட்டது. அதே நேரத்தில் பெரிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் தடுமாறுவது போல காணப்பட்டார். அவரது தொடக்க ஜோடியான கே.எல். ராகுல் ஐந்து போட்டிகளில் கடைசி இரண்டில் அரைசதம் அடித்துள்ளார். ஆனால் முதல் மூன்று போட்டிகளிலும் அவரது ஸ்கோர் 4, 9 மற்றும் 9 ரன்கள் ஆகும். பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் மற்றும் சாம் கரன் ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் முதல் ஐந்து ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் இந்திய துவக்க ஜோடி வேகமாக விளையாட வேண்டும் என்பதுதான் விஷயம். ஏனெனில் இதுவரை டி20 உலகக் கோப்பையில் பவர்பிளேயில் மோசமாக விளையாடியுள்ள வீரர்களில் ரோஹித் ஷர்மாவும், கேஎல் ராகுலும் அடங்குவார்கள். இந்தப் போட்டியிலும் இந்திய அணி மிடில் ஆர்டரையே அதிகம் சார்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் விராட் கோலி ஒன்-டவுனிலும், சூர்யகுமார் யாதவ் டூ-டவுனிலும் கிட்டத்தட்ட எல்லாப் போட்டிகளிலும் ஆரம்ப சரிவில் இருந்து அணியை மீட்டுள்ளனர். " விராட்கோலி அல்லது சூர்யகுமார், கடைசி ஓவர் வரை கிரீஸில் இருந்ததுதான் இந்தியாவுக்கு சாதகமாக இருந்த ஒரே விஷயம். இது போன்ற திறமையான வீரர்களால் இன்னிங்ஸை கட்டிநிறுத்தவும் முடியும், சிக்ஸர்களை விளாசவும்முடியும்,” என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் குறிப்பிடுகிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியும், அதே ஆட்டத்தில் விக்கெட்டின் மறுமுனையில் கோலிக்கு ஆதரவாக நின்று 40 ரன்கள் எடுத்ததன் மூலமும் ஹார்திக் பாண்டியா அணிக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த்?
தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரில், எந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யவேண்டிய பெரிய தலைவலி ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு உள்ளது. நல்ல அனுபவமும், கடந்த ஐபிஎல் போட்டியின் சிறப்பான பேட்டிங் புள்ளி விவரமும் தினேஷ் கார்த்திக்கிடம் உள்ளது. ஆனால் இந்த தொடரில் அவர் தனது முத்திரையை பதிக்க தவறிவிட்டார். இங்கிலாந்து அணியில் ஆதில் ரஷித் மற்றும் மொயின் அலி போன்ற இரண்டு சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.அவர்களுக்கு எதிராக கார்த்திக் அல்லது ரிஷப், இவர்களில் யார் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதையும் பயிற்சியாளர் டிராவிட் சிந்திக்க வேண்டும். கடந்த போட்டியில் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்தபோதிலும் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை அவர் கோட்டைவிட்டார். அரையிறுதியில் இத்தகைய அவசரத்திற்கு பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும். தினேஷ் கார்த்திக்கின் பிரச்னை என்னவென்றால், அவர் தனதுஆட்டத்தை மெதுவாக தொடங்குகிறார். இதை கருத்தில்கொண்டு பார்க்கும்போது, ரிஷப் பந்திற்கு வாய்ப்பு அதிகம். இந்த வாய்ப்பு அவரது கேரியருக்கு முக்கியமானதாக இருக்கும்.
பந்துவீச்சில் யார் மீது அழுத்தம்
பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் அணியின் ஆல்ரவுண்டரைப் பற்றி முதலில் பார்ப்போம். ஹார்திக் பாண்டியா தனது பங்கை நன்றாகவே வகித்து வருகிறார். ஆனால் இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா இல்லாதது மிக அதிகமாக உணரப்படுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே ஜடேஜாவுக்கு முழங்கால் காயம் ஏற்பட்ட காரணத்தால், அவரால் விளையாட முடியவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார். அவர் இதுவரை அவ்வளவாக எதையும் சாதிக்கவில்லை. அவர் நான்கு போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். பேட்டிங்கில் இதுவரை அவரது அதிகபட்ச ஸ்கோர் ஏழு ரன்கள் ஆகும். மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக வீசிய ஒரே ஓவரில் அவர் 21 ரன்கள் கொடுத்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 3.2 ஓவரில் 40 ரன்களை வாரி வழங்கினார். அரையிறுதியில் விளையாடும் இந்திய அணியில் அவரை சேர்ப்பதா, வேண்டாமா என்பது நிர்வாகத்தின் முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி. அடிலெய்டின் விக்கெட் சற்று மெதுவாக இருப்பதாகவும், சிறப்பான வானிலையில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அது உதவும் என்றும் பயிற்சியாளர் டிராவிட்டும், கேப்டன் ரோஹித் ஷர்மாவும்
கருதினால், சாஹலுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்.
இங்கிலாந்து அணியில் சிறப்பாக மட்டைவீசிவந்த டேவிட் மலான் முந்தைய போட்டியில் காயமடைந்தார். அரையிறுதியில் அவருக்கு பதிலாக பில் சால்ட், 3-வது இடத்தில் இறக்கப்படலாம். தொடக்க ஆட்டக்காரர் பட்லர் ஏற்கனவே ஃபார்மில் உள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சை திறமையாக விளையாடக்கூடியவர்கள். இலங்கைக்கு எதிரான போட்டியில் தங்கள் திறமையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அர்ஷ்தீப், புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி ஆகியோர் பவர்பிளே ஓவர்களிலேயே தொடக்க ஜோடியின் விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும். இதனால் அஷ்வின் மற்றும் சாஹல், மிடில் ஆர்டர் மீது சுழல்பந்து அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். "சிறப்பாக பந்துவீசும் இரண்டு அணிகளே, அரையிறுதியில் வெற்றி பெற்று முன்னேறும். ஏனெனில் இதுவரை நடந்த போட்டிகளில் எதிலுமே பெரிய ஸ்கோரை பார்க்கமுடியவில்லை,” என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக் கருதுகிறார். இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை அடிலெய்டில் ஒரு டி20 போட்டியில் கூட தோற்றதில்லை. அப்படிப்பட்ட சூழலில் இந்த அரையிறுதி பந்தயத்தின் முடிவு சுவாரசியமாக இருக்கும்.