Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை போராட்டம்: ராஜபக்ஷ வீட்டின் மீது ஏறிய மாணவர்கள், குலுங்கிய கொழும்பு - நடந்தது என்ன?

Advertiesment
Rajapaksa
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (13:22 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்கள், நேற்று, ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறியதால் சுமார் ஒருமணி நேரம் வரை அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையும், காவல்துறையினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சுமார் 10 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவர் மீது ஏறிய மாணவர்கள் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை அதன் மீது கட்டி வைத்தனர். நுழைவு வாயிலில் கறுப்புத் துணிகளைத் தொங்க விட்டதுடன், சுற்றுச் சுவர் மீது அரசுக்கும், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் எதிரான வாசகங்களை எழுதினர்.

இந்தச் சம்பவத்தின்போது, ராஜபக்ஷ குடும்பத்தினர் யாரும் அந்த இல்லத்தில் இல்லை எனக் கருதப்படுகிறது.

கொழும்பு மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் நீண்ட பேரணியாக கொழும்பு நகர வீதிகளில் வந்தனர். அவர்களில் ஒரு பிரிவினரே ராஜபக்ஷ இல்லத்தை முற்றுகையிட்டனர்.
கொழும்பு காலி முகத்திடலில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்திருக்கும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் சென்றனர்.

மாணவ, மாணவிகளின் பேரணி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டிருந்தது.

போராட்டத்துக்கும், பேரணிக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது.

முக்கியச் சாலைகள் மூடல்

காலி முகத்திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் மாணவர்களின் போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தது. காலை முதலே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் கொழும்பு நகரம் முழுவதும் முக்கியச் சாலைகளை காவல்துறையினர் மூடியிருந்தனர்.

நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ராணுவத்தினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். முக்கியமான இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 7 அடிக்கும் உயரமான தடுப்புகள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
webdunia

கண்ணீர்ப்புகைக் குண்டுகள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனம் என பல ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர். எனினும் காவல்துறையினரின் தடுப்புகளைத் தாண்டி வெவ்வேறு வழிகளில் போராட்டக்காரர்கள் காலி முகத்திடலை வந்தடைந்தனர்.

"இனப்பாகுபாடு காட்டி இனி ஏமாற்ற முடியாது"

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் இன, மத, மொழி பேதம் காட்டி பிரித்து வைத்திருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.

காலி முகத் திடலில் அமைந்திருக்கும் அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தின் வாயில்தான் இந்தப் போராட்டத்தின் மையமாக அமைந்திருக்கிறது. போராட்டம் நடந்து வருவதால் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக அதிபர் அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது.

வார நாள்களைவிட வார இறுதி நாள்களில் போராட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆயினும் ஞாயிற்றுக்கிழமையன்று பல நகரங்களில் இருந்தும் பல்கலைக்கழக மாணவர்கள் வந்ததால், இன்னும் கூடுதலாகவே போராட்டக்காரர்களின் எண்ணிக்கை இருந்தது.

"இதுவரை இலங்கையை ஆட்சி செய்தவர்கள் மக்களைப் பிரித்தார்கள். இனக் கலவரங்களைத் தூண்டி, மக்களை மோதவிட்டு ஆதாயம் பெற்றார்கள்" என போராட்டத்தில் ஈடுபட்ட செபஸ்டியன் மோகன்ராஜ் கூறினார்.

"நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்திருப்பதால், பிள்ளைகளைப் படிக்க வைக்கவும் அத்தியாவசியப் பொருள்களை வாங்கவும் முடியாமல் மக்கள் துயரப்படுகிறார்கள்" என்று மலையகப் பகுதியில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்த மற்றொரு போராட்டக்காரர் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த பல வாரங்களாக விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், கடன்களைச் செலுத்த முடியாது என அரசு அறிவித்திருக்கிறது. பெட்ரோல், எரிவாயு மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

அரசும், அதிபரும் பதவி விலக வேண்டும் என்ற போராட்டக்கார்கள் மற்றும் எதிர்கட்சிகளின் கோரிக்கையை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்கவில்லை.

அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் "நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேர் மீதும் நம்பிக்கையில்லை" என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் பிபிசி தமிழிடம் கூறினார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தம் அடிச்சே தீருவேன்.. நடுவானில் ரகளை செய்த பயணி! - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!