Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமித்ஷா புதுச்சேரி வருகை: அரசியல் கட்சி நிர்வாகிகள், பலூன் விற்பனையாளர் கைது - சிலிண்டர், பலூன் பறிமுதல்

BBC
, ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (13:30 IST)
புதுச்சேரிக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வந்துள்ளார். புதுச்சேரியில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித்ஷா பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடக்கும் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவிலும் அமித்ஷா கலந்துகொள்கிறார்.

என்னென்ன திட்டங்கள்?

மேலும் புதுவை பல்கலைக்கழகத்தில் ரூ.48 கோடி செலவில் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று கிழக்கு கடற்கரைச் சாலையில் ரூ.70 கோடியில் புதிய பேருந்து நிலையம், குமரகுரு பள்ளத்தில் ரூ.45 கோடி செலவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.30 கோடியில் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆகிய கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள போலீசாருக்கு பணி ஆணைகளையும் வழங்குகிறார்.

வருகைக்கு எதிர்ப்பு - கைது

இதனிடையே அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை புதுச்சேரியின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தின.

முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி காளிதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீதர், இந்தியத் தேசிய இளைஞர் முன்னணி இயக்கத்தின் தலைவர் கலைபிரியன், புதுச்சேரி சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் ஜெபின் உள்ளிட்டோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி - தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் 1000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

"புதுவைக்கு ஒன்றும் செய்யவில்லை"

கைது செய்யப்பட்ட புதுச்சேரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீதர் பேசுகையில், "புதுச்சேரியை ஆளும் பாஜக கூட்டணி ஆட்சி தொடர்ந்து வஞ்சிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு இதுவரை எந்தவொரு திட்டத்தையும் புதுச்சேரி மக்களுக்குக் கொடுக்கவில்லை. இதனை எதிர்க்கும் விதமாக காவல் துறை அனுமதி பெற்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் இன்று அதிகாலை சுமார் 6 மணிக்கு காவல் துறையினர் என்னை வீட்டிலிருந்து கைது செய்தனர். மேலும் காலை நடைப்பயிற்சி சென்ற இந்திய தேசிய இளைஞர் முன்னணி இயக்கத்தின் தலைவர் கலைபிரியன், புதுச்சேரி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் ஜெபின் ஆகியோரை மைதானத்தில் கைது செய்து புதுச்சேரி தி.நகர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம். மேலும் எங்களது போராட்டம் தொடரும்," என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

பலூன், சிலிண்டர் பறிமுதல்

"பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நலன் கருதி இவர்களைக் கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டத்திற்காக புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள கருப்பு பலூன் விற்பனையாளரையும் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு பொட்டலம் பலூன் மற்றும் இரண்டு சிலிண்டர்களை பறிமுதல் செய்துள்ளோம்," என டி.நகர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா உருவ பொம்மையை அவமதிக்க முயன்றோர் கைது

புதுச்சேரி தந்தை பெரியார் சிலை அருகே இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை செருப்பால் அடித்து எரிக்க முயன்ற சமூக அமைப்பினரை‌ காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!