Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை முதல் முறையாக கடன் கட்ட முடியாத நிலைக்கு சென்றது

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (13:46 IST)
மோசமான பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும் இலங்கை, வரலாற்றில் முதல் முறையாக தான் கட்டவேண்டிய கடனுக்கான வட்டித் தவணையை கட்டத் தவறியுள்ளது.

78 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கை செலுத்தவேண்டிய கடன் வட்டித் தவணையை செலுத்துவதற்கான 1 மாத சலுகைக் காலமும் முடிந்த நிலையில், புதன்கிழமை தவணை தவறியுள்ளது இலங்கை.

உலகின் இரண்டு பெரிய கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இலங்கை தவணை தவறியதாக அறிவித்தன. கடனாளர்களுக்கு முழு தவணையையோ அல்லது ஒரு பகுதி தவணையையோ ஒரு நாடு செலுத்த முடியாதபோது தவணை தவறியதாக பொருள்.

இப்படி நடக்கும்போது முதலீட்டாளர்கள் மத்தியில் நாடு செல்வாக்கை இழக்கும். இதன் மூலம் சர்வதேச கடன் சந்தையில் கடன் வாங்குவது கடினமாகும். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், பணத்தின் மீதும் உள்ள நம்பிக்கை மேலும் பலவீனமடையும்.

கடன் கட்டத் தவறிய நிலையில் இலங்கை இருக்கிறதா என்று கேட்டபோது, மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க இப்படி பதில் அளித்தார்: "எங்கள் நிலை தெளிவாக உள்ளது. கடனை மறு கட்டமைப்பு செய்து தரும் வரை எங்களால் தவணை கட்டமுடியாது. இதை நாங்கள் 'முன்கூட்டிய தவணை தவறிய நிலை (pre-emptive default)' என்கிறோம். இந்த சொற்களுக்கு நுட்பமான வரைவு இலக்கணங்கள் இருக்கலாம். அவர்கள் தரப்பில் இதனை தவணை தவறிய நிலை என்று கூறலாம்".

5 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கான கடனை மறு கட்டமைப்பு செய்யவேண்டும் என்று வெளிநாட்டு கடனாளர்களிடம் கோருகிறது இலங்கை. இது கடனை கட்டுவதை எளிதாக்கும் என்று கருதுகிறது அந்நாடு.

கொரோனா பெருந்தொற்று, எரிபொருள் விலை உயர்வு, ஜனரஞ்சக அரசியலுக்காக செய்யப்பட்ட வரி குறைப்புகள் ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து கவலைக்கிடமாக நீடித்ததாலும், பணவீக்கம் கடுமையாக அதிகரித்ததாலும் மருந்து, எரிபொருள், பிற அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனால் மக்கள் போராட்டத்துக்காக வீதிக்கு வரத் தொடங்கியதால் இந்த பொருளியல் பிரச்னை அரசியல் பிரச்னையாகவும் ஆனது. போராட்டக்காரர்களை அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தாக்கியபோது போராட்டக் களம் வன்முறைக் களமாகவும் மாறியது.

இந்நிலையில், புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடனுதவிக்காக இலங்கை ஏற்கெனவே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கடன்களை மறுகட்டமைப்பு செய்யவும் அந்நாடு கடனாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

ஒரு கடன் திட்டத்துக்கான தற்போதைய பேச்சுவார்த்தை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை முடிவடையும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை கூறியிருந்தார்.

400 கோடி டாலர் அளவுக்கு தங்களுக்கு இந்த ஆண்டுகடன் தேவைப்படும் என்று இலங்கை அரசாங்கம் முன்னதாக கூறியிருந்தது.

ஏற்கெனவே கடுமையாக உள்ள பணவீக்கம் மேலும் தீவிரமாகும் என்று மத்திய வங்கி ஆளுநர் வீரசிங்க கூறியுள்ளார்.

"இலங்கையில் இப்போது பணவீக்கம் 30 சதவீதமாக உள்ளது. இது சில மாதங்களில் சுமார் 40 சதவீதம் அளவுக்கு உயரும் வாய்ப்பு உள்ளது," என்று கூறியுள்ளார் அவர்.

சர்வதேச செலாவணி நிதியத்துடன் புதிய கடனுக்காக நாடு பேச்சு நடத்திவரும் நிலையில், இலங்கை கடன் தவணை தவறியிருப்பது அந்த நாட்டுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments