Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்றதாக 40 பேர் கைது

BBC
, வியாழன், 19 மே 2022 (14:00 IST)
இலங்கையின் கிழக்கு பகுதியிலிருந்து கடல் வழியாக வேறொரு நாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேர், இருவேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே நாளில் இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி கடற்பரப்பில் புதன்கிழமையன்று (மே 18ஆம் தேதி) நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

மட்டக்களப்பு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நீண்ட நாள் மீன்பிடி படகொன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

இதையடுத்து, கடற்படையினர் குறித்த படகை சுற்றி வளைத்து, சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட படகில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடொன்றிற்கு பயணிக்க முயற்சித்தவர்கள் இருந்துள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறுகிறது.

ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் இரண்டு பேரும், 12 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 17 ஆண்களும், பெண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி கடற்பரப்பில் நடத்தப்பட்ட மற்றுமொரு சுற்றி வளைப்பில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

இந்த சுற்றி வளைப்பில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் இருவரும், 20 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட 17 ஆண்களும், 4 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஆள் கடத்தல் குற்றச்சாட்டில் 4 பேரும் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேரும் என மொத்தமாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் - ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் எதிர்வரும் காலத்தில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று (19) அறிவித்தார்.

இதன்படி, மக்களுக்கு நாளாந்தம் உணவை பெற்றுக்கொள்வதற்கு கடும் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

உலகம் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கவுள்ளதாகவும், அதற்கு முகம் கொடுக்க தாம் தயாராகி வருவதாகவும் அமெரிக்க நிதி அமைச்சரை மேற்கோள்காட்டி ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டார்.

இவ்வாறு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நாடுகளில் இலங்கையும் உள்ளதாக அவர் சபையில் குறிப்பிட்டார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவு கிடைக்காமல் போவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

''எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம். அதற்கான நகர வேலைத்திட்டம் இருக்க வேண்டும். கிராமிய வேலைத்திட்டம் இருக்க வேண்டும். அது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகிறது. எதிர்வரும் போகத்திற்கு தேவையான உரத்தை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எமக்கு டாலர் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் விவசாய போகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். விவசாய இயந்திரங்களுக்கு டீசலை பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கிறோம். எனினும், பெரும் போகத்திற்கு முழுமையாகவே உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையான காலப் பகுதி தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது", என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

''சிலருக்கு மாதாந்தம் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள 40,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை செல்கின்றது. மிகவும் சிரமமான நிலைமை. வாழ முடியாத நிலைமை. குறிப்பாக நாளாந்தம் உழைப்போர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாம் அனைவரும் அறிவோம். இந்த விடயங்கள் தொடர்பிலேயே எமது தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது" என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த 10 மாவட்டங்களில் கனமழை... மக்களே உஷார்!