Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிருபர்கள் - பிபிசி நேர்காணலில் பேசியது என்ன? ,

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (23:48 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இரண்டு ஊடகவியலாளர்கள்
 
கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இரண்டு செய்தியாளர்கள், பிபிசியுடனான நேர்காணலின்போது, தங்களுக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தனர்.
 
டாக்கி தர்யாபி, நீமத் நக்தி ஆகிய அந்த இரு செய்தியாளர்களும் கடந்த வாரம் காபூலில் பெண்களின் ஆர்ப்பாட்டத்தைச் செய்தியாக்கியதற்காகவே தங்களை தாலிபன்கள் பிடித்துச் சென்று காவலில் வைத்து தாக்கியதாக தெரிவித்தனர்.
 
'Etilaatroz' என்ற புலனாய்வு இதழுக்காக பணிபுரியும் இவர்களின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவர்களது உடல்களில் காயங்கள் இருந்தன.
 
தாங்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு தாலிபன்கள் பலர் தங்களைக் கட்டைகளாலும் கிடைத்தவற்றைக் கொண்டும் அடித்துப் போட்டு, சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்ததாகவும் இருவரும் தெரிவித்தனர்.
 
எந்தவொரு பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டாஸும் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தாலிபன் தலைவரை மேற்கோள் காட்டி ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்த இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.
 
'பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழு', (Committee to protect Journalists) ,செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தாலிபன்கள் ஊடகவியலாளர்களைக் காவலில் எடுக்கலாம். ஆனால், அவர்களுக்கு எதிரான தாக்குதலைக் கைவிட வேண்டும் என்று கோரியது.
 
கத்தாரை வலுவான மத்தியஸ்த மையமாக மாற்றிய "ஸ்மார்ட் பவர்" உத்தி
ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதைத் தடுக்க தாலிபன்கள் புதிய உத்தரவு
செய்தி அறிக்கைகளை மேற்கோள் காட்டி, கடந்த இரண்டு நாட்களில் தாலிபன்களுக்கு எதிரான போராட்டங்கள் குறித்துச் செய்தி சேகரிக்கும் போது குறைந்தது 14 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்றும் சி பி ஜே கூறுகிறது.
 
பெண்களுக்கான உரிமையை தாலிபன் மறுப்பதாகக் கூறி பெண்கள் சிலர் காபூலில் கடந்த புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டம்.
 
ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்த பிறகு, தாலிபன்கள் தங்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேச்சு சுதந்திரம் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்துத் தொடர்ந்து நேர்மறையாகப் பேசி வந்தார்கள். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் முரணாகவே உள்ளது என்பது தான் நிதர்சனம்.
 
அன்று நடந்தது என்ன?
 
பிபிசியுடனான நேர்காணலில், இரு பத்திரிகையாளர்களும் தங்களுக்கு நேர்ந்த சம்பவம் மற்றும் ஆப்கானிஸ்தானில் பத்திரிகைத் துறையின் எதிர்காலம் குறித்துப் பேசினார்கள்.
 
22 வயதான டாக்கி தர்யாபி, காபூலில் கடந்த புதன்கிழமை சில பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிந்து தனது கூட்டாளியான நீமத் நக்தி உடன் அங்கு செய்தி சேகரிக்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.
 
அந்த ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். இரண்டு பத்திரிகையாளர்களும் சரியான நேரத்தில் போராட்ட இடத்திற்கு வந்ததாக கூறினர்.
 
அங்கு ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அவர்கள் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கியதும், அந்த காட்சிகளை புகைப்படமாகவும் காணொளியாகவும் பதிவு செய்ததாக டாக்கி தர்யாபி கூறினார்.
 
அந்தப் பெண்களின் கைகளில் பதாகைகள் இருந்தன, அவர்களைச் சுற்றி ஆயுதம் தாங்கிய தாலிபன்களும் இருந்தனர்.
 
ஒரு பெண்ணின் கையில் ஒரு காகித பதாகை இருந்தது, அதில், "தாலிபன்களை அங்கீகரிக்காதீர்கள். தாலிபன்கள் பெண்களின் உரிமைகளை மதிப்பதில்லை," என்று எழுதப்பட்டிருந்தது.
 
 
டாக்கி தர்யாபி, நீமத் நக்தி
 
சிறையில் என்ன நடந்தது
இந்த நேரத்தில் ஒரு தாலிபன் போராளி தன்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லத் தன் கையைப் பிடித்ததாகவும் ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அதைத் தடுத்ததாகவும் டாக்கி கூறினார்.
 
"காவல் நிலையத்தில் இருந்த ஒருவர் என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார், அங்கு வேறு சிலர் வந்து என்னை தாக்கினர்."
 
"அவர்கள் என்னை 10-12 நிமிடங்கள் அடித்தனர். பிறகு நான் மயங்கி விழுந்தேன். அவர்கள் என்னை வேறு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில குற்றவாளிகளும் இருந்தனர், அவர்களுடைய குற்றம் என்ன என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் என்னை அந்த அறையில் விட்டுவிட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு சென்று விட்டார்கள்," என்று டாக்கி தெரிவித்தார்.
 
மேலும் அவர்,, "நான் சுமார் நான்கு மணி நேரம் அங்கேயே படுத்திருந்தேன். அவர்கள் என்னை அங்கே விட்டுச் சென்ற ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, நான் கண் திறந்து பார்த்தேன். அப்போது நீமத் நக்தி அங்கு இருந்தார். எங்களால் எழுந்து நிற்க முடியவில்லை. நிற்கும் அளவுக்குக் கூட உடலில் சக்தி இல்லை." என்று கூறினார்.
 
"எங்கள் இருவரையும் இரக்கமின்றி அடித்தார்கள். போலீஸ் கத்தி, கம்பி என்று கையில் கிடைத்த எதையும் கொண்டு எங்களை அடித்தார்கள்." என்கிறார் நீமத் நக்தி.
 
"அவர்கள் எங்கள் கட்டை விரல் ரேகையை ஒரு காகிதத்தில் எடுத்துக் கொண்டனர் (தெளிவான ஒலி இல்லை.) ஆனால் அந்தக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததைப் படிக்கக் கூட முடியாத அளவுக்கு நாங்கள் காயமடைந்திருந்தோம். " என்று நீமத் நக்தி கூறுகிறார்.
 
தனக்குக் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இரண்டு வார ஓய்வு தேவை என்றும் மருத்துவர் கூறியதாக டாக்கி தர்யாபி தெரிவித்தார்.
 
தாக்கும் தாலிபன்கள்
 
தாலிபன்கள் தன்னுடன் பேச விரும்புவதாகத் தான் நினைத்ததாகவும் அவர்கள் இப்படித் தாக்குவார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் டாக்கி தர்யாபி கூறுகிறார்.
 
தங்களைத் தாக்கிய தாலிபன்களைப் பற்றி விவரித்த டாக்கி, "சிலர் மிகவும் இளமையாக இருந்தனர். சிலர் 20-22 வயதானவர்களாக இருந்திருப்பார்கள். சிலரின் வயது 40-45 ஆக இருந்தது. நான் அவர்களிடம், நாங்கள் பத்திரிகையாளர்கள் என்றும் போராட்டக்காரர்கள் இல்லை என்றும் கூறினேன். ஆனால் அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை," என்று விவரித்தார்.
 
ஒரு பத்திரிகையாளராக மக்களின் குரலைப் பிரதிபலிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், ஆப்கானிஸ்தானில் பத்திரிகைத் துறையின் எதிர்காலம் கவலைக்குரியதாக இருப்பதாக டாக்கி கூறுகிறார்.
 
"நான் என் வேலையைத் தொடர வேண்டும். நான் என் பணியைத் தொடர வேண்டும். எனக்கு என்னைப் பற்றிய கவலைகள் உள்ளன, ஆனால் நான் என் வேலையைச் செய்வேன். நான் எப்போதும் ஒரு பத்திரிகையாளராக இருப்பேன். தாலிபன்கள் பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பார்கள் என்று தோன்றுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். ஒரு நாள் எங்களால் வேலைக்குச் செல்ல முடியாமல் போகலாம்." என்று கவலை தெரிவிக்கிறார் தாகி.
 
"தாலிபன்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவர்களைப் பற்றி அதிகம் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் நான் படித்த வரை, ஆப்கானிஸ்தான் தவறான திசையில் செல்கிறது என்று நினைக்கிறேன். மக்களுக்குச் சுதந்தரம் இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் பெற்ற மதிப்புகளை இழப்போம். ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தைக் குறித்து எனக்குக் கவலை ஏற்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.
 
தாலிபன்
 
தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போது, பேச்சு சுதந்திரம் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து மிகவும் நேர்மறையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
 
எதிர்காலம் குறித்த கவலை
 
டாக்கி தர்யாபி மீது நடத்தப்பட்ட தாக்குதலால், அவரது குடும்பத்தினரும் மிகவும் கவலையில் உள்ளனர்.
 
"இந்த வேலையே வேண்டாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். தாலிபன்கள் மீண்டும் இதையே தொடர்வார்கள் என்றும் இன்னும் மோசமாக நடத்துவார்கள் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் நான் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னேன். என்ன நடந்தாலும் நான் இப்பணியைத் தொடர்வேன் என்று கூறினேன்" என்று கூறுகிறார் டாக்கி.
 
சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைதி காக்காமல் ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் டாக்கி தர்யாபி கூறுகிறார்.
 
நீமத் நக்தி, "ஆப்கானிஸ்தானில் கருத்து சுதந்திரத்திற்கு எதிர்காலத்தில் மோசமான அச்சுறுத்தல் உள்ளது. இந்த நாட்டிலோ அல்லது வெளியிலோ, நாங்கள் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் சாதாரண மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்." என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments