Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றிக் கொழுப்பில் விமான எரிபொருள் தயாரிக்க திட்டம் - 'ஆபத்து' என எச்சரிக்கும் நிபுணர்கள்

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (21:54 IST)
இறந்து போன பன்றிகள், கால்நடைகள் மற்றும் கோழியிலிருந்து கிடைக்கும் கொழுப்பைப் பயன்படுத்தி விமானங்களுக்கான பசுமை எரிபொருள் தயாரிக்கப்பட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
விலங்குகளின் கொழுப்பு ஒரு தேவையற்ற பொருளாகக் கருதப்படுகிறது. இந்தக் கொழுப்பைப் பயன்படுத்தி விமானப் போக்குவரத்துக்கான எரிபொருளைத் தயாரிக்கும்போது மிகக் குறைந்த அளவிலான கரிம வாயு மட்டுமே வெளியாகிறது.
 
விலங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்வது வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் எனக் கருதப்படும் நிலையில், விமானப் போக்குவரத்துக்கு இந்த எரிபொருள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனால் மற்ற தொழில்துறைகளுக்குத் தேவையான கொழுப்பு கிடைக்காது என்பதால் அத்துறைகளில் பனை எண்ணெய் பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்றும், இது கரிம வெளியேற்றத்தைப் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 
புதைபடிம எரிபொருட்களைப் பயன்படுத்தும் விமானங்கள் அதிக அளவு கரிம வாயுவை வெளியேற்றுவதால் அதைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விமானப் போக்குவரத்துத் துறை உள்ளது.
 
இந்நிலையில் பிரஸ்ஸல்ஸ் நகரில் 'கரிமம் இல்லா போக்குவரத்து' என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வரும் 'போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல்' சார்ந்த அமைப்பு ஒன்றின் ஆய்வில், விமானப் போக்குவரத்துத் துறை பயன்படுத்தும் எரிபொருட்களைத் தயாரிக்கும் அளவுக்கு, ஒவ்வோர் ஆண்டும் விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
"நமக்குத் தேவையான எண்ணிக்கையில் விலங்குகளோ, விலங்கு கொழுப்போ எப்போதும் கிடைக்கும் எனக் கருத முடியாது," என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த மாட் ஃபின்ச்.
 
"எனவே, விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்து அதிக அளவில் இதுபோன்ற எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் நிலை ஏற்பட்டால், தற்போது இந்த எரிபொருளைப் பயன்படுத்தி வரும் பிற துறைகள் வேறு வளங்களை நோக்கி நகரக்கூடும்.
 
இது, பாமாயில் ஒன்றையே குறிவைக்கும் நிலையை ஏற்படுத்தும். இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் பாமாயிலை சார்ந்திருக்கும் நிலைக்கு மறைமுகமாகத் தள்ளப்படும்," என்கிறார் அவர்.
 
வயதான காட்டு மரங்களை அழித்துவிட்டு புதிய மரங்களை வளர்க்கும் திட்டங்கள், காடுகள் அதிக கரிமத்தை உறிஞ்சி வைப்பதைத் தடுக்கின்றன.
 
விலங்கு கொழுப்பைப் பயன்படுத்தி எரிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்ற தகவல் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
 
விலங்கு கொழுப்பைப் பயன்படுத்தி மெழுகுவர்த்தி, சோப், வாசனைப் பொருட்களைத் தயாரிக்கும் நடைமுறை கடந்த பல நூற்றாண்டுகளாகக் காணப்படுகிறது.
 
இருப்பினும் பிரிட்டனில் கடந்த 20 ஆண்டுகளாக இதுபோல் விலங்குகள், பயன்படுத்தப்பட்ட எண்ணெய் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைப் பயன்படுத்தும் வழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
2006ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் இதுபோல் இறந்த விலங்குகளில் இருந்து பெறப்படும் எரிபொருளைப் பயன்படுத்தும் அளவு 40 மடங்கு அதிகரித்துள்ளது எனப் புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
 
பன்றிக் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள் தயாரிக்கப்படும்போது, அதைத் தற்போது பயன்படுத்தி வரும் தொழில்துறைகள், பனை விதையிலிருந்து எடுக்கப்படும் பாமாயிலை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படும்
 
பயோடீசல் என்ற வடிவில் இந்த எரிபொருள், கார், ட்ரக் வண்டிகள் போன்ற வாகனங்களை இயக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பயோடீசலில் குறைந்த அளவு கரிமம் மட்டுமே வெளியாவதால் நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தக்கூடிய எரிபொருளாகக் கருதப்படுகிறது.
 
ஆனால் தற்போது பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசுகள், இதுபோன்ற பசுமை எரிபொருளை விமானப் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்த மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.
 
இதன் காரணமாக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பெருமளவு இந்த எரிபொருளை நிரப்ப நிர்பந்திக்கப்படுகின்றன. இதற்கான புதிய விதிமுறைகளையும் இந்த அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.
 
பிரிட்டனை பொறுத்தளவில், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்த பசுமை எரிபொருள் பயன்பாட்டை பத்து சதவிகிதம் அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 6 சதவிகிதம் அதிகரிக்க முடிவெடுத்துள்ளன. இதன் காரணமாக விலங்குகளில் இருந்து கிடைக்கும் பொருள்களுக்கான சந்தையின் மீது அழுத்தம் தரப்படுகிறது.
 
பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்த நிலையை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடையே அதிக அளவு வேறுபாடுகள் இருக்கின்றன.
 
புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்தக் கூடாது என விமானப் போக்குவரத்துத் துறை நிர்பந்திக்கப்படுகிறது
 
தரம் அதிகமாக உள்ள விலங்கு கொழுப்பை பயன்படுத்தி எண்ணெய் தயாரிப்பதைக் கட்டுக்குள் வைக்க பிரிட்டன் முடிவெடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த வகை கொழுப்பைப் பயன்படுத்த அரசுகள் ஊக்கமளிக்கின்றன. இதற்காக ஊக்கத் தொகைகளும் அளிக்கப்படுகின்றன.
 
இதனால் விலைகள் அதிகரிக்கும் என்பது மட்டுமல்லாமல் பிரிட்டனில் இருந்து ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்றாலும், அதற்குப் பின்விளைவுகளும் உண்டு.
 
'போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல்' சார்ந்த அமைப்பின் கூற்றுப்படி, ஒரு விமானத்துக்குத் தேவையான அனைத்து எரிபொருளும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படும்போது, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு (5,834 கி.மீ.) ஒரு விமானம் பயணிக்க 8,800 பன்றிகளைக் கொன்று அவற்றின் கொழுப்பைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
 
பிரிட்டனில் இதுபோன்ற எரிபொருளைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் சமையல் எண்ணெய் மூலம் விமான எரிபொருள் தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, விலங்குகளின் தேவை மிகவும் குறைவாகவே இருக்கும்.
 
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2030ஆம் ஆண்டுக்குள் இதுபோன்ற பயோ எரிபொருள் 6 சதவிகிதம் அளவுக்குப் பயன்படுத்தப்படும்போது, 1.2 சதவிதிம் சின்தெடிக் எரிபொருளில் இருந்துதான் அதற்கான வளங்கள் கிடைக்கும்.
 
மீதமுள்ள 4.8 சதவிகிதம் விலங்கு கொழுப்பிலிருந்து பெறப்படும் என்றால், அட்லாண்டிக் கடலை ஒரு விமானம் கடக்க 400 பன்றிகளைக் கொல்ல வேண்டும்.
 
விமானப் போக்குவரத்துத் துறையில் இதுபோல் விலங்கு கொழுப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் எரிபொருட்களைப் பயன்படுத்தும் போது அதற்கான பொருட்களை வீட்டு விலங்குகளுக்கான உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்தான் அதிகளவில் இழப்புகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும்.
 
அத்துறையினர் தற்போது பிரிட்டனில் உள்ள 38 மில்லியன் வளர்ப்பு விலங்குகளுக்குத் தரமான உணவுகளைத் தயாரித்து விற்று வருகின்றனர்.
 
"இவை உண்மையில் மதிப்பு மிக்க பொருட்கள். அவற்றை பிற பொருட்களைக் கொண்டு நிரப்ப முடியாது. ஏற்கெனவே இவை பெரும்பாலும் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படுகின்றன," என்கிறார் வீட்டு விலங்குகளுக்கான உணவு தயாரிக்கும் தொழில் துறையைச் சேர்ந்த ஒரு சங்கத்தின் தலைமை நிர்வாகியான நிகோல் பாலி.
 
"எனவே, பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட இந்த மூலப் பொருட்களை உயிரி எரிபொருட்களைத் தயாரிக்கும் தொழிலுக்கு மாற்றினால் அது மற்றொரு பிரச்னைக்கு வழிகோலும்.
 
பின்னர் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் எங்களுக்கும் இடையில் போட்டி ஏற்படும். விமானப் போக்குவரத்து துறையிலிருந்து அதிக பணம் கொடுத்து இப்பொருட்களை வாங்கும்போது, அவர்களுடன் நாங்கள் போட்டிபோட முடியாது."
 
ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரிட்டனில் விமான எரிபொருள் தயாரிக்கப் பயன்படும் அதிக தரமுள்ள விலங்கு கொழுப்பின் அளவைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 
விலங்குகளிலிருந்து கிடைக்கும் தயாரிப்புகளை பெரிதும் நம்பித்தான் வீட்டு விலங்குகளுக்கான உணவு தயாரிக்கும் தொழில் துறை செயல்பட்டு வருகிறது
 
உண்மையைச் சொல்லப்போனால், மோசமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, இதுபோல் விலங்கு கொழுப்பு அல்லது சமையல் எண்ணெய் மூலம் விமான எரிபொருள் தயாரிப்பதைத் தடை செய்யவும், கட்டுப்பாடுகள் விதிக்கவும் பிரிட்டன் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
 
விமானப் போக்குவரத்துத் துறையில் விலங்கு கொழுப்பினால் தயாரிக்கப்படும் எரிபொருளைப் பயன்படுத்தும்போது, அந்த எரிபொருள் சாலைப் போக்குவரத்தில் இருந்து ஆகாயவழிப் போக்குவரத்துக்கு மாறும் என்பது கவலையளிக்கும் விஷயம் என உயிரி எரிபொருள் தயாரிப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
"இதுபோன்ற சமையல் எண்ணெய், விலங்கு கொழுப்புகளைப் பயன்படுத்த விமானப் போக்குவரத்துத் துறை ஊக்குவிக்கப்படும்போது அது பிற இடங்களில் இருந்து முழுமையாக வெளியேற்றப்படும்," என பிரிட்டனிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் பயோடீசல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள அர்ஜென்ட் எனெர்ஜி நிறுவனத்தைச் சேர்ந்த டிக்சன் பான்செட் கூறுகிறார்.
 
"ட்ரக் வண்டிகளின் எரிபொருளைப் பிடுங்கி விமானப் போக்குவரத்துக்கு அளிக்க விரும்புகிறார்கள். தாராளமாகச் செய்யட்டும். அரசுதான் அது குறித்து முடிவெடுக்க வேண்டும்."

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments