Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீன கொரோனா திரிபு அத்தனை ஆபத்தானதா? BF.7 என்னவெல்லாம் செய்யும்?

சீன கொரோனா திரிபு அத்தனை ஆபத்தானதா? BF.7 என்னவெல்லாம் செய்யும்?
, வியாழன், 22 டிசம்பர் 2022 (22:57 IST)
சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் நோய்க்கு காரணம் என்று கருதப்படும் ஒமிக்ரான் துணை வகை BF.7 ஆல் இந்தியாவில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
 
முதல் BF.7 தொற்று, அக்டோபர் மாதம் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இதுவரை குஜராத்தில் இருந்து இரண்டு பேரும், ஒடிஷாவில் இருந்து ஒருவரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது என்று பிடிஐ தெரிவித்தது.
 
இந்தத்துணை வகையால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் இப்போது குணமடைந்துவிட்டதாக குஜராத் சுகாதாரத் துறை தெரிவித்ததாக ஏன்என்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
நாட்டில் கோவிட் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவில்லை, ஆனால் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று புதன்கிழமை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் நடந்த சந்திப்பில், நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள திரிபுகள் தொடர்ந்து  கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
 
இந்த புதிய துணை வகை என்ன
 
வைரஸ் மாற்றமடையும் போதெல்லாம், அது ஒரு புதிய வகை (பரம்பரை) அல்லது துணை வகையை ஆரம்பித்து வைக்கிறது. BF.7 என்பது முன்பே வந்துள்ள BA.5.2.1.7 தான். இது ஒமிக்ரானின் துணை வகை BA.5-லிருந்து பிறழ்ந்து உருவானதாகும்.

 
இந்த மாதம், செல் ஹோஸ்ட் அண்ட்  மைக்ரோப் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், தன் அசல் திரிபைக்காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக எதிர்ப்புத்திறன் கொண்ட வைரஸ் இது என விவரிக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் பாதிக்கப்பட்ட அல்லது தடுப்பூசி போடப்பட்ட மனிதர்களுக்கு BF.7 ஐ அழிக்கும் திறன் மிகக் குறைவு. வுஹான் வைரஸை அழிக்கும் திறனைக்காட்டிலும் இது குறைவானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
 
இந்த துணை வகை காரணமாக சீனாவில் நெருக்கடி ஆழமடைகிறது என்று நம்பப்படுகிறது. இந்த வகையில் நோய்த்தொற்றின் திறன் மிகவும் வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த துணை வகை, ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களையோ அல்லது தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களையோ பாதிக்கலாம்.
 
 
அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த துணை வகையின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. அக்டோபரில், அமெரிக்காவின் மொத்த நோய்த்தொற்றுகளில் 5 சதவிகிதம் BF.7 ஆக உள்ளது. அதே நேரத்தில் பிரிட்டனில் இது 7.26 சதவிகிதமாக இருந்தது.

 
மேற்கத்திய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் இந்த திரிபை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், ஆனால் இந்த வகை காரணமாக இந்த நாடுகளில் மிக அதிகமாக தொற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

 
2022 ஜனவரியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று நிகழ்வுகளில் ஒமிக்ரானின் துணை வகைகளான BA.1 மற்றும் BA.2 ஆகியவை அதிகம் இருந்தன. இதற்குப் பிறகு BA.4 மற்றும் BA.5 போன்ற துணை வகைகளும் வந்தன. ஆனால் அவை ஐரோப்பிய நாடுகளில் இருந்ததைப் போல இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவில்லை.

 
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 
பீதி அடையத் தேவையில்லை என்றும் போதுமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் கோவிட் தொடர்பான தேசிய பணிக்குழுவின் தலைவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் முகவசம் அணியுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 
நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

 
கூட்டத்திற்குப் பிறகு, 'கோவிட் இன்னும் முடியவில்லை. விழிப்புடன் இருக்குமாறும். நிலைமையை கண்காணிக்குமாறும்  அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

 
திரிபுகள் மற்றும் துணை வகைகளைக்கண்டறிய மரபணு வரிசைமுறைக்காக மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்புமாறு எல்லா மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 
மறுபுறம் இன்று தனது வருடாந்திர செய்தியாளர் கூட்டத்தில் சீனாவின் கோவிட் நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

 
"சீனாவில் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் உலக சுகாதார அமைப்பு கவனம் செலுத்துகிறது. ஆனால் நிலைமையை சரியாக மதிப்பிட எங்களுக்கு கூடுதல் தகவல்கள் தேவை. இதன் மூலம் மருத்துவமனைகளின் தேவையை மதிப்பிடமுடியும்," என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ட்ரேட்ரோஸ் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் பாஜக சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...