திரைப்படங்களை விளம்பரம் செய்வதில் நாளுக்கு நாள் புதிய யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன.
தற்போது, சென்னையில் தமிழ் திரைப்படத்தின் விளம்பர முன்னோட்ட காட்சிகள் ஆட்டோக்களில் திரையிடப்படுவதுதான் அந்த புதிய யுக்தி. இந்திய நகரங்களில் முதன் முறையாக சென்னையில் இந்த சிறு திரைகள் சுமார் 500 ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ளன.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இறைவி படத்தின் முன்னோட்டம் இணையத்தை தவிர்த்து சென்னையில் பல ஆட்டோக்களிலும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.
கைப்பேசி செயலி (mobile app) போன்ற தொழில்நுட்ப உதவியுடன் இயக்கப்படும் இந்த சிறிய எல்.இ.டி. திரைகள், ஆட்டோ வாகனத்தின் இஞ்சின் இயங்க ஆரம்பித்த 10 வினாடிகளில் தானாக ஒளி மற்றும் ஒலிபரப்பை துவங்கும். ஆட்டோ இஞ்சின் நிறுத்தப்பட்ட 10 வினாடிகளில் தானாக ஒளிப்பரப்புக்களை நிறுத்திக்கொள்ளும்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இயக்கப்படும் ரேடியோ டாக்ஸி சேவைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையால் உந்தப்பட்டு இந்த திட்டம் துவங்கியது என அந்த சேவையை இந்தியாவில் முதல் முறையாக துவக்கியுள்ள மொபி நிறுவனம் கூறுகிறது.
மேலும் இதே சேவை சென்னையை தொடர்ந்து அடுத்த 3 மாதங்களில், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு போன்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இது குறித்த ஒரு காணொளி (தயாரித்து வழங்குபவர் சென்னை செய்தியாளர் ஜெயக்குமார்).