Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'கஜகஸ்தானில் கொரோனவைவிட கொடிய நிமோனியா': சீனாவின் எச்சரிக்கை உண்மையா?

Advertiesment
'கஜகஸ்தானில் கொரோனவைவிட கொடிய நிமோனியா': சீனாவின் எச்சரிக்கை உண்மையா?
, சனி, 11 ஜூலை 2020 (10:24 IST)
"அறியப்படாத நிமோனியா காய்ச்சல்" ஒன்றின் பரவலை கஜகஸ்தான் சந்தித்து வருவதாக குற்றஞ்சாட்டி சீன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைக்கு கஜகஸ்தான் அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

கஜஸ்தானில் இருக்கும் தங்களது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அங்குள்ள சீன தூதரகம், கஜகஸ்தானில் பரவி வரும் 'நிமோனியா' தொற்று கொரோனா வைரஸைவிட கொடியது என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், சீன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை "உண்மை அல்ல" என்று கஜகஸ்தானின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
கஜகஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு தளர்த்தப்பட்டிருந்த முடக்க நிலை மீண்டும் நாடுமுழுவதும்  அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
ஜூலை 10ஆம் தேதி நிலவரப்படி, கஜகஸ்தானில் 55,000 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 264 பேர் இதுவரை  உயிரிழந்துள்ளனர்.
 
கஜகஸ்தான் மற்றும் பல்வேறு மத்திய ஆசிய நாடுகளில் புதிய உச்சத்தை தொட்டு வரும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையை நிமோனியா என்று குறைத்து மதிப்பிட்டு வருவதாக அந்த நாடுகள் மீது பரவலான குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
 
இந்த நிலையில், இதுதொடர்பாக நேற்று விளக்கம் அளித்த உலக சுகாதார நிறுவனம், கஜகஸ்தானில் நிமோனியா பரவி வருவதாக கூறப்படுவதை தாங்கள் கண்காணித்து வருவதாக தெரிவித்தது.
 
"கஜகஸ்தானில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் உறுதிசெய்யப்படாத கொரோனா வைரஸ் நோய்த்தொற்றே இருக்கக் கூடும்," என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரயான் தெரிவித்துள்ளார்.
 
சீனாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது என்ன?
 
கடந்த வியாழக்கிழமை கஜகஸ்தானில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையொன்றே இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
 
"2020ஆம் ஆண்டின் முதற்பகுதியில் மட்டும் கஜகஸ்தானில் நிமோனியாவின் காரணமாக 1,772 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, ஜூன் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 628 பேர் உயிரிழந்தனர்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
கஜகஸ்தானின் அதிராவ், அக்டோப் மற்றும் ஷிம்கென்ட் ஆகிய மூன்று நகரங்களில் இந்த நோய் பரவல் ஏற்பட்டுள்ளது என்றும், இறந்தவர்களில் சீன நாட்டினர் அடங்குவதாகவும் அது கூறியது.
 
இதுதொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட கஜகஸ்தானின் சுகாதாரத்துறை அமைச்சகம், "வகைப்படுத்தப்படாத நிமோனியா" இருப்பதை ஒப்புக் கொள்வதாகவும், ஆனால் சீன தூதரகம் வழங்கிய எச்சரிக்கை "உண்மைக்கு ஒத்ததாக இல்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கஜகஸ்தானில் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் இருந்தும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படாத நிலை இருந்தால் மட்டுமே அவை நிமோனியா என்று வகைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இது உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட முடிவே என்றும் அந்த  அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இதுதொடர்பாக பிபிசி செய்தியாளர் அப்துஜலில் அப்துராசுலோவிடம் பேசிய கஜகஸ்தானை சேர்ந்த மருத்துவர்கள், தங்களது நாட்டில் அதிகரித்து வரும் நிமோனியா  பாதிப்புக்கும் கொரோனா வைரஸுக்கும் தொடர்புள்ளதாகவும், ஆனால் அது தரம் குறைந்த பரிசோதனைகள் அல்லது சரிவர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத  காரணத்தால் உறுதிப்படுத்த முடிவதில்லை என்றும் கூறினர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியுறவுத்துறைக்கும் மத்திய அரசுக்கும் கடிதங்களை பறக்க விடும் எடப்பாடியார்!!!