Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேய் பிடித்தல் என்பது உண்மையா? - மருத்துவ உலகம் சொல்வது என்ன?

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (12:21 IST)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி, தாய் உட்பட 3 பெண்கள் சிறுவனை அடித்து கொன்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேய் பிடித்தல் என்ற நிலைக்கு பல்வேறு காரணங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு மதத்திலும் வேறுபட்ட அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
 
கண்ணுக்கு புலப்படாத கொரோனா வைரஸ் பெருந்தொற்று முதல் பல்வேறு பிரச்னைகளுக்கும் அறிவியல் அடிப்படையிலான புரிதலும், சிகிச்சை முறைகளும் நடைமுறையில் உள்ள இந்த காலகட்டத்தில், பேய் பிடித்தல் என்ற நிலையை மருத்துவ உலகம் எப்படி பார்க்கிறது என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.
 
பேய் பிடித்தல் - மருத்துவ உலகின் பார்வை
'பேய் பிடித்தல்' என்ற வார்த்தையை கேள்விப்படாதவர்கள் கிட்டத்தட்ட இருக்கவே முடியாது. இந்த நிலையால் பாதிக்கப்பட்டவர்கள், மத தலங்களில் இதை குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் செயல்கள் வாயிலாக மட்டுமின்றி திரைப்படங்களிலும் இதுகுறித்த காட்சிகள் இடம்பெறுவதுண்டு.
 
பொதுவாக, இறந்த ஒருவரின் ஆவி, உயிருடன் உள்ள மற்றொருவரின் உடலில் புகுந்து அவரை ஆட்டுவிக்கும் நிகழ்வே பேய் பிடித்தல் என்று கூறப்படுகிறது.
 
அவ்வாறு பேய் பிடித்ததாக கூறப்படுபவர்கள், இயல்புக்கு மாறாக பேசுவதும், செயல்களை செய்வதும், நினைவுகளை இழந்தவாறும் காணப்படுவதாக அறியப்படுகிறது.
 
இந்த நிலையில், பேய் பிடித்தல் என்ற நிலையை மருத்துவ உலகம் எப்படி பார்க்கிறது என்று சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் ரம்யா சம்பத்திடம் கேட்டபோது, "இது முழுக்க முழுக்க மனநலம் சார்ந்த பிரச்னையாகவே மருத்துவத்துறை கருதுகிறது. ஒரு மனிதரின் உடலும் மனமும் ஒத்து செயல்படுவதே இயல்பாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு இயல்புக்கு மாறாக ஒருவர் செயல்படுவதை மருத்துவத்துறையில் ஆளுமைச் சிதைவு (Dissociation) என்கிறோம். இதையே சமூகத்தின் சில அங்கத்தினர் பேய் பிடித்தல் என்று அழைக்கிறார்கள்" என்று கூறுகிறார்.
 
பேய் பிடித்தல் - மருத்துவத்துறை முன்வைக்கும் காரணங்கள்
இரவு நேரத்தில் வெளியே சுற்றல், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு செல்லல், சமீபத்தில் அக்கம்பக்கத்தில் நேர்ந்த உயிரிழப்புகள் ஆகிய காரணங்களை சுற்றியே பெரும்பாலான நேரங்களில் ஒருவருக்கு பேய் பிடித்ததற்கான காரணம் கிராமப்புறங்களில் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், பேய் பிடித்தல் என்று கூறப்படும் நிலைக்கு ஒருவரின் ஆழ்மனதே காரணம் என்று விவரிக்கும் மருத்துவர் ரம்யா, "ஒருவர் மனரீதியாக ஏதோ ஒரு சம்பவத்தாலோ, செயலாலோ பாதிக்கப்படும்போதும் அல்லது தன் ஒருமைப்பாடு (Self-identity) வலுக்குறைந்து இருப்பவர்களுக்கும் உடலும் - மனதும் ஒரே நேர்கோட்டு பாதையில் இல்லாமல் இருக்கும்போது, இயல்புக்கு மாறான செயல்களை செய்கிறார்கள்" என்று கூறும் அவர், சில நேரங்களில் ஒரு நபரை சுற்றியுள்ளவர்கள் தங்களது நம்பிக்கைகளின் அடிப்படையில் நன்றாக உள்ள ஒருவருக்கு பேய் பிடித்துள்ளதாக கூறுவதும் உண்டு என்கிறார்.
 
முன்னதாக, ஆரணியில் ஏழு வயது சிறுவன் பேய் பிடித்ததாக அடித்து கொல்லப்பட்டதற்கும், அந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனின் தாய் உள்ளிட்ட மூன்று பெண்களும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதை போன்று காணப்படுவதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று தங்களது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கண்ணமங்களம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமார் பிபிசி தமிழிடம் கூறினார்.
 
பேய் பிடித்ததாக கூறி துன்புறுத்துவதால் ஏற்படும் பேராபத்து
பெரும்பாலும் கிராமப்புறங்களில் பேய் பிடித்ததாக கூறி ஒருவரை மதரீதியிலான தலத்துக்கு அழைத்துச் செல்லும்போது அங்கிருப்பவர்கள் பாதிக்கப்பட்டவரை குச்சியால் அடிப்பது உள்ளிட்ட செயல்களை மேற்கொள்வது வழக்கமானது.
 
"மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவரை இவ்வாறாக துன்புறுத்துவது, தனி அறையில் அடைப்பது, ஒதுக்குவது உள்ளிட்ட செயல்களால் அந்த நபர் மேலதிக பாதிப்புகளுக்கு உள்ளாகி பிரச்னையின் வீரியம் கண்டிப்பாக அதிகரிக்கும்" என்று எச்சரிக்கிறார் மருத்துவர் ரம்யா.
 
எனினும், சில நேரங்களில் இதுபோன்ற மதரீதியிலான தலங்களுக்கு அழைத்துச்செல்லப்படுவர்கள் குணமாகி திரும்ப செல்லும் சம்பவங்களும் இருக்கிறதே என்று அவரிடம் கேட்டபோது, "ஒருவர் தன்னையே மறந்து மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவருக்கு பேய் பிடித்திருப்பதாக சுற்றியுள்ளவர்கள் நம்ப வைத்து, இன்னொரு நபரை வைத்து குச்சியால் அடிப்பது உள்ளிட்ட வழிகளில் துன்புறுத்தி பேய் வெளியேறிவிட்டதாக அடிக்கடி கூறும்போது, அந்த நபர் தற்காலிகமாக மனநல பாதிப்பில் இருந்து விடுபடுவதுண்டுதான். ஆனால், இவ்வாறான வழிகளின் மூலம் கிடைக்கும் நிவாரணம் மிகவும் குறைந்த காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்" என்று அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
 
"பெரும்பாலான நேரங்களில் பதின்ம வயதினர் இதுபோன்ற நிலைக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை கண்டறிந்து தகுந்த மருத்துவத்தை அளிக்க தவறினால் அது நீண்டகாலத்தில் பேராபத்தை ஏற்படுத்துவதோடு, எதிர்காலத்தில் முற்றிலும் குணப்படுத்த முடியாத பிரச்னையாக கூட உருவெடுக்கலாம்."
 
மருத்துவத்துறை முன்வைக்கும் சிகிச்சை என்ன?
 
ஒருவர் திடீரென தனக்குள்ளாகவே பேச ஆரம்பித்தல், சம்பந்தமற்ற பேச்சை/ செயலை மேற்கொள்ளல், இயல்புக்கு மாறாக அமைதி காத்தல், ஆக்ரோஷமாக இருத்தல் போன்றவை பொதுவாக பேய் பிடித்ததாக கூறப்படும் நபருக்கு இருக்கும் நிலைகளாக அறியப்படுகிறது.
 
இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை கொண்ட ஒருவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் எந்தவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று மனநல மருத்துவர் ரம்யாவிடம் கேட்டபோது, "ஒவ்வொரு அறிகுறிகளுக்கு பின்னாலும் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். எனவே, பாதிக்கப்பட்டவருக்கு மன அழுத்தத்தை குறைக்கும்/ கட்டுப்படுத்தும் மாத்திரைகளை கொடுத்து, படிப்படியாக அவரை மனம் விட்டு பேச செய்யும்போது பிரச்னைக்கான காரணத்தை தெரிந்துகொள்ள முடியும். சிலருக்கு மேலதிகமாக மருத்துவ பரிசோதனைகளையும் செய்ய வேண்டியிருக்கும். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனை மற்றும் மாத்திரைகளை ஒருங்கே அளிக்கும்போது விரைவில் குணப்படுத்த முடியும். எனினும், சிலவகை நோய்களை போன்று, பூரண நலம் என்பது அனைத்து மனநல பிரச்னைகளுக்கும் சாத்தியமானது அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்" என்று விவரிக்கிறார்.
 
மக்களின் புரிதல் அவசியம்
 
சென்னை போன்ற பெருநகரங்களில் மனநலம் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ள நிலையில், அதே பிரச்னைகளை கொண்டவர்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கிராமப்புறங்களில் பேய் பிடித்ததாக துன்புறுத்தப்படும் சம்பவங்கள் இன்னும் தொடர்வதாக மருத்துவர் ரம்யா கவலை தெரிவிக்கிறார்.
 
"ஒருவரது வீட்டில் சர்க்கரை நோயாலோ, இருதய பிரச்னையாலோ ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு எப்படி உதவ முன்வருகிறோமோ அதே போன்று மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க குடும்பத்தினரும், சமூகமும் முன்வர வேண்டும். இதுவே மாற்றத்தின் முதல்படியாக இருக்க முடியும்" என்று கூறும் அவர், சமீபத்திய ஆண்டுகளாக சென்னையில் மனநல ஆலோசனை பெறுவது தொடர்பில் மக்களுக்கு இருந்துவந்த தயக்கம் நீங்கி வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் போக்கு அதிகரித்துள்ளதாக கூறுகிறார்.
 
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பேய் பிடித்ததாக கூறி தவறான வழிமுறைகளை கையாண்டு, பின்பு பல ஆண்டுகளுக்கு பிறகு பிரச்னை முற்றிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்து வந்தால், குணப்படுத்துவதற்கான வாய்ப்பு அருகிவிடும் என்று எச்சரிக்கும் மருத்துவர் ரம்யா, தமிழ்நாடு அரசு இதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிடுகிறார்.
 
"தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற மனநல மருத்துவர்கள்/ ஆலோசகர்களின் எண்ணிக்கை மாநிலத்தின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, துரிதமாக செயல்பட்டு, மக்கள் தொகை பரவலுக்கு ஏற்றவாறு மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கிராமப்புற பகுதிகளில் மனநலம் என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை ஒன்று என்றும் அதை தகுந்த சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்திவிடலாம் என்பதையும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments