Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா தடுப்பூசியால் வயிற்றில் ரத்தம் உறையுமா? இரு சம்பவங்கள் எழுப்பும் கேள்வியும் பதிலும்

Advertiesment
கொரோனா தடுப்பூசியால் வயிற்றில் ரத்தம் உறையுமா? இரு சம்பவங்கள் எழுப்பும் கேள்வியும் பதிலும்
, திங்கள், 21 ஜூன் 2021 (11:55 IST)
தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தொற்று தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், `தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளை அதிகாரிகள் முறையாகக் கண்காணிப்பதில்லை' என சில மருத்துவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். தடுப்பூசியால் பாதிப்புகள் வருமா?
 
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான காசிநாத பாரதிக்கு நேர்ந்த சம்பவம் இது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக சொந்த ஊரான வேதாரண்யத்தில் உள்ள அரசு தடுப்பூசி மையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர், தனியார் மருத்துவமனையின் ஐ.சி.யு வார்டில் சிகிச்சை பெறும் அளவுக்கு உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.
 
தனி நபர் முக்கியமல்ல!
webdunia
"கொரோனா தொற்றைத் தடுப்பதில் தடுப்பூசியின் பங்கு மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகமாகாமல் இருக்க, ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. `ஒரு தனி மனிதரைவிடவும் 1 லட்சம் பேரின் உயிர்தான் முக்கியம்' என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தற்போது தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த ஆர்வம் குறையக்கூடாது. அதேநேரம், இதில் உள்ள சில சிக்கல்களை தடுப்பூசி நிறுவனங்கள் களைய வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறேன்" என்கிறார் காசிநாத பாரதி.
 
தொடர்ந்து, தனக்கு நேர்ந்த வேதனையான சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார். "எனது சொந்த ஊரில் கடந்த ஏப்ரல் 17 அன்று கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். 18 ஆம் தேதி முழுவதும் காய்ச்சலால் அவதிப்பட்டேன். அதேநேரம், உடல்வலியும் அதிகமானது. 19 ஆம் தேதி நன்றாக இருந்தேன். அந்த நாளில் சில துக்க காரியங்களுக்கும் சென்றேன். அதற்கு அடுத்த நாள் கழிப்பறை செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், குளித்து முடித்துவிட்டு வந்ததும் அதிகப்படியாக வியர்க்கத் தொடங்கியது. `மின் விசிறி வேகமாக ஓடாததால் தான் பிரச்னை' என நினைத்தேன். அன்று வயிற்றுப் பிரச்னை ஏற்பட்டதால், அல்சர் மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன்.
 
கோவளத்தில் நேர்ந்த துயரம்
webdunia
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் கோவளத்தில் உள்ள நண்பரின் விடுதிக்குச் சென்று விட்டேன். அன்று இரவு நன்றாக சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் வயிறு வலிக்கத் தொடங்கியது. லேசான வலியாக இருந்ததால் பொருட்படுத்தவில்லை. விடியற்காலையில் வயிற்று வலி அதிகமாகிவிட்டது.
 
அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கிருந்த மருத்துவர், `சரக்கு எதாவது அடிச்சீங்களா?' எனக் கேட்டார். `எனக்கு அந்தப் பழக்கம் இல்லை' என்றேன். அவர் உடனே வலி நிவாரணி ஊசி போட்டு அனுப்பி வைத்தார். மதியம் வரையில் ஒரு பிரச்னையும் இல்லை. இரவு மறுபடியும் வலி ஆரம்பித்துவிட்டது. தாங்க முடியாத வலி ஏற்பட்டதால், சொந்த ஊரான நாகைக்குச் செல்ல முடிவெடுத்தேன்.
 
காரில் வரும்போது வலி நிவாரண மாத்திரைகளை எடுத்ததால் வலி தெரியவில்லை. வீட்டுக்கு வந்ததும் தாங்க முடியாத வலி ஏற்பட்டதால், அருகில் இருந்த பொது மருத்துவரை அணுகினேன். அவரும் வலி நிவாரண மருந்தை சலைன் பாட்டிலுடன் கலந்து செலுத்தினார். அப்போது அந்த மருத்துவர், `எவ்வளவு வலியாக இருந்தாலும் வலி நிவாரண மருந்துக்கு சரியாகி விடும். இது வேறு ஏதோ பிரச்னை போல உள்ளது. கல்லீரல் அல்லது குடல் வால்வு பிரச்னையாக இருக்கலாம். சி.டி ஸ்கேன் எடுத்து விடுங்கள்' என்றார். அப்போதும் எனக்குத் தடுப்பூசியின் மீது சந்தேகம் வரவில்லை. அங்கிருந்து திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, `இரவு சி.டி ஸ்கேன் எடுக்க முடியாது, காலையில் வாருங்கள்' என்றனர்.
 
வயிற்றில் ரத்தம் உறைந்தது ஏன்?
webdunia
காலையில் வயிற்று வலி அதிகமாக இருந்தது. சி.டி ஸ்கேனை மருத்துவரிடம் காட்டியபோது, `இது த்ராம்போசிசால் ஏற்படுகிற இஸ்க்கீமியா (thrombosis - Ischemia )' என்றார். அதாவது, `ரத்தம் உறைவது எனப் பொருள்' என்று கூறினார். நானும், `சரி மாத்திரை கொடுங்கள்' என்றேன்.
 
அவரோ, `விளையாடுகிறீர்களா.. ரத்தம் உறைந்து கொண்டே செல்கிறது. இதுவே இதயமாக இருந்திருந்தால் உங்கள் உயிர் போயிருக்கும். வயிறு என்பதால் தப்பித்து விட்டீர்கள் என்று கூறியவர், உடனடியாக திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சேரும்படி அறிவுறுத்தினார்.
 
தஞ்சாவூரிலும் திருவாரூரிலும் வாஸ்குலர் சர்ஜன் யாரும் இல்லை' என்றார். நானோ, `இப்போது ஓட்டலில் சாப்பிட வசதியில்லை. அதனால் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனை செல்கிறேன்' என்றேன். அவரோ, `நிலைமையை புரிந்து கொள்ளுங்கள், உடனே மருத்துவமனை செல்லுங்கள்' என்றார். எனக்கு அப்போதும் அதன் தீவிரம் புரியவில்லை" என்று எச்சரித்தார் என்று கூறினார் காசிநாத பாரதி.
 
தொடர்ந்து பேசிய பாரதி, "என் அக்கா மகன் காரைக்காலில் மருத்துவராக இருப்பதால் அவருக்கு மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை அனுப்பினேன். அவர் படித்துவிட்டு, `எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்குப் போய்விடுங்கள்' என்றார். நானும் காரில் பயணித்து திருச்சியில் உள்ள அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கிருந்த மருத்துவர்களும், `வருகிற வழியிலேயே ரத்தம் உறைந்து மரணம் ஏற்பட்டிருக்கக்கூடும்' என அதிர்ச்சி கொடுத்தனர். பிறகு என்னிடம் பேசிய அறுவை சிகிச்சை மருத்துவர், `இதயத்துக்கு ஆஞ்சியோ செய்வது போல வயிற்றுக்கும் செய்ய வேண்டும்' என்றார். மேலும், `இது மிகவும் சிக்கலான பிரச்னை' என்றார்.
webdunia
ஒரு ஊசியின் விலை 17,000..
இதன்பிறகு, கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த நேரத்தில் அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பினர்,
 
`உங்களுக்கு மதுப்பழக்கமோ புகைப்பழக்கமோ இருக்கிறதா?' என்றனர். நான் மறுத்துவிட்டு, `கடந்த 4 நாள்களுக்கு முன்னர் தடுப்பூசி போட்டேன்' என்றேன். `அதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே?' என்றபடி, `வயது 42 என்பதால் சர்ஜரி செய்தால் சிக்கல் வரும், ELIQUIS என்ற மருந்தை எடுத்துக் கொண்டால் ரத்தம் உறையாமல் காக்கலாம்' என்றனர்.
 
இந்த மருந்தின் பக்க விளைவுகள் பற்றி தெரிய வந்தாலும், சில மருத்துவர்களிடம் ஆலோசித்த பிறகு, அந்த மருந்தை எடுத்துக் கொண்டேன்.
 
அதன்பின்னர், ஐ.சி.யூ கொண்டு சென்றனர். அங்கு, `இதயத்தில் எதாவது அடைப்பு ஏற்படுகிறதா?' எனப் பார்த்துக் கொண்டே இருந்தனர். அன்று இரவு முழுவதும் ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டே இருந்தது. மறுநாள் இரவு நார்மல் வார்டுக்கு மாற்றினார்கள். `24 மணி நேரத்துக்குள் மூக்கு அல்லது மூளை வழியாக ரத்தம் கசியலாம்' என்றார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. ELIQUIS மருந்தை 12 மணிநேரத்துக்கு ஒருமுறை எடுக்க வேண்டும். இந்த மருந்தை எடுத்துக் கொண்டதால் தட்டணுக்களின் எண்ணிக்கை 2 லட்சமாக இருக்க வேண்டியது 53 ஆயிரமாக குறைந்து விட்டது. உடனே இந்த மாத்திரையை நிறுத்தி விட்டு, `இம்யூனோ குளோபின்' என்ற ஊசியை ட்ரிப்ஸ் வழியாக எட்டு முறை செலுத்தினர். இந்த ஊசியின் விலை தலா 17,000 ரூபாய்.
 
ஆய்வு முடிவு சொன்னது என்ன?
 
இதன் காரணமாக, மறுநாள் தட்டணுக்களின் எண்ணிக்கை 83,000 ஆக உயர்ந்தது. இந்த நேரத்தில் எனக்கொரு சந்தேகம் வந்தது. `இம்யூனோ குளோபினை போட்டுவிட்டு தட்டணுக்களை உயர்த்துகின்றனர். மறுநாள் ELIQUIS மருந்தை மீண்டும் எடுத்தால் மறுபடியும் 1,40,000 ரூபாய்க்கு 8 இம்யூனோ குளோபின் ஊசி போட வேண்டுமா?' எனக் கேள்வி எழுப்பினேன். `அப்படியிருக்காது' என்ற பதில் கிடைத்ததே தவிர உறுதியான பதில் வரவில்லை. மறுநாள் தட்டணுக்களின் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்ந்தது. வாக்கு எண்ணிக்கை நாளன்றும் மருத்துவமனையில்தான் இருந்தேன். இதுவரையில் 5 லட்ச ரூபாய் வரையில் செலவாகி விட்டது" என்கிறார்.
 
"நேற்று (8 ஆம் தேதி) மருத்துவரை சந்திக்கச் சென்றேன். இப்போது 1,40,000 என்ற அளவில் தட்டணுக்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது தெரியவந்தது. ஸ்டீராய்டு மருந்துகளையும் எடுத்து வந்தேன். கூடவே, இன்று வரையில் ELIQUIS மருந்தை எடுத்து வருகிறேன். இன்னும் 6 மாதத்துக்கு இந்த மருந்தை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். பப்பாளி, சாத்துக்குடி பழங்களை சாப்பிடுமாறும் கூறியுள்ளனர்.
 
கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் மட்டுமே எடுத்துக் கொண்டேன். இதன் காரணமாகத்தான் எனக்கு ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டது. தடுப்பூசியால் 1.5 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அது ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
 
எனக்கு சர்க்கரை குறைபாடு உள்ளது. `அது காரணமாக இருக்குமோ?' என மருத்துவர்களிடம் கேட்டேன். `அதனால் ரத்தம் உறைய வாய்ப்பில்லை' என்கிறார்கள். `பிறகு எதனால் இப்படி ஏற்பட்டது?' என்பதை அறிய மருத்துவமனை மூலமாகவே தனியார் ஆய்வகத்துக்கு உடல் மாதிரிகளை அனுப்பியுள்ளேன்" என்கிறார்.
 
சம்பவம் : 2
செங்கல்பட்டு மாவட்டம், ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி யாதவ் (60). இவர் கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) ஃபோர்மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி சனிக்கிழமை இரவு `திடீர்' உடல்நலக் கோளாறால் இறந்துவிட்டார். இதற்கு முதல்நாள் அவர் அணுசக்தித் துறை மருத்துவமனையில் (DAE hospital) கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
 
``வெள்ளிக்கிழமை (16 ஆம் தேதி) மதியம் தடுப்பூசி போட்டுக் கொண்டு வந்தார். மறுநாள் இரவு ஒன்பதரை மணிக்கு என்கிட்ட, `மூச்சுடைக்கிறது, காற்று போதவில்லை' என்று சொன்னார். நான் உடனே ஃபேன், ஏ.சி எல்லாவற்றையும் போட்டேன். அப்படியும் அவருக்கு ரொம்ப முடியவில்லை. உடனே எங்கள் மருமகன், `வாங்க டி.ஏ.இ மருத்துவமனைக்குப் போகலாம்' என்று கூறி அழைத்தார்.
 
அப்போது அவர், ` எனக்கு பாத்ரூம் வருது' என்று சொல்லிட்டு உள்ளே போனார். அங்க அவருக்கு வேர்வை அதிகமாக வர ஆரம்பித்தது. அப்படியே வந்து ஹாலில் உட்கார்ந்தார். அப்பொழுதே அவருக்கு உடம்பு தளர்ந்துவிட்டது.
 
வீட்டில் இருந்து டி.ஏ.இ மருத்துவமனை 10 நிமிட தூரத்தில்தான் இருக்கிறது. அங்கே போனதும் அவர் இறந்துவிட்டார் என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கு சர்க்கரை, ரத்தக் கொதிப்பு பிரச்னை எல்லாம் இருக்கிறது. அப்படிப்பட்டவருக்கு எப்படி ஊசி போடலாம்? என்னால் அந்த சம்பவத்தை நினைத்தாலே பேச முடியவில்லை" எனப் பதற்றப்பட்டார், துளசி யாதவின் மனைவி நாகம்மாள்.
 
வராத ஆம்புலன்ஸ்
 
இதனைத் தொடர்ந்து, பிபிசி தமிழிடம் பேசிய துளசி யாதவின் மருமகன் விஜய ராகவன், ``அவருக்கு என்ன தடுப்பூசி போட்டார்கள் என்று தெரியவில்லை. அன்று மாலை காய்ச்சல் இருந்தது. மறுநாள் நன்றாக இருந்தார். சனிக்கிழமை இரவு மூச்சுப் பிரச்னை ஏற்பட்டது. அவர் சாப்பிடாததால் ரொட்டி வாங்கிக் கொடுத்தேன். அவர் நிலைமையை பார்த்து விட்டு, மருத்துவமனை ஆம்புலன்சுக்கு போன் செய்தேன். நானும் அணுமின் நிலையத்தில்தான் டெக்னீசியனாக வேலை செய்கிறேன். ஆனால், `டவுன்ஷிப் கேட்டை தாண்டி ஆம்புலன்ஸ் வராது' என்று சொல்லி விட்டார்கள். அதன்பிறகு உள்ளூரில் ஆட்டோ ஏற்பாடு செய்தேன். அதற்குள் நாக்கை கடித்தபடி மாமனார் சோபாவில் உட்கார்ந்திருந்தார். மருத்துவமனையில், அவர் இறந்து விட்டதாக சொல்லி விட்டார்கள்" என்கிறார்.
 
`தடுப்பூசியால் பிரச்னை என்றால், பிரேத பரிசோதனை செய்திருக்கலாமே?' என்றோம்.
 
``நாங்க அவரோட மரணம் பத்தி விசாரித்துக்கொண்டு இருந்தபோதே, போலீசார், எஸ்.ஐ, வந்து விட்டார்கள். அவர்கள் எங்களிடம், `போஸ்ட்மார்ட்டம் செய்யப் போகிறீர்களா?' என்று கேட்டார்கள். அப்படியே செய்தாலும் அரசுக்கு சாதகமாகத்தான் அறிக்கை வரும் என்று நினைத்ததால் மறுத்துவிட்டோம். டாக்டர்களும், வீட்டில் இருந்து வரும்போதே அவர் இறந்துட்டதாக எழுதிக் கொடுத்தார்கள். தடுப்பூசியால்தான் அவர் இறந்தார். அவரே விருப்பப்பட்டுதான் ஊசி போட்டுக் கொண்டார். இப்படி நடக்கும் என்று நாங்கள் யாரும் நினைக்கவில்லை. ஊசி போட்ட மருத்துவமனை நிர்வாகமும் இதைப் பற்றி எங்களிடம் எதையும் கேட்கவில்லை" என்கிறார்.
 
தடுப்பூசியால் ஏற்பட்ட மரணமா?
 
துளசி யாதவின் மரணம் தொடர்பாக பிபிசி தமிழிடம் சில தகவல்களை அவர் விவரித்தார், கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி. இவர் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் நிர்வாகியாகவும் இருக்கிறார்.
 
``அணுசக்தி நிர்வாகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் துளசி யாதவ். தடுப்பூசி போட்ட மறுநாள் இரவு இறந்துவிட்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு போராட்டம் நடத்தினர். அணுசக்தி மருத்துவமனை வளாகத்தில் இருந்த காவலர்கள், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து விட்டனர்.
 
துளசி யாதவின் உடலை டி.ஏ.இ மருத்துவமனை நிர்வாகம் ஏன் பிரேதப் பரிசோதனை செய்யவில்லை? இது இயற்கை மரணமா.. தடுப்பூசியால் ஏற்பட்ட மரணமா என்பதைக் கண்டறியும் முக்கிய வாய்ப்பாக பிரேதப் பரிசோதனை உள்ளது. அதனைச் செய்யத் தவறிவிட்டனர்," என்கிறார்.
 
தொடர்ந்து பேசியவர், ``தடுப்பூசி போடப்பட்டு 48 மணிநேரத்தில் இறப்பு ஏற்பட்டால், Adverse events following immunization (AEFI) விதிகளின்படி, பிரேதப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். இது இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டலின்படி இயங்கிக் கொண்டிருக்கிறது. நடிகர் விவேக் மரணத்தில் பிரேதப் பரிசோதனை செய்யாதது தொடர்பாக கேள்வி எழுந்தபோது, `அவரது உறவினர்கள் மறுத்துவிட்டதால் செய்யவில்லை,' என கூறியிருந்தனர்.
 
என்ன செய்கின்றன 4 கமிட்டிகள்?
 
ஒருவர் விபத்தில் இறந்து விட்டால், `பிரேத பரிசோதனை வேண்டாம்' என யாரும் கூறுவதில்லை. பிரேதப் பரிசோதனை செய்வதால் உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும். ஒருவருக்கு தடுப்பூசி போட்ட பிறகு 28 நாள்களில் ஏதேனும் பாதிப்பு வருகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். யார் தடுப்பூசி போடுகிறாரோ அவர்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், `இந்தியாவில் இவை சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை' என வைரலாஜிஸ்ட் ஜேக்கப் ஜான் குற்றம் சாட்டுகிறார். `இதனை சரிசெய்ய வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்" என்கிறார்.
 
மேலும், `` தடுப்பூசி திட்டத்தைக் கண்காணிப்பதற்கு நான்கு கமிட்டிகள் உள்ளன. ஒன்று உள்ளூர் கமிட்டி, அடுத்து மாவட்டக் கமிட்டி, மாநிலக் கமிட்டி மற்றும் தேசியக் கமிட்டி ஆகியவை. ஆனால், இவை முறையாக செயல்படுவதில்லை. தடுப்பூசி போட்டவர் இறந்துவிட்டால், அவரின் குடும்ப உறுப்பினர்களைக் கேட்காமலேயே பிரேதப் பரிசோதனை செய்யலாம். ஆனால், இங்குள்ள அதிகாரிகள் அதனை முறையாகச் செய்வதில்லை. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையில் 32 மருத்துவர்கள் இறந்துள்ளனர். அகில இந்திய அளவில் 646 பேர் இறந்துள்ளனர். இவர்கள் எல்லாம் தடுப்பூசி போடாதவர்களா? அவர்களுக்கு ஏன் இறப்பு நேர்ந்தது?
 
2 டோஸ் தடுப்பூசி, 4 சதவிகிதம்
 
என்னுடைய கோரிக்கையெல்லாம் இதுபோன்ற மரணங்களில் அறிவியல் ரீதியாக ஆய்வு நடத்த வேண்டும். `இவர்கள் போட்ட தடுப்பூசி எது.. இரண்டு டோஸும் எடுத்துக் கொண்டார்களா?' எனத் தெரியவில்லை. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இரண்டாம் அலைக்கு முக்கிய காரணமாக டெல்டா திரிபு உள்ளது. `தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் இத்திரிபைத் தடுப்பதில் பலன் கொடுப்பதில்லை' என இந்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாகவும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
 
தமிழ்நாட்டில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டவர்கள் நான்கு சதவிகிதத்துக்கும் கீழ் உள்ளனர். இப்படி கொடுத்தால் எதிர்ப்புச் சக்தி எப்படி வளரும்? தமிழ்நாட்டில் 0 முதல் 18 வயதுள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்தியாவில் இந்த வயதினர் 40 சதவிகிதம் பேர் உள்ளனர். சமூகத்தில் உள்ள மொத்த நோய் எதிர்ப்புத்தன்மையை கணக்கிடும்போது, `80 சதவிகித மக்கள் தடுப்பூசி போட வேண்டும்' என்கின்றனர். தற்போதுள்ள தடுப்பூசி பற்றாக்குறையில் இது எப்படி சாத்தியம்?" எனவும் கேள்வி எழுப்புகிறார்.
 
இதுவரையில் 26 பேருக்கு பாதிப்பா?
தொடர்ந்து அவரிடம், `தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுமா?' என்றோம். "தொடக்கத்தில் இந்திய அரசானது, `அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை' என்றது. ஆனால், ஆந்திராவில் பொக்கா விஜயலட்சுமி என்பவருக்கு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பாதிப்பு வந்துள்ளது. அவருக்கு வந்த பிரச்னை ஆங்கிலத்தில் thrombogenic ischemic demyelination எனப் பதிவாகியுள்ளது.
 
AEFI நடத்திய ஆய்வில், இந்தியாவில் இதுவரையில் 26 பேருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, 10 லட்சம் பேருக்கு 0.61 பேருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு வரும் என்கின்றனர். இந்தப் பாதிப்பு தடுப்பூசி செலுத்தப்பட்டு 20 நாள்களுக்குள் வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.அப்படியொரு பாதிப்பு வரும்போது, தடுப்பூசியை தேர்வு செய்யும் உரிமையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். இதை உலக சுகாதார நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. தடுப்பூசியால் குறைவான பாதிப்புகள் வரும் என்றாலும் ரத்தம் உறைதல் பாதிப்பு உள்ளவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.
 
அதனால்தான், `பின்விளைவுகளை ஆராய வேண்டும்' என மருத்துவர் ஜேக்கப் ஜான் உள்ளிட்ட குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். தடுப்பூசியால் பாதிப்பே இல்லை என கூற முடியாது. தமிழ்நாட்டிலும் சில விஷயங்களை மறைப்பதாக உணர்கிறோம். சென்னையில் அனிதா என்பவருக்கு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, அனைத்தையும் பொதுவெளியில் வைத்து விவாதிக்க வேண்டும் என்கிறோம்" என்கிறார் புகழேந்தி.
 
அணுசக்தி ஆராய்ச்சி மையம் சொல்வது என்ன?
 
இதையடுத்து, துளசி யாதவின் மரணம் தொடர்பாக இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜலஜாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "இப்படியொரு சம்பவம் ஏற்பட்டது குறித்து எங்களின் கவனத்துக்குத் தகவல் வரவில்லை. மருத்துவமனை நிர்வாகம், ஆம்புலன்ஸ் கொடுக்காமல் இருக்க வாய்ப்பில்லை. யாருக்கும் அதுபோல் செய்ய வாய்ப்பில்லை" என்கிறார்.
 
``கொரோனா காலத்தில் நாங்கள் மிகவும் சிரமப்பட்டுவிட்டோம். எங்கள் மீது ஏன் குறை கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அணுமின் நிலையத்தில் பணியாற்றி வந்த 50 வயதுக்குக்கீழ் இருந்த 4 பேர் கொரோனாவால் இறந்துவிட்டனர். தடுப்பூசியை யாருக்கு போட வேண்டும் என்பதை முறையாக ஆய்வு செய்துவிட்டுத்தான் செலுத்துகிறோம். இது தொடர்பாக, செங்கல்பட்டு ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்துத்தான் முடிவு செய்கிறோம். துளசி யாதவ் தொடர்பான விவரம் எங்கும் பதிவாகவில்லை" என்றார் அவர்.
 
தடுப்பூசியால் பாதிப்பா?
``தடுப்பூசியால் பாதிப்புகள் ஏற்படுமா?" என சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் ஜெயந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்த இரு சம்பவங்களில் உள்ள விவரங்களை அறிவியல்பூர்வமாக நாம் கவனிக்க வேண்டும். அடுத்ததாக, ஏ.இ.எஃப்.ஐ (AEFI) குழு ஒன்றும் உள்ளது. தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொது சுகாதாரத்துறையில் உள்ள தடுப்பூசி குழுவினருக்கு உடனுக்குடன் அறிக்கை கொடுக்க வேண்டும். அவர்கள் அந்த தகவல்களை ஆராய்வதற்காக ஒரு குழுவை அனுப்புவார்கள். அவர்களிடம் அனைத்து விவரங்களும் நிச்சயமாக இருக்கும். தடுப்பூசியால் ஏதேனும் சம்பவம் நேர்ந்தால் அதுகுறித்து 24 மணிநேரத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். மருத்துவரீதியாக கருத்து வேண்டும் என்றால் எங்கள் பேராசிரியர்கள் தெரிவிப்பார்கள்" என்கிறார்.
 
``தடுப்பூசி செலுத்தப்பட்ட நபரை 28 நாள்கள் கண்காணிக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுவதில்லை என்கிறார்களே?" என்றோம். ``இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர்தான் பதில் அளிக்க வேண்டும். அங்கு அனைத்து விவரங்களும் இருக்கும்" என்கிறார்.
 
மாநில கமிட்டி பரிசீலிக்கும்!
இதையடுத்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` AEFI தொடர்பாக சில கட்டாய நடைமுறைகள் உள்ளன. எங்கு தடுப்பூசிகள் போடப்பட்டாலும் லேசான பாதிப்பு முதல் தீவிரமான பாதிப்புகள் வரையில் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன. இது தொடர்பாக எந்தத் தகவல் வந்தாலும் மாநில கமிட்டியிடம் தெரிவிப்போம். தடுப்பூசி பயன்பாட்டால் ஏதேனும் மரணம் ஏற்பட்டால் தேசியக் கமிட்டிக்குத் தகவல் தெரிவிப்போம்" என்கிறார்.
 
மேலும், `` நீங்கள் குறிப்பிடும் இரண்டு சம்பவங்கள் தொடர்பாக வல்லுநர்கள் ஆராய்ந்து தெரிவிப்பார்கள். தடுப்பூசி போடும் இடத்தில் ஏதாவது சம்பவம் நடந்தால் இது குறித்து வாரந்தோறும் நடக்கும் சந்திப்புகளில் விவாதிப்போம். இது தொடர்பாக மாநில கமிட்டி பரிசீலிக்கும். தடுப்பூசியால் யார் இறந்தாலும் இந்தக் கமிட்டி உரிய ஆய்வுகளை மேற்கொள்ளும்" என்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க நிபுணரை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்! – முதல்வரின் பொருளாதார நிபுணர்கள்??