Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபிகா படுகோன் விளம்பரம் தேடுகிறாரா: ஜே.என்.யுவில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (16:01 IST)
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

ஜே.என்.யு பல்கலைக்கழகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் வந்த தீபிகா, போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். மேலும் தாக்கப்பட்ட ஜே.என்.யு மாணவர் சங்க தலைவர் ஒய்ஷி கோஷையும் சந்தித்தார்.

எனினும் தீபிகா படுகோன் அப்போது செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

ஜே.என்.யு மாணவர்கள் மத்தியில் அவர் நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ஜே.என்.யு போராட்டத்தில் கலந்து கொண்டதால், பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் சிலர், தீபிகா படுகோன் நடித்து வெளியாகவுள்ள ''சபாக்'' திரைப்படத்தை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

#BoycottChhapaak என்று ஹேஷ்டேகும் இந்திய அளவில் ட்ரெண்டிங்யில் உள்ளது.
அமில வீச்சு தாக்குதலுக்கு உள்ளான லக்ஷ்மி அகர்வால் எனும் டெல்லி பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.


மற்றொருபுறம் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவானவர்களால் #ISupportDeepika என்ற ஹேஷ்டேகும் பதிவிடப்பட்டு, ட்ரெண்டிங்கில் உள்ளது

அவரின் சபாக் திரைப்படம் வெளியாகும் முன்பு, ஜே.என்.யு செல்வது சர்ச்சைக்கு உள்ளாகும் என்று தெரிந்தும் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்க துணிச்சல் வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் ஆதரவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மாணவர்கள் போராட்டம் குறித்து பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவிக்காத நிலையில், தீபிகா படுகோனுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இயக்குநர் அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ''சபாக்'' திரைப்படத்திற்கு தீபிகா தயாரிப்பாளாரும்கூட, இந்நிலையில் அவர் மாணவர்களுக்கு ஆதரவாக நின்றது அவரது துணிச்சலை காட்டுகிறது'' என்று பதிவிட்டுள்ளார். தீபிகா படுகோனுக்கு சினிமா பிரபலங்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது.

'பத்மாவதி' சர்ச்சையில் ஏற்கனவே சிக்கிய தீபிகா

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா நடித்து, 2018இல் வெளியான 'பத்மாவத்' திரைப்படம் ராஜ்புத்திர பெண்களை தவறுதலாக சித்திரிப்பதாகக் கூறி ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.

கர்னி சேனா எனும் அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியதைப் போல அந்தப் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கையும் வெட்டுவோம் என்று அப்போது கூறியிருந்தார்.

சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்திருந்தார்.

படப்பிடிப்பு நடந்த இடத்தில் தாக்குதல், போராட்டங்கள் என பல பிரச்சனைகளுக்கு பிறகு 'பத்மாவதி' எனும் படம் 'பத்மாவத்' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments