Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெப்ப அலைகள்: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? – எப்படி தற்காத்துக் கொள்வது?

வெப்ப அலைகள்: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? – எப்படி தற்காத்துக் கொள்வது?
, திங்கள், 2 மே 2022 (13:49 IST)
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வெயிலின்போது வெளியே செல்லவே அச்சமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உச்சி வெயிலில் வெளியே செல்லாதே என்ற அறிவுரைகளை வீட்டின் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அனல் காற்றின் வெப்ப உணர்வு முகத்தில் வீசும்போது, தொண்டை வறண்டு நீரைத் தேடச் சொல்லிக் கெஞ்சுவதை உணராதவர்கள் இருக்கமுடியாது.

வெயிலில் வைக்கும் செடிகள் கருகத் தொடங்குவது, துவைத்து காயவைத்த துணிகள் அதிவேகமாக உலர்ந்துவிடுவது என்று கோடைக்கால அனுபவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதுவரையிலான இந்த அனுபவங்களை எல்லாம் ஒன்றுமே இல்லையெனச் சொல்லும் அளவுக்கு இந்த ஆண்டின் வெப்ப அலை இருக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன. 1901-ஆம் ஆண்டு முதலான வெப்பத்தில், மார்ச் 2022-ஆம் ஆண்டு பதிவான வெப்பநிலை மூன்றாவது அதிக வெப்பநிலை எனக் கூறப்படுகிறது.

மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை முழுமையாக 26 நாட்களுக்கு இந்தியா முழுவதும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளது.

தண்ணீர் குடிப்பது ஏன் அவ்வளவு முக்கியம்?

இத்தகைய அதீத வெப்பநிலை, இந்தக் கோடைக்காலத்தில் பொதுமக்களிடையே என்ன மாதிரியான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும், அவற்றிலிருந்து எப்படி மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, மருத்துவர் சிவராம கண்ணனிடம் பேசினோம்.

அவர், "வெயில் நம் மீது படாமல் பார்த்துக் கொள்வதே முதன்மையான பாதுகாப்பு நடவடிக்கை. வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியே அதிகமாகச் செல்லாமல் இருக்க வேண்டும். அப்படியே செல்வதாக இருந்தாலும், காரில் செல்வது, குடை எடுத்துச் செல்வது, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தோல் வெளியே தெரியாதவாறு முகம் உட்பட அனைத்தையும் துணியால் மறைத்துக் கொள்வது போன்ற உரிய பாதுகாப்புகளைச் செய்துகொள்ள வேண்டும்.
webdunia

வெயிலின் தாக்கத்தால் தோல் பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு, சன்ஸ்க்ரீன் லோஷன் போடுவது போன்றவற்றின் மூலம், தோல் வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவற்றைவிட மிக முக்கியமாக, தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சராசரியாக நாளொன்றுக்கு 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டுமெனில், இப்போதைய சூழலில் கூடுதலாக ஒரு லிட்டர் குடிப்பது பாதுகாப்பானது," என்று கூறினார்.

உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்

அவரிடம் கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அதிர்ச்சி போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பாதிப்புகள் குறித்துக் கேட்டபோது, "கோடை உச்சத்தில் இருக்கும்போது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) ஏற்படும் அபாயம், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடையே மிக அதிகமாக உள்ளது. அவர்கள் உச்சி வெயிலின்போது வெளியிலேயே செல்லக்கூடாது.

முதியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்களுக்குமே கூட உடலில் நீர் அளவு போதுமான அளவுக்கு இல்லையென்றால் அதிக உடற்பயிற்சியால் வெப்ப அதிர்ச்சி ஏற்படக்கூடும். 15 நாட்களுக்கு முன்பு கூட 22 வயதான ஓர் இளைஞர் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் ஓடியதால் வெப்ப அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஏசியில் இருப்பதைப் போலவே, நம் மூளையிலும் உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிப்பதற்கான தெர்மோஸ்டாட் உள்ளது. அது செயலிழந்துவிடுவதால் வெப்ப அதிர்ச்சி ஏற்படுகிறது.

வெப்ப அதிர்ச்சியின்போது, உடலிலுள்ள நீர்ச்சத்து மொத்தமும் ஆவியாகிவிடும். அதற்கு உடல் எதிர்வினையாற்றும்போது, மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும். அந்த இளைஞருக்கு அதிக உடற்பயிற்சியால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதத்தில், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் கிட்டத்தட்ட வெந்துபோனதைப் போல் ஆகியிருந்தது.

முதியவர்களின் உடலில் ரத்த அளவும் நீர்ச்சத்தும் குறைவாகத்தான் இருக்கும். அவர்கள் இப்போதுள்ள வெயிலில் வெளியே செல்லும்போது, வெப்ப அதிர்ச்சிக்கு ஆளாகி உயிரையே இழக்கும் அபாயம் ஏற்படலாம். ஆகவே 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அந்த இளைஞரைப் பொறுத்தவரை, மாரத்தான் ஓடுவதற்கு முன்பு அவர் போதுமான அளவுக்கு நீர்ச்சத்து எடுத்துக் கொள்ளாததே இதற்குக் காரணம். கோடைக்காலங்களில் மாரத்தான் ஓடுவதில் தவறு ஏதுமில்லை. ஆனால், பருவநிலையை கருத்தில் கொண்டு, உடல் ஆரோக்கியத்திற்கான உரிய விஷயங்களைச் செய்துகொள்ள வேண்டும். அதிலும், அதிகளவு நீர் ஆகாரம் எடுப்பது மிகவும் முக்கியம்," என்றார்.

தண்ணீர் பற்றாக்குறை கொண்டுவரக்கூடிய நோய்கள்

இதுபோக, அதீத வியர்வை காரணமாக பூஞ்சைத் தொற்றுகள், சொறி, படங்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடலின் ஈரப்பதத்தைப் பராமரிப்பது, பவுடர் போடுவது, உடலை குளிர்ச்சியாகப் பராமரிப்பது போன்றவற்றைச் செய்துகொள்வதன் மூலம் இதிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் கூறுகிறார் மருத்துவர் சிவராம கண்ணன்.
webdunia

மேலும், "கோடைக்காலங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, பல்வேறு நீர்சார் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, கிடைக்கும் நீர் மாசடைந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், நீர்சார் நோய்களான வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டைஃபாய்ட் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே, நீரை சூடாக்கிய பின்னர் குடிப்பது நல்லது.

அணியும் ஆடைகளையுமே இறுக்கமாக அணிவதை விட காற்றோட்டம் இருக்கக்கூடிய வகையில் அணிவதும் அடர்த்தி குறைந்த நிறத்திலான ஆடைகளை அணிவதும் நல்ல பலனளிக்கும்.

இவைபோக, சிறுநீரகக் கல் வருவதும் அதிகமாகவே இருக்கும். கோடைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் குடிக்காமல் இருப்போருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும்," என்றார்.

கோடையில் கம்பஞ்சோறு உடலுக்கு நல்லது

கோடைக்காலங்களில் எதைச் சாப்பிடுவது அதீத வெப்பநிலையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் என்பது குறித்து உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன், "வெயில் காலங்களில் நமக்கு மிகவும் அவசியமானது தண்ணீர். அதிலும் சிறப்பானது பானைத் தண்ணீர்.

ஏனெனில், சராசரி வெப்பநிலை எதுவாக இருந்தாலும் அதைவிடக் குறைவாகவே பானைத் தண்ணீர் இருக்கும். அதுமட்டுமின்றி, குளிர்சாதனப் பெட்டியில் குளிரூட்டப்படும் நீரைவிட இதுவே தாகத்தைத் தணிக்கச் சிறந்தது. அது இல்லையெனில், ஓரளவுக்குச் சூடாக்கிய குடிநீரை பருகலாம். இவையிரண்டும் தாகத்தைத் தணிக்கச் சிறந்தது.

பொதுவாக, 70 வயதுக்கு மேலுள்ள முதியவர்களுக்கு அவ்வளவாக தாகம் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் குடிநீரை அவர்களுக்கு அருகிலேயே வைத்துவிட வேண்டும். அதை அவர்கள் அன்றைய நாளுக்குள் குடித்துவிட வேண்டும்.

இவைபோக, கோடைக் காலத்தில் ராகி கூழ், கம்பஞ்சோறு போன்றவற்றை இரவில் புளிக்க விட்டு, காலையில் நீர் மோர் சேர்த்து, வெங்காயம் அல்லது நார்த்தங்காயுடன் சாப்பிடுவது சிறந்தது. இதிலுள்ள நல்ல பாக்டீரியா உடலுக்கு குளிர்ச்சியை வழங்கி பாதுகாப்பு வழங்கும்.

கோடைக்காலங்களில் ஷாம்பூ போட்டுக் குளிப்பதைவிட, சீயக்காய், உசிலம்பொடி போன்றவற்றைப் பயன்படுத்தி குளிப்பது மிகவும் நல்லது. குளிர்பானங்களை எடுத்துக் கொள்வதில் எவ்விதப் பயனும் இல்லை. அதுமட்டுமின்றி, பழங்களை ஜூஸ் போட்டுக் குடிப்பதைவிட, பழங்களை அப்படியே சாப்பிடுவது தான் சிறந்தது.

பழங்களை சாறாக்கிக் குடிக்கும்போது, அதிலிருக்கும் நார்ச்சத்துகள் போய்விடும். அதைவிட, அப்படியே சாப்பிடும்போது நமக்குத் தேவையான சத்துகள் முழுமையாகக் கிடைக்கும்," என்று கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி புலி என்னும் பிரபாஸ் புலி! – ஹைதராபாத் பூங்காவில் குவிந்த கூட்டம்!