Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை போராட்டத்தில் கண்ணீர்க் குரல்கள்: 'சோற்றுக்கு வழியில்லை; பட்டினி கிடக்கிறோம்'

Advertiesment
BBC
, புதன், 27 ஏப்ரல் 2022 (15:18 IST)
இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் தீவிரம் குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது கொழும்பு காலி முகத் திடலில் நடக்கும் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம்.

அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை போராட்டத்தில் பரவலாகக் கேட்கிறது. விலைவாசி உயர்ந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் சிரமப்படுவதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.

கொழும்பு நகருக்கு வெளியே இருக்கும் நீர்க் கொழும்பு பகுதியில் இருந்து போராட்டத்துக்கு வந்திருக்கும் பிலோமினாளுக்கு தனது நிலையைச் சொல்லும்போதே கண்ணீர் வந்துவிடுகிறது.

"மண்ணெண்ணெய் இல்லாமல் மூன்று நாள்களாக எனது மகன் வீட்டில் எதுவும் சமைக்கவில்லை. நானே எனது வீட்டில் சமைத்து கட்டிக் கொடுத்து விடுகிறேன். இன்று அவர்களை பட்டினிபோட்டுவிட்டுத்தான் போராட்டத்துக்கு வந்திருக்கிறேன்"

காலி முகத் திடல் என்பது கொழும்பு நகரின் அடையாளங்களுள் ஒன்று. அதிபரின் அலுவலகம், இலங்கையின் மத்திய வங்கி ஆகியவை இங்கே அமைந்திருக்கின்றன. நடந்து செல்லும் தொலைவில் பிரதமர் ராஜபக்ஷவின் இல்லம் அமைந்திருக்கிறது.

அதிபரின் செயலக வாயில்கள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அது திறக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. அடைக்கப்பட்ட அந்த வாயில் இப்போதைய போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கிறது. அதை மையமாகக் கொண்டுதான் போராட்டக்காரர்கள் ஒருங்கிணைகிறார்கள்.

"செழிப்பாக இருந்த நாடு இப்போது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஆகிவிட்டது" என்கிறார் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் அஸ்வர்.

இப்போதைய அதிபருக்கு வாக்களித்தவர் என்ற முறையில் அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாக அவர் கூறுகிறார்.

"நாட்டை மேம்படுத்துவார் என்றுதான் அவருக்கு வாக்களித்தோம். ஆனால் நாட்டை மேம்படுத்தவில்லை. அவரது குடும்பத்தைத்தான் மேம்படுத்தியிருக்கிறார்"
webdunia

நாட்டை எத்தியோப்பியா சோமாலியா போன்ற நாடுகளைப் போல ஆக்கிவிடாமல் ஆட்சியாளர்கள் உடனடியாகப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் கோரினார்.

நுவரெலிய பகுதியில் இருந்து போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் பிரேமகுமார் நான்கு மதங்களில் இருந்தும் அரசு அமைய வேண்டும் என்று கோரினார்.

"பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என நான்கு மதங்களில் இருந்தும் அரசு அமைய வேண்டும். அதுதான் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக அமையும்" என்றார்.

வடக்கு கிழக்கில் பிரச்னை நடந்தபோது மக்கள் இதுபோன்று ஒன்றிணையவில்லை என்றும், தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிரச்னை என்றபோதுதான் இணைந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் தொடர்ந்தாலும், அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவோ, அவரது சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று பல முறை அறிவித்துவிட்டார்கள்.

இன்னும் சில மாதங்களில் ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் போன்றவற்றின் நிதியுதவி கிடைக்க இருப்பதாகவும் அதற்கு அவகாசம் தேவை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த காலங்களில் இன ரீதியிலான பிளவு காரணமாக நீண்ட போரைக் கண்ட இலங்கை, போர் முடிந்த பிறகு படிப்படியாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. ஆனால் 2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் நாளில் நடந்த தொடர் குண்டுவெடிப்பும், அதன் பிறகு கொரோனாவும் நாட்டின் சுற்றுலா, தேயிலை உற்பத்தி போன்ற முக்கியமான துறைகளை முடக்கிவிட்டன.

இலங்கைக்கு உதவப்போவதாக ஐ.எம்.எஃப் அமைப்பு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் வரவேற்றிருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு அரசுதான் காரணம்!? – பிரதமர் மோடி!