Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணியில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம் - சம வருவாய் கிடைக்குமா?

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (22:32 IST)
"இந்திய கிரிக்கெட் அணியில் பெண் வீராங்கனைகளுக்கும் ஆண் வீரர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்படும்" என அறிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜெய் ஷா. வாரியத்தின் அறிவிப்பை பெண் வீராங்கனைகளும் பிறரும் வரவேற்றுள்ளனர்.

 
"இது பெண்கள் கிரிக்கெட்டில் அதிக அளவில் தேர்வு ஆவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை," என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ஹேமலதா. அண்மையில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றவர் இவர்.

 
"பெண்கள் கிரிக்கெட்டில் தற்போது மிகப்பெரிய புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் இது உற்சாகம் அளிக்கும் அறிவிப்பு," என்கிறார் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த நிரஞ்சனா.

 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெண்களுக்கான ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு முதல் நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

 
"இது ஒரு வரலாற்று முடிவு" என இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
பெண்கள் கிரிக்கெட்டை பிசிசிஐ அங்கீகரிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழக அணிக்காக ஆடியவரும் தற்போதைய கிரிக்கெட் விமர்சகருமான சாரதாவும் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்.
 
இப்போது ஜெய்ஷா வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட ரூ.15 லட்சமும், ஒரு நாள் போட்டிகளுக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிகளுக்கு 3 லட்சம் ரூபாயும் கிடைக்கும். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஒரு லட்ச ரூபாயும், டெஸ்ட் போட்டிகளுக்கு 4 லட்சம் ரூபாயும் கிடைக்கிறது.

 
இந்த அறிவிப்பால் சம வருவாய் கிடைக்குமா?
 
ஒப்பந்தத்தில் இருக்கும் வீராங்கனைகளுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும். இந்த ஒப்பந்தங்களிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆண்டு ஒப்பந்தத்தில் உள்ள இந்திய வீராங்கனைகள் அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் பெறுகிறார்கள்.

 
அடுத்தடுத்த கிரேடுகளில் இருக்கும் வீராங்கனைகளுக்கு முறையே 30 லட்சம் ரூபாயும், 10 லட்சம் ரூபாயும் கிடைக்கும்.

 
அதே நேரத்தில் ஏ பிளஸ் ஒப்பந்தத்தில் உள்ள இந்திய ஆண்கள் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 7 கோடி வரை கிடைக்கிறது.
 
 
பிசிசிஐ இணையதளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின்படி தற்போது ஆறு பெண்கள் மட்டுமே ஏ நிலை ஒப்பந்தத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்குத்தான அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுவே ஆண்களில் ஏ பிளஸ் நிலையில் இருக்கும் வீரர்களுக்கு ரூ.7 கோடி கிடைக்கும்.
 
"இந்த முரண்பாடுகளைக் களைவதிலும் தற்போதைய அறிவிப்பு முக்கியப் பங்காற்றும்" என்று கூறுகிறார் நிரஞ்சனா. இவர் இந்திய அணிக்காக 22 ஒரு நாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார்.
 
 
 
ஆண்களைப் பொறுத்தவரை அதிக அளவில் விளம்பரங்கள், ஸ்பான்சர்கள் மூலமாக அதிக வருமானம் கிடைக்கிறது. பெண்களுக்கு இந்த வருவாய் மிகவும் சொற்பமாகவே இருக்கிறது.

 
பெண்கள் கிரிக்கெட்டின் சவால்கள் என்னென்ன?
 
கிரிக்கெட்டுக்கு பெண்கள் வருவது மிகக் குறைவாகவே இருக்கிறது. தேசிய அணியில் இடம் பிடித்த பலருக்கு கூட, 15 வயதுக்குப் பிறகுதான் 'பெண்கள் கிரிக்கெட் அணி' என ஒன்று இருக்கிறது என்றே தெரிந்து கொண்டார்கள். பலர் ஆண்களுடன் ஆடியே கிரிக்கெட்டை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 
இந்திய அணி வீராங்கனையான ஹேமலதா தனக்கு 18 வயது வரை பெண்கள் கிரிக்கெட்டை பற்றி எதுவும் தெரியாது என்கிறார். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய அணியில் இடம்பிடிக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

 
"ஹார்மோன்கள், ஃபிட்னெஸ், குடும்ப சூழல் ஆகியவற்றைக் கடந்து கிரிக்கெட்டுக்கு பெண்கள் வரவேண்டியிருக்கிறது. கிரிக்கெட்டை ஒரு முழு நேரப் பணியாக எடுத்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பு" என்கிறார் ஹேமலதா.

 
"ஊதியம் ஒரு முக்கியமான அம்சம் என்றாலும் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளை நடத்துவது, போட்டிகளை பரவலாக ஒளிபரப்புவது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்," என்கிறார் ஹேமலதா.
 
 
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு பெண்களால் ஆட முடியாது என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் மிதாலி ராஜ் போன்றவர்கள் இதை உடைத்திருக்கிறார்கள் என்கிறார் நிரஞ்சனா. திருமணத்துக்குப் பிறகு தாம் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

 
"பெண்கள் கிரிக்கெட்டுக்கு பொதுமக்களும் ஊடகங்களும் அதிகமாக ஆதரவு தர வேண்டும். அது சமத்துவத்துக்கான ஆதாரமாக இருக்கும்" என்பது ஹேமலதாவின் கருத்து.

 
மற்ற விளையாட்டுகளின் நிலை என்ன?

 
விளையாட்டுகளில் பாலின ஊதிய இடைவெளிக்கு எதிராக குரல் எழுப்பிய பெருமை பெரும்பாலும் 1970 களில் டென்னிஸில் சமத்துவத்துக்காகப் போராடிய இருந்த பில்லி ஜீன் கிங்கையே சாரும்.

 
அவரது முயற்சிகளால் யுஎஸ் ஓபன் போட்டியில் சம ஊதியம் அறிவிக்கப்பட்டது. இறுதியில் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டியை நடத்தும் நிர்வாகங்களும் வீராங்கனை மற்றும் வீரர்களுக்கு ஒரே பரிசுத் தொகையை வழங்கத் தொடங்கின.

 
இருப்பினும், அனைத்து சிறிய அளவிலான போட்டிகளில் இந்த சமநிலை பேணப்படுவதில்லை. கோல்ஃப், கூடைப்பந்து மற்றும் கால்பந்தாட்டத்தில் பரிசுத் தொகையில் பாலின ஊதிய இடைவெளி அதிகமாக இருக்கிறது. எனினும் ஹாக்கி மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளில் சமநிலை காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்