Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனி சிக்ஸர்கள் விளாசியும் சென்னை அணி தோற்றது ஏன்? முக்கியமான காரணங்கள்

Advertiesment
தோனி சிக்ஸர்கள் விளாசியும் சென்னை அணி தோற்றது ஏன்? முக்கியமான காரணங்கள்
, வியாழன், 13 ஏப்ரல் 2023 (10:59 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் முடிந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றிபெற வாய்ப்பில்லை என்ற ரசிகர்களின் எண்ணத்தை தனது அதிரடி மூலம் தோனி, ஜடேஜா ஆகியோர் மாற்றினர். இறுதியில் சிஎஸ்கே நிச்சயம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பிய வேளையில், கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்தது.
 
நேற்றைய ஆட்டம் தோனி கேப்டனாக விளையாடும் 200ஆவது ஆட்டம் என்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானமே ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. தோனி டாஸ் வென்றதுமே மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர்.
 
டாஸ் வென்ற தோனி பந்து வீச்சை தேர்வு செய்து பேசும்போது, 200வது ஆட்டத்தில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்கள் கூட்டத்தை பார்க்கும்போது பிரமாதமாக இருக்கிறது. புனரமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் விளையாடுவது ஸ்விட்சர்லாந்தில் விளையாடுவது போல் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக தாக்குபிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது` என்று கூறியிருந்தார்.
 
தொடக்கமும் இறுதியும் அதிரடியாக அமைந்த ராஜஸ்தான் பேட்டிங்
 
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்திருந்தது. தொடக்கத்தில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் பட்லர் - படிக்கல் ஆகியோர் அதிரடி காட்ட 6-ஆவது ஓவரில் அந்த அணி 50 ரன்களை கடந்தது. 8 ஓவர்களில் 86 ரன்களை எடுத்து பலமாக இருந்த ராஜஸ்தான் அணிக்கு 9வது ஓவரில் ரவிந்திர ஜடேஜா அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
 
அந்த ஓவரில் படிக்கல், சஞ்சு சாம்சன் ஆகியோரின் விக்கெட்களை அவர் வீழ்த்தினார். இதன் மூலம் அனைத்து வகையான 20 ஓவர் போட்டிகளிலும் சேர்த்து 200 விக்கெட் என்னும் மைல்கல்லை அவர் எட்டினார். அதே ஓவரில் அஸ்வினின் விக்கெட்டையும் அவர் வீழ்த்தியிருக்க வேண்டியது.
 
ஆனால், மொயின் அலி அந்த கேட்சை தவறவிட்டார். அதன் பின்னரும் ஜடேஜா, சிசாண்டா மகாலா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் பெரியளவில் ரன் எடுக்க முடியவில்லை. இறுதி ஓவர்களில் ஹெட்மயர் இரண்டு பவுண்டரி, 2 சிஸ்கர் அடிக்க ராஜஸ்தான் அணி 175 ரன்களை எடுத்திருந்தது.
 
சென்னைக்கு ஏமாற்றமாக அமைந்த 10- 17 ஓவர்கள்
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சென்னை அணி களமிறங்கியது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் இந்த ஆட்டத்தில் வெறும் 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதைத் தொடர்ந்து கான்வே- ரஹானே ஜோடி சேர்ந்தனர். இருவரும் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பௌலிங்கை அடித்து ஆடினர். குறிப்பாக அஸ்வின் வீசிய 6வது ஓவரில் ரஹானே மிட் ஆஃப்பில் சிக்ஸர் அடித்து சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
 
அஸ்வின் வீசிய 10-ஆவது ஓவரில் ரஹானே ஆட்டமிழக்க அதன் பின்னர், அதன் பின்னர் ராஜஸ்தானின் கை ஓங்கியது. டி20 போட்டியென்றாலே பேட்ஸ்மேன்களில் சிக்ஸர், பவுண்டரி போன்ற அதிரடி தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 10 முதல் 17 வரையிலான ஓவர்களில் சென்னை அணி வெறும் 2 பவுண்டரிகளை மட்டுமே எடுத்திருந்தது. அதே நேரத்தில், ரஹானே, டூபே, மொயின் அலி, அம்பதி ராயுடு, கான்வே போன்ற முக்கிய விக்கெட்களையும் அந்த அணி இழந்திருந்தது.
 
இந்த ஓவர்களில் பெரிய ஸ்கோர்களையும் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் விட்டுக்கொடுக்கவில்லை. 10-ஆவது ஓவரை வீசிய அஸ்வின் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ரஹானேவின் அதிரடிக்கு முடிவு கட்டினார். அடுத்த ஓவரை வீசிய குல்தீப் சென் 7 ரன்களையும் 12-ஆவது ஓவரை வீசிய அஸ்வின் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து சிவம் துபேவின் விக்கெட்டை கைப்பற்றினார். 13, 14 ஆகிய ஓவர்களிலும் தலா 5 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் விட்டுகொடுத்தனர். 15வது ஓவரை வீசிய சாஹல் 10 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் ராய்டு, கான்வே ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தி சிஎஸ்கேவுக்கு நெருக்கடி கொடுத்தார்.
 
இதனால் 9 ஓவர் முடிவில் 9.09 ஆக இருந்த தேவைப்படும் ரன் ரேட் 18-ஆவது ஓவரின் தொடக்கத்தில் 18.00 ஆக இருந்தது.
 
சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்த தோனி- ஜடேஜா
 
கடைசி 3 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. இருந்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். காரணம், களத்தில் இருந்தது தோனி- ஜடேஜா ஜோடி. இருவருமே அதிரடி ஆட்டக்காரர்கள் 3, 4 பந்துகளில் ஆட்டத்தின் போக்கையே அவர்களால் மாற்ற முடியும். ரசிகர்களின் நம்பிக்கையை மெய்ப்பிப்பது போன்று ஜாம்பா வீசிய 18-ஆவது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய டோனி 4வது பந்தில் சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் கிடைத்தது.
 
நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, "தோனி கேப்டனாக விளையாடும் 200 ஆட்டத்தில் வெற்றி பெற்று, அந்த வெற்றியை தோனிக்கு பரிசாக அளிப்போம்` என்று ரவிந்திர ஜடேஜா கூறியிருந்தார். 19-ஆவது ஓவரில் அதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். ஹோல்டர் வீசிய ஓவரில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து நம்பிக்கை அளித்தார். இருந்தாலும் சந்தீப் சர்மாவின் துல்லியமான பந்துவீச்சால் தான் கூறிய பரிசை தோனிக்கு அவரால் வழங்க முடியாமல் போனது.
 
ஆட்டத்தின் போக்கை மாற்றிய கடைசி மூன்று பந்துகள்
6 பந்துகளுக்கு 21 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கே வெற்றி என்ற நிலையில் பந்துவீச வந்த சந்தீப் சர்மா பதற்றத்தில் முதல் இரண்டு பந்துகளையும் வைடாக வீசினார். முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காத தோனி அடுத்த இரண்டு பந்துகளையும் சிஸ்கர்களுக்கு விரட்ட ஆட்டம் சென்னை பக்கம் திரும்பியது. 3 பந்துகளுக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. பேட்டிங் ஆடிகொண்டிருந்ததோ கடைசி ஓவரில் வெற்றிகரமாக போட்டியை முடித்து வைப்பதில் வல்லவரான தோனி. ஐபிஎல் தொடரில் இதுவரை 89 ஆட்டங்களில் 20ஆவது ஓவரை எதிர்கொண்டுள்ள தோனி அந்த ஓவரில் மட்டும் 680க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். எனவே, கேப்டனாக விளையாடும் 200வது போட்டியை டோனி வெல்வார் என்றே கருதப்பட்டது. ஆனால், சந்தீப் சர்மா தனது அற்புதமான பந்துவீச்சு மூலம் 3 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.
 
ராஜஸ்தான் - சென்னை அணிகள் இதுவரை மோதிய 27 போட்டிகளில் 15 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் இரு அணிகளும் விளையாடிய கடைசி 6 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 6 முறை வெற்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தோல்விக்கு பின் பேசிய தோனி, நான் பேட்டிங் செய்யும்போது மிடில் ஓவர்களில் அதிக பந்துகளை ரன்கள் எடுக்காமல் வீணடித்துவிட்டோம். மிடில் ஓவர்களில் கூடுதல் ரன்களை எடுத்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார் அதேபோல், பந்துவீச்சாளர்கள் எதாவது தவறு செய்வார்களா என்று காத்திருந்தேன். கடைசி ஓவரில் பந்து வீச்சாளர் சற்று அழுத்தத்தில் இருந்தார். மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததையும் நாங்கள் பார்த்தோம். முதல் சில ஓவர்களுக்கு பின்னர் அது எளிதாகிவிட்டது. நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்
 
நேற்றைய ஆட்டத்திற்கு முன்பாக ஸ்டார் ஸ்போட்ஸ் ஊடகத்தில் பேசியிருந்த இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், `எம்எஸ் தோனி பேட்டிங் வரிசையில் தன்னை உயர்த்திக் கொள்வார் என்று நம்புகிறேன். இதனால், அவர் கூடுதலாக இரண்டு அல்லது மூன்று ஓவர்களுக்கு மேல் விளையாட முடியும். அவரால் மிகப்பெரிய ரன்களை அடிக்க முடியும் என்பதால், தனது பேட்டிங் மூலம் சிஎஸ்கேவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்` என்று தெரிவித்திருந்தார்.
 
நடப்பு தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் போட்டிங்களில் நேற்றைய ஆட்டத்தில் மட்டுமே டோனி 10 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 7 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 ரன்களையும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 பந்துகளில் 12 ரன்களையும் தோனி எடுத்திருந்தார். நேற்றைய ஆட்டத்தில்17 பந்துகளை எதிர்கொண்ட தோனி 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 32 ரன்களை எடுத்திருந்தார். ஒருவேளை கவாஸ்கர் கூறியபடி டோனி பேட்டிங்கில் சற்று முன்வரிசையில் களமிறங்கியிருந்தால் போட்டி சிஎஸ்கே வசம் வந்திருக்கலாம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிடுகிறாரா? பாஜக மாநில பொதுச் செயலாளர் தகவல்