Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை போராட்டத்தின் ஒரு வருடம் - ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றதற்கு இதுவே காரணம்

Srilanka
, திங்கள், 10 ஏப்ரல் 2023 (22:57 IST)
இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதியொருவரை வெளியேற்றச் செய்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
 
அரகலய என அழைக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி கொழும்பு - காலி முகத்திடலில் பல்லாயிரக்கணக்கான மக்களின் தன்னெழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
 
சுமார் 100 நாட்கள் வரை தொடர்ந்த போராட்டம் காரணமாக, இலங்கை அரசியலில் எதிர்பாரா பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
 
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்ஷ குடும்பம், இலங்கை அரசியல் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையை, இந்த போராட்டம் முற்று முழுதாக இல்லாதொழித்தது.
 
ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியலை மாத்திரமன்றி, இலங்கை அரசியலுக்கே இந்த போராட்டம் சவாலாக அமைந்தது.
 
இவ்வாறு தொடர்ந்த போராட்டம், கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் ஒடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ரணில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு தரப்பினர் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வந்தனர்.
 
சூரியனைவிட 3 ஆயிரம் கோடி மடங்கு பெரிய கருந்துளை: பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து எழுப்பிய சந்தேகம்
 
இவ்வாறான நிலையில், காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு, நேற்றைய தினம் பல்வேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
 
காலி முகத்திடல் போராட்டத்தின் போது நாட்டிற்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வொன்று, காலி முகத்திடலில் காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
பௌத்த மத குருமார்கள் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு, உயிர் நீத்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
 
அதேபோன்று, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்;திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு மற்றுமொரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
கொழும்பில் ஏப்ரல் 9ம் தேதி மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நேற்றைய தினம் எதிர்பார்த்த விதத்தில் எதுவும் நடக்கவில்லை.
 
காலி முகத்திடலில் காலை நடைபெற்;ற உயிர்நீத்தவர்களுக்கான நினைவு நிகழ்வில் சுமார் 25க்கும் குறைவானோரே கலந்துக் கொண்டிருந்தனர்.
 
அதைத் தவிர, ஊடகவியலாளர்கள் மற்றும் போலீஸாரே அதிகளவில் அந்த இடத்தில் இருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது.
 
அதேபோன்று, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்;திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கும் 15க்கும் குறைவானோரே வருகை தந்து பதாகைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
 
நூற்றுக்கணக்கானோர் போராட்டத்திற்கு வருகைத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், ஆர்ப்பாட்டக்காரர்களினால் அதிகளவிலான பதாகைகள் எழுதப்பட்டிருந்தன.
 
எனினும், அந்த பதாகைகளை கூட ஏந்தி போராட்டத்தை நடத்த எவரும் முன்வராமையினால், கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அந்த பதாகைகள் ஓர் இடத்தில் வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
 
போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், போராட்டத்திற்கு மக்கள் வருகைத் தராமைக்கான காரணத்தை, பிபிசி தமிழ் நேற்றைய போராட்டத்திற்கு வருகைத் தந்தவர்களிடம் வினவியது.
 
போராட்டத்தில் கலந்துக்கொண்ட சமூக செயல்பாட்டாளர் மொஹமட் புஷ்லியிடம் பிபிசி தமிழ் வினவியது.
 
இலங்கை போராட்டம்
 
கேள்வி: அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட மாபெரும் போராட்டத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்படும் போராட்டத்திற்கு கைவிட்டு எண்ணக்கூடிய அளவிலானோர் மாத்திரமே வருகைத் தந்துள்ளனர். அப்படியென்றால், உங்களின் போராட்டம் தோல்வி அடைந்து விட்டதா?
 
பதில் :- இல்லை. நாங்கள் இந்த நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியே இங்கு வருகை தந்துள்ளோம். இந்த நாட்டு பிரஜைகளாக நாம் இந்த போராட்டத்திற்கு தொடர்புப்பட்டுள்ளோம். இந்த போராட்டத்தினால் நாம் பெற்றுக்கொண்ட பல வெற்றிகள் காணப்படுகின்றன.
 
ஒவ்வொரு 9ஆம் தேதிகளிலும் எமக்கு வெற்றிகள் கிடைத்தன. ஜுலை 9ம் தேதி அதீத அதிகாரத்தை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஸவிற்கு பதவியை விட்டு பின்வாசல் வழியாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான நிலைமையொன்று காணப்பட்டது.
 
இது மக்களின் போராட்டம். மக்களின் அதிகாரத்தை புரிந்துக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, அந்த அதிகாரத்தை இல்லாது செய்ய முயற்சித்து வருகின்றார். அதனையே நாம் தற்போது அவதானிக்கின்றோம். எமக்கென்று ஜனநாயக உரிமைகள் உள்ளன.
 
எனினும், அவருக்கு எதிராக குரல் எழுப்ப முடியாத நிலைமை தற்போது இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு மத்தியில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளது.
 
இந்த சட்டத்தின் மூலம் எந்தவொரு நபரையும் பயங்கரவாதியாக சித்தரிக்க முடியும். நீதிமன்றத்தின் அதிகாரம் தேவையில்லை. நீதிமன்றத்தின் உத்தரவு தேவையில்லை. பிரதேசத்திற்கு பொறுப்பாக பிரதி போலீஸ் மாஅதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
நபரொருவரின் வீட்டில் அறிவிக்காது, எந்தவொரு நபரையும் கைது செய்வதற்கான அதிகாரம் வழங்கப்படுகின்றது. அதனால், மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு இந்த சந்தர்ப்பத்தில் இருந்த மக்கள் எண்ணிக்கையும், தற்போது காணப்படுகின்ற மக்கள் எண்ணிக்கையும் மாற்றம் காணப்படுகின்றது. மக்களுக்காகவே நாம் முன்னிட்டு போராடுகின்றோம்.
 
அன்றும் அதற்காகவே வருகைத் தந்தோம். இன்றும் அதற்காகவே வருகைத் தந்துள்ளோம். எதிர்காலத்தில் மக்கள் உணர்வதற்காக காலம் வரும். காலத்தை கடக்க வேண்டாம். இந்த நிலைமையை உடனடியாக புரிந்துக்கொள்ளுங்கள்" என மொஹமட் புஷ்லி தெரிவிக்கின்றார்.
 
இந்த விடயம் தொடர்பில் மற்றுமொரு சமூக செயற்பாட்டாளராக உதார, பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
 
''ஒரு வருடத்திற்கு முன்பும் இவ்வாறான சிறு எண்ணிக்கையிலானோலே முதலில் வீதிக்கு இறங்கி போராடினார்கள். மனதிற்குள் மாத்திரமே பிரச்னை அன்று காணப்பட்டது. அதை வெளியிடுவதற்கான இடமொன்று கிடைக்கவில்லை.
 
அதனை வெளிப்படுத்தும் இடமாக காலி முகத்திடம் போராட்டம் அமைந்தது. அந்த இடத்திற்கு சிறு அளவிலானோர் முதலில் வருகைத் தந்தனர். முதலில் பெரியளவில் மக்கள் இருக்கவில்லை. அதேபோன்று, இன்றும் சிறு அளவிலானோரே இருக்கின்றனர்.
 
இந்த சிறு அளவிலானோரை சூழவே மேலும் பலர் இணைவார்கள் என நம்புகின்றேன். வீட்டில் இருக்கும் அனைவரும் இந்த போராட்டத்தை நடத்த முடியாது. அனைவருக்கும் மனதில் பிரச்னைகள் உள்ளன.
 
அந்த பிரச்னைகளுக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. தற்காலிய தீர்வுளே வழங்குகின்றனர். இதேபோன்று, இளைஞர்களிடம் நாடு கையளிக்கப்பட வேண்டும்." என சமூக செயற்பாட்டாளர் உதார தெரிவிக்கின்றார்.
 
இலங்கை போராட்டம்
போராட்டம் வலுவிழக்க காரணம் என்ன என்பது தொடர்பில், ஊடகவியலாளர் யசிஹரனிடம் பிபிசி தமிழ் வினவியது.
 
''போராட்டம் முன்னெடுக்கப்பட்டமைக்கான காரணம் கூட மக்களுக்கு இன்று சரியாக தெரியவில்லை. திடீரென ஒரு நெருக்கடி வந்தது. அப்போது மக்கள் வீதிக்கு இறங்கி போராடினார்கள். ஆனால், இப்போது நிலைமை சுமூகமானதை போன்று மக்கள் நினைக்கின்றார்கள்.
 
அத்தியாவசியமாக செய்யக்கூடியவை அனைத்தையும் தங்களால் செய்துக்கொள்ள முடியும் என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. நெருக்கடியிலிருந்து நாடு ரொம்பவே முன்னோக்கி வந்துள்ளது.
 
உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகமாக இருந்தாலும் கூட, அந்த பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்பதை ஒரு விடுதலையாக மக்கள் பார்க்கின்றார்கள். இது நெருக்கடியிலிருந்து ஒரு விடுதலை என்றே மக்கள் பார்க்கின்றார்கள்.
 
போராட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் தற்போது பொதுமக்களுக்கு சரியாக அபிப்ராயம் கிடையாது. போராட்டம் செய்வது யார் என்பது கூட தெரியாமல் தான் போராட்டத்திற்கு மக்கள் வந்தார்கள்.
 
இலங்கை
அந்த போராட்டம் பின்னரான காலத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினால், மக்களுக்கு அதில் தற்போது ஈடுபாடு கிடையாது. இப்போது போராட்டத்தை செய்பவர்கள் யார் என்பது கூட மக்களுக்கு தெரியாது என்பது தான் உண்மை.
 
போராட்டம் இடம்பெற்ற காலத்தில் கூட ஒவ்வொரு குழுக்களாக பெயரிடப்பட்டிருந்தார்கள். இடதுசாரிகள், சிவில் அமைப்புக்கள் என கூறினார்கள்.
 
அன்று மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. காரணம், மருத்துவர்கள், சட்டத்தரணிகள் என பலரும் முன்னின்று போராட்டக்காரர்கள் என காட்டிக்கொண்டார்கள்.
 
ஆனால் தற்போது அரசியல் சாயம் பூசப்பட்ட அரசியல் குழுக்கள் இருக்கின்றமையை மக்கள் அறிந்துள்ளார்கள். அதனாலேயே, மக்களுக்கு இந்த போராட்டத்தில் ஈடுபாடு கிடையாது," என ஊடகவியலாளர் யசிஹரன் தெரிவிக்கின்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்