Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமூக நீதி மாநாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, தனியார் துறையில் இட ஒதுக்கீட்டிற்கு கோரிக்கை

Advertiesment
DMK
, செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (16:30 IST)
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டுமென்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்றும் இன்று நடந்த அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று இணைய வழியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலைவர்கள் இணையம் மூலமும் நேரிலும் பங்கேற்றனர். புதுதில்லி கஸ்தூரிபாய் காந்தி சாலையில் உள்ள ஒரு அரங்கில் நேரில் வந்த தலைவர்கள் பேசும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு எதிராக உள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பிஹார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு - காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்துகொண்டு இந்தக் கூட்டத்தில் பேசினர்.

சமூக நீதிக்கான அமைப்புகள், வேறு சில அரசியல் கட்சியின் தலைவர்கள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
webdunia

இந்தக் கூட்டத்தின் துவக்கத்தில் பேசிய மூத்த பத்திரிகையாளரான திலீப் மண்டல், "மிக முக்கியமான தருணத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வைக்கும் திராவிட மாடலை, மற்ற மாநில அரசுகளும் மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். இந்த மாடல் தற்போது வட இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. இது சமூக நீதியின் நூற்றாண்டு. இந்த நூற்றாண்டில் மத்திய தர வர்க்கத்தினரின் அபிலாஷைகளை பூர்த்திசெய்ய இந்த மாடல் உதவும்" என்று குறிப்பிட்டார்.

தி.மு.கவின் சார்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன், மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் பல குளறுபடிகளைச் செய்வதாகக் கூறினார். உதாரணமாக, சமீபத்தில் மருத்துவ கவுன்சில் அகில இந்திய இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் அதிக மதிப்பெண்களைப் பெறுபவர்களை பொதுப் பிரிவில் சேர்க்காமல் ஓபிசி பிரிவில் சேர்ப்பதாக குற்றம்சாட்டிய வில்சன், இதைத் தடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டுமெனக் கூறினார். மேலும், உடனடியாக ஜாதி ரீதியான கணக்கெடுப்பைத் தொடங்க வேண்டும் என்றும் நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு பேசிய திருணமூல் காங்கிரசைச் சேர்ந்த டெரிக் ஓ ப்ரையன், பா.ஜ.கவைச் சாடியதோடு, தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சில திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டார். "பழங்குடியினர், பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமைகள் 26 சதவீதம் உ.பியில்தான் நடக்கிறது. அங்கே எந்தக் கட்சி ஆள்கிறது? மத்தியப் பிரதேசத்தில் 30 சதவீதம் நடக்கிறது. அங்கே எந்தக் கட்சி ஆள்கிறது? தமிழ்நாட்டிலிருந்து சில படிப்பினைகளைப் பெற முடியுமென வில்சன் சொன்னார். நான் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படும் சில விஷயங்களை சொல்கிறேன். ஒவ்வொரு மாநிலமும் வேறு மாநிலங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற முடியும். மேற்கு வங்கத்தில் 81 லட்சம் பெண்களுக்கு பண உதவி செய்யப்படுகிறது. ரூப ஸ்ரீ என்ற திட்டத்தில் பெண்களுக்கு திருமண உதவி செய்யப்படுகிறது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பயனடைகிறார்கள். ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தும்போது, பிற மதங்களுக்கு மாறிய தலித்துகளையும் கணக்கெடுக்க வேண்டும்" என்றார் டெரிக் ஓ பிரையன்.

மேலும், "பா.ஜ.கவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் பலர் பங்கேற்க விரும்பவில்லை. சிலர் மதில் மேல் பூனையாக உட்கார்ந்திருக்கிறார்கள். பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் இதில் இணைய வேண்டுமென தாழ்மையுடன் கோருகிறேன். ஒய்எஸ்ஆர் காங்கிரசைச் சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி இதில் இணைய வேண்டும்" என்றும் குறிப்பிட்டார் அவர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீகைச் சேர்ந்த முகமது பஷீர் பேசும்போது, சமூகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவினரை புண்படுத்தும்படி சட்டம் இயற்றுவதிலேயே பா.ஜ.க. கவனம் செலுத்தவதாகக் குற்றம்சாட்டினார். "தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையை ஒழித்துக்கட்ட பா.ஜ.க. முயல்கிறது. அதன் முதல் அடிதான் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு. அடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இருந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டைப் பறித்துள்ளனர். இந்த நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் இன அழிப்பு போன்ற சூழலை எதிர்கொள்கிறார்கள். சமூகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவினரை புண்படுத்தும்படி சட்டம் இயற்றுவதிலேயே இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் ஒவ்வொன்றும் இதைச் செய்து வருகின்றன. அதைத் தடுக்க முயல்பவர்கள், விமர்சிப்பவர்கள் மீது வழக்கு தொடரப்படுகிறது" என்றார் அவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீத்தாராம் யச்சூரி பேசும்போது, "சமூக நீதிப் பயணத்தில் இட ஒதுக்கீடு மிக முக்கியமானதுதான். ஆனால், அது மட்டுமே போதுமானதல்ல. இட ஒதுக்கீடு பொருளாதார பலனாக மாற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
webdunia

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கூட்டத்தின் முடிவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசச் செயலாளர் டி.ராஜா. "அறிவில்லாத, பழமைவாத சமூகத்தை உருவாக்க பாசிச சக்திகள் முயல்கின்றன. ஜாதி, வர்த்தம், ஆணாதிக்கம் ஆகியவைதான் அடிப்படையான பிரச்சனைகள். ஜாதி என்பது ராட்சசன். எங்கு போனாலும் அது வரும். அதைக் கொல்லாவிட்டால், மீட்சியே கிடையாது. இந்தச் சூழலில் ஜாதியை ஒழிக்கும் வகையில் நாம் பணியாற்றுவது எப்படி? இட ஒதுக்கீடு மிக முக்கியம் என்கிறோம். ஆனால், எல்லாம் தனியார்மயமாகிவிட்ட நிலையில், இட ஒதுக்கீட்டை வைத்து என்ன செய்வது? ஆகவே தனியார் துறையிலும் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும். ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி பங்கேற்றார். அவர் பேசும்போது சமூக நீதிக்கான இந்தப் பயணத்தில் காங்கிரஸ் உடன் நிற்பதாகக் குறிப்பிட்டார். "இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் ஸ்டாக்ஹோம் விளைவால் பாதிக்கப்பட்டு அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்களை நாம் அந்த அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க வேண்டும். இன்று சமூக நீதிப் பாதையில் பின்னோக்கிப் பயணிக்கிறோம். நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். காங்கிரஸ் இந்தப் பயணத்தில் உடன் நிற்கிறது" என்றார் வீரப்ப மொய்லி.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போதும் தனியார்துறை இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார். "சமூக நீதிக்கு பங்கம் வந்தால், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் பாதிப்பு. பா.ஜ.க. ஒரு சாதாரண அரசியல் கட்சி அல்ல. அது சங்க பரிவாரங்களின் அரசியல் பிரிவு. சங்கபரிவாரங்கள் சமூக நீதியை விரும்பவதில்லை. அதற்கு எதிராக இருக்கிறார்கள். பா.ஜ.க. அரசு, அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க விரும்புகிறது. நாம் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, இந்த சனாதன சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும். இட ஒதுக்கீட்டை வரம்பை அதிகரிக்க நாம் கோர வேண்டும். பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்புக்குப் பிறகு இதில் தடையிருக்காது. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு வழியில்லை என்பதால், தனியார் துறையிலும் ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டை வலியுறுத்த வேண்டும். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்த வேண்டும்" என்றார் திருமாவளவன்.

சமூக நீதிக்கான போராட்டம் என்பது, அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமல்ல என்றும் சமூக அதிகாரத்திற்கான போராட்டம் என்றும் குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. "இந்தியாவில் உள்ள இந்த ஜாதி அமைப்பு பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. துரோணாச்சாரியார், ஏகலைவன் ஆகியோரின் காலம் முடிந்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் சமத்துவத்திற்காகப் போராடியிருக்கிறோம். நாம் வெறும் அரசியல் அதிகாரத்தைக் கேட்கவில்லை. சமூக அதிகாரத்தைக் கேட்கிறோம். பொதுமக்களிடம் இதற்கான கருத்தை உருவாக்குவோம்" என்றார் கி. வீரமணி.

இந்த மாநாட்டின் இறுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு சரியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும், நீதித் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை தனது பேச்சில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். "சமூக நீதியை அடைவது ஒரு மாநிலத்தின் பிரச்சனை அல்ல. அனைத்து மாநிலங்களின் பிரச்சனை. ஜாதியால் ஒடுக்கப்படுபவர்கள், அதே ஜாதியின் அடிப்படையில்தான் மேலே கொண்டுவரப்பட வேண்டும். சமூக ரீதியாக, கல்விரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை கைதூக்கிவிடுவதுதான் சமூக நீதி. அதுதான் அரசியலமைப்புச் சட்ட வரையறை. 340வது பிரிவில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக என்பதுதான் வரையறை. அதுதான் அரசியலமைப்புச் சட்ட திருத்தத்திலும் சொல்லப்பட்டது. "சமூக ரீதியாக, கல்வி ரீதியாக" என்று இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில் "பொருளாதார ரீதியாக" என்பதையும் வஞ்சகமாக பா.ஜ.க. சேர்த்துவிட்டது. பொருளாதாரம் என்பது நிலையான அளவுகோல் அல்ல. இன்று ஏழையாக இருப்பவர் நாளை பணக்காரர் ஆகலாம். இன்று பணக்காரராக இருப்பவர் நாளை ஏழையாக ஆகலம். அல்லது பணம் இருப்பதை மறைக்கலாம். ஏழைகளுக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. அது பொருளாதார நீதி ஆகுமே தவிர, சமூக நீதியாகாது. ஏழைகள் என்றால் எல்லா ஏழைகளும்தானே இருக்க முடியும். அதில் என்ன உயர் சாதி ஏழைகள்? ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளைப் புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா? அதனால்தான் அதை எதிர்க்கிறோம். உயர்சாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதுதான் பா.ஜ.கவின் திட்டம். இதுவரை இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள், இப்போது இதை ஆதரிக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டின் மூலம் எல்லா சமூக மக்களும் படித்துவிடுகிறார்கள், வேலைக்குப் போகிறார்கள் என்ற வன்மம்தான் "இட ஒதுக்கீட்டால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது" என்று சொல்ல வைத்தது. 10 சதவீத இட ஒதுக்கீட்டால் தகுதி போகாதா. 100 ஆண்டுகளுக்கு முன்பாக உயர்சாதியினர் மட்டுமே படிக்கும் காலம் இருந்ததல்லவா, அதை மீண்டும் உருவாக்க நினைக்கிறார்கள். இதனைத் தடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். நீதித் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். இவற்றை அகில இந்திய ரீதியில், மாநில ரீதியில் சமூக ரீதியில் கண்காணிக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சமூக நீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது. இந்த கண்காணிப்புக் குழு வேலைவாய்ப்பு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சரியாக செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும். இது போன்ற கமிட்டிகளை எல்லா மாநிலங்களிலும் அமைக்க வேண்டும். இந்த மாநாட்டில் பங்கேற்றிருப்பவர்கள் பெரியார், அம்பேத்கர், ஜோதிராவ் பூலே பெயரில் படிப்பு வட்டங்களை நாடு முழுவதும் அமைக்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமதர்மத்தை சமூக நீதியை நிலை நாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும். தனித்தனி குரலாக இருந்தால் பயனில்லை. கூட்டுக் குரலாக இருக்க வேண்டும். இந்த சித்தாந்தத்தை ஏற்கும் கட்சிகளிடையே ஒற்றுமை தேவை. இது ஒரு மாநிலத்தில் மட்டும் நடந்தால் போதாது. இந்தியா முழுமையும் நடக்க வேண்டும். சமூக நீதி, சமத்துவ நீதி, சகோதரத்துவம் நிறைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்து போரிடுவோம்" என்று குறிப்பிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட சமயத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு இணைய வழியில் முழுமையாக நடக்கும் முதல் கூட்டம் இதுதான்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்: மின்வாரிய அதிகாரிகளுக்கு துரைமுருகன் டோஸ்