Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்

இரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்
, வெள்ளி, 27 நவம்பர் 2020 (23:58 IST)
இரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
 
அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள இரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஸரீஃப், இது ஒரு நாட்டின் ஆதரவுடன் நடந்த தீவிரவாத செயல் என்று தெரிவித்துள்ளார்.
 
இரானிய அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாக ஃபக்ரிஸாதே இருந்ததாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன.
 
மேலும், மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை, "இரானிய வெடிகுண்டு உலகின் தந்தை" என்று ராஜீய அதிகாரிகள் அழைப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இரான் அரசு, அதன் அணுசக்தி மேம்பாட்டுக்காக யுரேனியம் செறிவூட்டலை பெருக்கி வருவதாக வல்லரசு நாடுகள் கவலை வெளியிட்டு வந்த நிலையில், அந்நாட்டின் அணுசக்தி தலைமை விஞ்ஞானி கொல்லப்பட்டிருக்கிறார். செறிவூட்டப்பட்ட யுரேனியம், அந்நாட்டின் அணுசக்தி சிவில் திட்டங்களுக்கு மட்டுமின்றி ராணுவ அணு ஆயுத திட்டங்களுக்கும் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது.
 
ஆனால், அமைதி பயன்பாடுக்கு மட்டுமே தமது அணுசக்தி திட்டம் உள்ளது என்று இரானிய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
 
2010-2012ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவற்றின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக இரான் குற்றம்சாட்டியது.
 
இந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் இரானிய அணுசக்தி திட்டம் தொடர்பாக நிகழ்ச்சியொன்றில் பேசியபோது, ஃபக்ரிஸாதேவின் பெயரை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு குறிப்பிட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
 
என்ன நடந்தது?
 
ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டது தொடர்பாக இரானிய பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இரானிய அணுசக்தி அமைச்சகத்தின் அங்கமான ஆராய்ச்சி அமைப்பின் தலைமை விஞ்ஞானியான ஃபக்ரிஸாதே சென்ற வாகனத்தை ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இலக்கு வைத்ததாக கூறப்பட்டுள்ளது.
 
"பாதுகாவலர்களுடன் வாகனத்தில் சென்ற அவரையும் அவரது காவலர்களையும் இலக்கு வைத்த தீவிரவாதிகள், அனைவரையும் சுட்டுத்தள்ளினார்கள். ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஃபக்ரிஸாதேவை கொண்டு சென்றபோதும் அவரை உயிர் பிழைக்க வைக்கும் மருத்துவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. அதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்து விட்டது," என்று இரானிய பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை ஃபக்ரிஸாதே சென்ற கார் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்சார்ட் நகரில் கார் வெடிப்பு சத்தம் கேட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
"இரானின் தலைசிறந்த விஞ்ஞானியை தீவிரவாதிகள் கொன்று விட்டனர்," என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஸாரிஃப் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
 
 
"கோழைத்தனமான இந்த தாக்குதல் பின்னணியில் இஸ்ரேலின் பங்கு இருப்பதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் போரை விரும்பும் சூழ்ச்சியாளர்களின் நோக்கம் அதில் தெரிகிறது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஒரு நாடு கட்டவிழ்த்த பயங்கரவாத செயலை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் ஸாரிஃப் அழைப்பு விடுத்துள்ளார்.
 
 
இரானிய அணுசக்தித்துறையில் தனித்துவம் வாய்ந்த சிறந்த விஞ்ஞானி ஃபக்ரிஸாதே. இரானிய புரட்சிகர ராணுவப்படையின் உயரதிகாரியாகவும் அவர் விளங்கினார்.
 
இரானிய ஆயுத திட்டங்களின் சக்திவாய்ந்த மூளையாக ஃபக்ரிஸாதே இருந்தார் என அவரை மேற்கத்திய பாதுகாப்பு படைகளின் வட்டாரங்கள் அழைத்தன.
 
2018ஆம் ஆண்டில் இஸ்ரேல் திரட்டிய ரகசிய ஆவணத்தின் அடிப்படையில், இரானிய அணு ஆயுத திட்டங்களை உருவாக்கியதே ஃபக்ரிஸாதே என்று தெரிய வருகிறது.
 
இரானிய அணு ஆயுத திட்டத்தின் தலைமை விஞ்ஞானி ஃபக்ரிஸாதே. இந்த பெயரை நினைவில் கொள்ளுங்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு வெளிப்படையாகவே அவரது பெயரை நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
 
2015ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இரண்டாவது உலக போரின்போது முதலாவது அணு ஆயுதங்களை தயாரித்த ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெமருடன் ஃபக்ரிஸாதே ஒப்பிடப்பட்டிருந்தார்.
 
இந்த நிலையில், அவரது படுகொலை தொடர்பான தமது கருத்தை இன்னும் இஸ்ரேல் வெளியிடவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஜிட்டல் நாணயத்தின் அடுத்தக்கட்ட சோதனைக்கு தயாரானது சீனா