விழுப்புரம் மாவட்டம் கண்டச்சிபுரம் எஸ்.பில்ராம்பட்டு பகுதியை சேர்ந்த நல்லேந்திரன், சுதா தம்பதியர். இவர்கள் இருவருமே விவசாய கூலி மற்றும் செங்கல் சூளையில் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முதல் இரண்டு பிள்ளைகளும் கல்லூரி முடித்துவிட்டு வேலை செய்து வருகின்றனர்.
மூன்றாவதாக இருக்கும் மகள், கண்டச்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இதனிடையே மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்த மகளை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாத சூழலில் பெற்றோர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடும்ப பொருளாதார சூழலும் அதற்கு காரணமாக இருந்துள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர் பெற்றோர். குறிப்பாக திருமணம் செய்து கொண்டு மேல்படிப்பைத் தொடரும்படி பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாத அவர் தன்னால் மேற்படிப்பு படிக்க முடியவில்லை என்ற மன வேதனையில் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.