உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் 10 நாடுகளில் கொரோனா தடுப்பூசியே போடப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் உலக நாடுகள் பல தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. முக்கியமாக தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில் மேலும் சில நாடுகள் தேவையான தடுப்பூசிகளை இந்த நாடுகளிடம் பணம் கொடுத்து வாங்கி வருகின்றன.
இந்நிலையில் உலகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட ஏழை நாடுகளில் இன்னும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை, அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் இதுவரை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கூட தடுப்பூசி செலுத்தப்படவில்லை என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு இதே நிலை நீடித்தால் அந்த நாடுகளில் உயிரிழப்புகள் அபாயகரமாக இருக்கும் என வருத்தம் தெரிவித்துள்ளது.