சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகன் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது மாற்றங்கள் சில பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமமும் விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது.
இதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லாரி, பைக் ஓட்டவும் டிசம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக கால் டாக்ஸி நிறுவனங்கள், பெண் ஓட்டுநர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளன. உபெர் மற்றும் துபாயை சேர்ந்த கரீம் ஆகிய கால் டாக்ஸி நிறுவனங்கள் இந்த முயற்சியை துவங்கியுள்ளனர்.
இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் பெண் ஓட்டுநர்களை பணியமர்த்தபடுவார்கள் என தெரிகிறது. சவுதி அரேபியாவை பொருத்தவரையில் கால் டாக்ஸி வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் பெண்களே. எனவே, இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.