தொடர்ந்து மத்திய தரைக்கடலில் அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் அடுத்து சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக காசாவில் ஹமாஸுடன் போர், ஹெஸ்புல்லாவை தாக்குவதாக லெபனான் மீது போர், ஈரானோடு யுத்தம் என்று அடுத்தடுத்து இஸ்ரேலின் போர் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்பட்ட நிலையில் ஈரான் ஏவுகணைகளை மழையாக பொழிந்து இஸ்ரேலை தாக்கியது. இந்த போரில் அமெரிக்கா தலையிட்டு இரு நாடுகளிடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்போது மீண்டும் சிரியாவை தாக்கியுள்ளது இஸ்ரேல். சிரியாவில் ஏற்கனவே அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை நிலவி வரும் நிலையில் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமையகம் மீது குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். இதில் 18 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கு ஏற்கனவே அரசியல் ரீதியான மோதல்கள் இருந்துதான் வருகிறது. இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காத சிரியா, அதன் குடிமக்களையும், பாஸ்போர்ட்டையும் சிரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவே வைத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க சிரியாவில் மைனாரிட்டியாக உள்ள ட்ரூஸ் இனக்குழுவிற்கும், சிரிய பாதுகாப்புப்படைக்கும் இடையே கடந்த சில வாரங்களாக தெற்கு சிரியாவில் மோதல் வலுத்து வருகிறது. இதில் ட்ரூஸ் மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் பேசி வருகிறது.
சிரியாவில் ஆளும் பஷர் அல் அசாத் குடும்பத்திற்கு எதிரான கொள்கை கொண்ட ட்ரூஸ் மக்கள் தனி மாகாண கோரிக்கையோடு, தங்கள் நிலத்தில் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட ஜிகாதி கும்பலின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகதான் தற்போது இந்த தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல்.
Edit by Prasanth.K