வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பவில்லை என்றும், தனித்து போட்டியிடவே விரும்புவதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் விஜய்க்கு அதில் விருப்பம் இல்லை என்றும், தனித்துப் போட்டியிடவே அவர் விரும்புகிறார் என்றும் இன்று அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
தனித்து தேர்தலை சந்திக்க விஜய் வியூகம் வகுத்து வருகிறார் என்றும், அவர் தனித்து போட்டியிட்டாலும் கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசியல் விமர்சகர்கள் விஜய் தவறான முடிவை எடுக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன் விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தனர் என்பதையும், விஜய் அந்த தவறை செய்யக்கூடாது என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். திமுக கூட்டணியை முறியடிக்க வலிமையான கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.