இந்தியாவுக்கான வரி விதிப்பினால், ரஷ்யாவின் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியதன் காரணமாக, இந்தியா மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட 25% வரியுடன், கூடுதலாக 25% வரி விதிக்கப்படுவதாக கடந்த வாரம் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் பேசியதாவது: “ரஷ்யா மீண்டும் தங்கள் நாட்டை மேம்படுத்தத் தொடங்க வேண்டும். அந்த நாடு மிகப்பெரிய ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. ஆனால் தற்போது, ரஷ்யாவின் பொருளாதாரம் சிறப்பாக இல்லை. இந்தியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள இந்த வரிவிதிப்பால், ரஷ்யா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மிகப்பெரிய நாடு, அங்கு 11 வகையான நேர மண்டலங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். நிலப்பரப்பின் அடிப்படையில் பார்த்தால் ரஷ்யா மிகப்பெரியது” என்று டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, காலணி போன்ற பொருட்களின் ஏற்றுமதியும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.