உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் தாயும், பச்சிளம் குழந்தையும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி பல நாட்களாகியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலினால் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அகதிகளாக அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பல உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் தொடர்ந்து உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலுமே பல ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைனின் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரமான ஒடேசாவின் குடியிருப்பு பகுதிகளை ரஷ்யா ராணுவம் ஏவுகணைகளை தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை தாக்குதலில் பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 8 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தன் மனைவி வெலேரியா, பெண் குழந்தை கிராவின் படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள யூரி தன் வாழ்க்கையை இழந்துவிட்டதாக கூறியுள்ளார். அதை கண்டு சோகத்தில் ஆழ்ந்த பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.