உலக அளவில் உயரிய நோக்குடன் செயல்படுவதாக பார்க்கப்படும் இந்தியாவின் இலவச மதிய உணவுத் திட்டம், கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு ஏப்ரல் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தை மீண்டும் தொடங்குவது பல பள்ளிகளுக்கு சவாலாக உள்ளது என்கிறார் இந்த செய்தியை வழங்கும் ஆஸ்தா ராஜ்வன்ஷி.
கொரோனா பரவலின்போது பள்ளிகள் மூடப்பட்டதால், இலவச மதிய உணவை நம்பியிருந்த லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியாக இருந்தனர். இந்தியா முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மும்பையில் உள்ள சங்கர்வாடி பொதுப் பள்ளிக்குத் மீண்டும் செல்லத் தொடங்கினார் அல்பிஷா.
13 வயது நிரம்பிய சிறுமி அல்பிஷா, தனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை மீண்டும் சந்திக்கப்போகின்ற உற்சாகத்தில் இருந்தாள், எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் சூடான இலவச மதிய உணவை உண்ணலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், எனக்கும் என் உடன்பிறந்தவர்களுக்கும் அவரால் எப்போதும் மதிய உணவு தயாரிக்க முடியாது," என்று அவர் கூறினார்.
ஆனால் ஒரு பெரிய அரசாங்க திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் உணவுகள், ஏப்ரல் தொடக்கம் வரை மீண்டும் தொடங்கப்படாதது, அல்பிஷாக்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு பசியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
"இது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஏனென்றால், முன்பு நண்பர்களும் நானும் ஒன்றாக மதிய உணவு உண்பது வழக்கம்," என்று அவர் கூறினார். பொதுவாக கொரோனாவுக்கு முன்பு, பரிமாறப்படும் கிச்சடி அல்லது அரிசி மற்றும் பருப்பில் சீரகப் பொடியைத் தூவி சக மாணவிகளுடன் பகிர்ந்து சாப்பிடுவார் என விவரித்தார்.
ஊரடங்கின் போது, வீட்டில் இருந்தபோது அல்பிஷா மதியம் உணவு சாப்பிடமாட்டார். இப்போது பசியுடன், வகுப்பில் கவனம் செலுத்துவது கடினமாக உள்ளது, குறிப்பாக அவளுக்குப் பிடித்த பாடமான அறிவியல் பாடத்தின் போது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்தி வரும் பிஷோ பராஜூலி, இதற்கான காரணம் எளிமையானது என்கிறார். "பசியுள்ள குழந்தையால் கணிதம், ஆங்கிலம், அறிவியல் அல்லது எதிலும் கவனம் செலுத்த முடியாது," என்கிறார் அவர்.
1925ஆம் ஆண்டு இந்தியாவின் தெற்கு நகரமான சென்னையில் தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டத்தின் மூலம், இதுவரை அல்பிஷா போன்ற சுமார் 11.8 கோடி இந்திய குழந்தைகள் பயன் அடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு பிரதமர் போஷன் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட மதிய உணவு திட்டம், கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை சேர்ந்த 87 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
இந்த திட்டம் கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களால் பாராட்டப்பட்டுகிறது. காரணம், இந்த திட்டம் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதன் மூலம் நேர்மறையான ஊட்டச்சத்து தொடர்பான விளைவுகளை கொடுத்துள்ளது, அதேபோல் பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளை, குறிப்பாக பெண்கள் தொடர்ந்து பள்ளிகளுக்கு வரக்கூடிய சூழலை ஏற்படுத்துகிறது.
"குழந்தைகள், சூடான உணவை கண்ணிமைக்கும் நேரத்தில் சாப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். உணவு, மாணவர்களின் பசி, எச்சரிக்கையுடனான செயல் மற்றும் சீரான கற்றல் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது," என்று கூறுகிறார் பிஷோ பராஜூலி.
ஆனால் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது பல பள்ளிகளில் சவாலாக உள்ளது என்கிறார் அவர்.
மேலும் கிராமப்புற பள்ளிகளில், உணவு சமைக்கப் பயன்படும் தானியங்கள் மற்றும் பருப்பு போன்ற மூலப்பொருட்கள் தாமதமாக வருவதால் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துவது சவாலாக இருக்கிறது. அதே போல் நகரங்களில் உள்ள பள்ளிகளில், குழந்தைகளுக்கான உணவு சமைக்க, மையப்படுத்தப்பட்ட சமையலறைகளுடனான ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் மதிய உணவுத் திட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம், முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, தொற்றுநோய் காலம் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதைக் குறிப்பிட்டு, மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
"குழந்தைகள் மீண்டும் பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளதால், அவர்களுக்கு இன்னும் சிறந்த ஊட்டச்சத்து தேவைப்படுகிறது," என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.
கடந்த ஆண்டு, உலகளாவிய பசி அட்டவணையில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் இருந்தது, அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள், ஏழ்மையான மற்றும் அரசியல் ரீதியாக பின்தங்கிய நாடுகளான சப்-சஹாரா ஆப்ரிக்காவில் உள்ள கேமரூன் மற்றும் தான்சானியா போன்ற நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது.
2019 முதல் 2021 வரையிலான தேசிய குடும்ப நலக்கணக்கெடுப்பில், இந்தியாவில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், எடை குறைவாகவும் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
2015-2016 இல் நடத்தப்பட்ட முந்தைய கணக்கெடுப்போடு ஒப்பிடுகையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் முன்னேறிய மேற்கு மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் தெற்கு மாநிலமான கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் எடை குறைந்த மற்றும் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிய வருகிறது.
உலகளாவிய உணவு பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு பரவலான வறுமை, வட்டார பசி, விரைவான மக்கள்தொகை வளர்ச்சி, குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிர்வாகத்திறன் மற்றும் மோசமான சுகாதார அமைப்புகளே காரணம் என்று கூறுகின்றனர்.
இன்றைய சூழலில் தொற்றுநோய் பாதிப்புகள் இந்த பிரச்னையை மேலும் அதிகரித்துள்ளது, குறிப்பாக கிராமப்புற மற்றும் குடிசைவாழ் குடியிருப்பு பகுதிகளில் வேலை வாய்ப்பு பிரச்னை மற்றும் உதவி சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாததால் இங்கு பாதிப்பு அதிகம் என்கின்றனர்.
அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்ட பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் தாங்களாகவே உணவை விநியோகிக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர், ஆனால் இது எதிர்பார்த்ததுபோல் பெரும்பான்மையான பகுதிகளில் பலனளிக்கவில்லை.
உதாரணமாக, மும்பையில் உள்ள சங்கர்வாடி பள்ளியில், சில மாணவர்களுக்கு 'டீச் ஃபார் இந்தியா'(Teach for India) திட்டத்தின் மூலம் இலவச உணவைப் விநியோகித்து வருகின்றனர். டீச் ஃபார் இந்தியா என்ற இந்தத் திட்டத்தின் மூலம் தனியார் முதலீட்டின் உதவியுடன் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் மதிய உணவிற்கு தங்கள் ஆசிரியர்களை நம்பியிருக்கிறார்கள்.
12 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளியில் கற்பித்த, அரசுப் பள்ளி ஆசிரியரான 49 வயது இர்பான் அஞ்சும், மதிய உணவு தனது மாணவர்களுக்கு கிடைத்த "கடவுளின் பரிசு" என்கிறார்.
அவரது வகுப்பில் படிக்கும் 26 பேரில், குறைந்தது எட்டு முதல் பத்து மாணவர்கள் தினசரி மதிய உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவதில்லை அல்லது உணவு வாங்குவதற்கு பணம் கொண்டு வருவதில்லை. "இந்தக் குழந்தைகள் மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வருகிறார்கள். அவர்களில் பலர், உணவு விநியோகிக்கப்படவில்லை என்றால் பசியுடன் இருப்பார்கள்"என்று கூறினார்.
பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, இந்த ஆசிரியர் உள்ளூர் விற்பனையாளரிடமிருந்து சமோசாக்கள் அல்லது இனிப்புகளை வாங்கி தனது வகுப்பிற்கு வழங்கியுள்ளார். "பசி தாங்க முடியாமல் குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுகின்றனர். அவர்களுக்கு உணவளிப்பதை எனது கடமையாக உணர்கிறேன்", என்று கூறினார்.
குழந்தைகளுக்கு உணவு முறையாகவும் சரியான நேரத்திலும் சென்றடைவதை உறுதி செய்ய, மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் சவால்களைத் தீர்க்க முடியும் என்கிறார் பராஜூலி.
"இது தொடர்பாக வழிநடத்துதல் மற்றும் உதவிகள் சரியாக செய்யப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
இந்தியாவின் மதிய உணவுத் திட்டம், மற்ற நாடுகளிலுள்ள திட்டங்களை காட்டிலும் தனித்துவமாக இருப்பது ஏனென்றால், அது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது: "பள்ளிச் சூழலின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது" என்று பராஜூலி கூறினார்.
இந்த சட்டத்தின் கீழ் வருவதால், இந்திய அரசாங்கம் இந்த திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்பதும் அல்லாமல், பொது விநியோக முறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் போன்ற திட்டங்கள் மூலம் குழந்தைகளுக்கு உணவளிக்க அந்த நிதி பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்கிறது.
"இது ஒரு பெரிய விஷயம், ஏனெனில், குழந்தைகள் சாப்பிடலாம், குடும்பங்கள் பொருளாதார ரீதியில் நிம்மதி கொள்ளலாம், மேலும் குழந்தைகள் முன்னேற்றத்தில் அரசாங்கம் நேர்மறையான விளைவுகளை அடைய முடியும்", என்று பராஜூலி கூறுகிறார்.
இத்திட்டம் மெதுவாக மீண்டும் தொடங்கப்படுவதால், குழந்தைகள் பள்ளிக்கு மீண்டும் செல்ல மற்றும் சாப்பிட வேண்டும் என்பதை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இருவரும் உறுதி செய்ய விரும்புகிறார்கள்.
மும்பையின் ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசிக்கும் 33 வயது ஷஹானூர் அன்சாரி, கொரோனா ஊரடங்கால் தச்சராக இருந்த கணவரின் மாத வருமானம் இல்லாமல் போனபோது, தனது குடும்பத்திற்கு உணவளிக்க முடியாமல் திணறினார்.
பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பின் போது அவர் கூறுகையில், "நாங்கள் ஒரு கைப்பிடி அளவு அரிசியை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்," என்றார்.
பள்ளிகள் மீண்டும் ஜனவரியில் திறக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் உணவுத் திட்டம் மீண்டும் தொடங்கியபோது அன்சாரிக்கு நிம்மதி கிடைத்தது.
"நான் முன்பெல்லாம் என் பிள்ளைகளுக்கு எப்படி உணவளிக்க போகிறேன் என்று மட்டுமே கவலைப்பட்டேன். ஆனால் இப்போது, அவர்கள் ஒரு நாள் மருத்துவர்களாக மாறுவார்கள் என்று மீண்டும் நான் நம்புகிறேன்", என்று அவர் கூறினார்.