அமெரிக்காவின் கல்வித்துறை இதுவரை அமெரிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தற்போது கல்வித்துறை கலைக்கப்பட்டு முழுமையாக அமெரிக்காவில் உள்ள மாகாண நிர்வாகங்களிடம் ஒப்படைக்கப்படும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க கல்வித்துறையின் கீழ், ஒரு லட்சம் அரசு பள்ளிகள் மற்றும் 34,000 தனியார் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், இந்த பள்ளிகளின் செலவுகளில் 85 சதவீதம் மாகாண அரசுகளே நிதியுதவியை வழங்கி வருகின்றன. கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை மட்டுமே அமெரிக்க மத்திய கல்வித்துறை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், மத்திய கல்வித்துறையை கலைத்து, அனைத்து நிர்வாகத்தையும் மாகாண அரசுகளிடம் ஒப்படைக்கும் உத்தரவில் டிரம்ப் சற்று முன் கையெழுத்திட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த ஆட்சியின்போதே இதே போன்ற ஒரு உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்தார், ஆனால் அதற்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கல்வியின் தரத்தை கண்காணிக்கும் ஒரு துறையை எப்படி ட்ரம்ப் கலைக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வித் துறையினர் கேள்வி எழுப்பி வந்தாலும், நிதி பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு உதவிகள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான திட்டங்களை அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கும் என்று ட்ரம்ப் அரசு உறுதி செய்துள்ளது.
அமெரிக்க கல்வித்துறை கலைக்கப்பட்டதை அடுத்து, அதில் பணிபுரிந்த 1,300 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.