தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அதிகாரி முறைகேடாக புத்தகங்களை விற்பனை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மதுரை மண்டல அதிகாரி இன்று பணி நீக்கம் செய்யப்பட்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்களை லட்சக்கணக்கில் மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முறைகேடில் ஈடுபட்ட திருவள்ளூர், சென்னை, திண்டுக்கல் மண்டல அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பள்ளி கல்வித்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய புத்தகங்களை தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்து லட்சக் கணக்கில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மதுரை மண்டல அதிகாரி பாடநூல்களை முறைகேடாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பாடநூல் கழகத்தின் கிடங்கில் இந்த மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு பணிபுரியும் மண்டல அலுவலர் உள்பட சிலர் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பாடநூல் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.