பாலியல் பலாத்காரக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களைக் கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டு தப்பித்துக் கொள்கிறார்கள் என்று துருக்கியில் நாட்டின் உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
துருக்கி உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக் குழுவிடம் ஏராளமான திருமண அனுமதிக் கடிதங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
காரணம், பாலியல் குற்றங்களில் சிக்கிக் கொள்பவர்கள், புகார் எதுவும் தங்கள் மீதுதரப்படாவிட்டால் எதுவும் செய்வதில்லை. ஒருவேளை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் புகார் தந்துவிட்டால், அவரையே கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
தண்டனை கிடைத்தால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கு நடந்து கொண்டிருந்தால் தாங்கள் திருமணம் செய்து கொண்டதால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.
தண்டனையிலிருந்து தப்பித்த பிறகு, பாதிக்கப்பட்டவரைக் கைவிட்டு விட்டு ஓடி விடுகின்றனர். இதுவரையில் 3 ஆயிரம் திருமணங்கள் இதுபோன்று நடைபெற்றுள்ளன என்கிறார் மேல்முறையீட்டுக் குழுத்தலைவர் முஸ்தபா டெமிர்டாக்.
துருக்கியின் சட்டப்படி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவருக்கு 16 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படும். கடந்த ஆண்டில் மட்டும் 300 பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கணவராலோ அல்லது கணவரின் குடும்பத்தினராலோ கொலை செய்யப்பட்டனர்.
பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகிறவர்களில் பலர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை டெமிர்டாக் கூறுகிறார்.
ஒரு குற்றச் சம்பவத்தில், மூன்று பேர் ஒரு இளம் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். வழக்கு பதிவானவுடன், குற்றம் புரிந்தவர்களில் ஒருவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். மூன்று குற்றவாளிகளும் விடுதலை ஆகிவிட்டனர் என்று டெமிர்டாக் சுட்டிக்காட்டுகிறார்.