ஒன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயதான சிறுமி பாரதி சரியாக படிக்கவில்லை என்பதற்காக அவரது தந்தை அடித்து துன்புறுத்தி, வாயில் வெங்காயத்தை திணித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதில் சரியாக சுவாசிக்க முடியாமல் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரின் பெலப்பூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் குட்டே தனது மகள் பாரதியை அந்த கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்.
இவர் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி இரவு வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்த தனது மகள் பாரதியிடம், அவளது பாடம் தொடர்பாக கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சரியாக பதில் சொல்லாததால் ஆத்திரம் அடைந்த சஞ்சய் குட்டே சிறுமி பாரதியை அடித்துள்ளார்.
மேலும் சிறுமிக்கு தண்டனை வழங்குவதாக கூறி, வெங்காயத்தை அந்த சிறுமியின் வாயில் வைத்து அடைத்துள்ளார். இதனால் சிறுமி பாரதி சரியாக மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை.
சிறுமி பாரதி இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறிவித்தனர். சிறுமியின் உடலை மறைக்க தந்தை சஞ்சய் குட்டே முயற்சித்துள்ளார். ஆனால் சிறுமியின் தாய் இதனை உறவினர்களுக்கு தெரியப்படுத்த அவர்கள் காவல்துறையில் சஞ்சய் குட்டே மீது புகார் அளித்தனர். காவல்துறை இன்று காலை அவரை கைது செய்தனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.