அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற சில நிமிடங்களில், பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்றாக, பிறப்பால் குடியுரிமை தொடர்பான உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப்படாது என்றும், வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது என்றும், இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது. இந்த உத்தரவு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்போது கர்ப்பமாக இருக்கும் இந்திய தாய்மார்கள் உள்பட வெளிநாட்டினர், பிப்ரவரி 19ஆம் தேதிக்கு முன்னர் சிசேரியன் மூலம் குழந்தைகளை பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கூறிய நீதிபதி, இந்த சட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.