அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மூலமாக விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்று சிதறியதால் விண்வெளியில் சிக்கிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியில் பிறந்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி வீராங்கனையாக இருந்து வருபவர் சுனிதா வில்லியம்ஸ். முதன்முறையாக 2006ம் ஆண்டில் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பயணித்தார். அதன் பின்னர் 2007 மற்றும் 2012ம் ஆண்டுகளிலும் விண்வெளிக்கு பயணித்த அவர் அதிகமுறை விண்வெளிக்கு பயணித்த பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
தற்போது ஜூன் 5ம் தேதி அன்று சுனிதா வில்லியம்ஸ் தனது 4வது விண்வெளி பயணத்தை பட்ச் வில்மோர் என்ற மற்றொரு விண்வெளி வீரருடன் தொடங்கினார். சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்ள சென்ற அவர்கள் தற்போது விண்வெளியிலேயே சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ரஷ்யாவின் ரெசர்ஸ் பி1 என்ற செயற்கைக்கோள் விண்வெளியில் வெடித்து சுக்கல் சுக்கலாக சிதறியதால் அதன் சிதைவு குப்பைகள் பல கிலோ மீட்டர் வேகத்திற்கு பூமியை சுற்றி வருவதுடன் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அருகிலேயே சுற்றி வருகின்றன. இதனால் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் வெளியேறி பூமியை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸோடு பல நாடுகளை சேர்ந்த 9 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அனைத்து விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக திரும்பி வர வேண்டும் என்பது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.