சமீபத்தில் தமிழகம், கேரளாவை தாக்கிய ஓகி புயலை அடுத்து டெம்பின் என்ற புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை மிக கோரமாக தாக்கியுள்ளது. இந்த புயலுக்கு இப்போது வரை 200 பேர் பலியாகியுள்ளதாகவும், மீட்புப்பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டானவ் மாகாணத்தில் டெம்பின் புயல் நேற்று ருத்ரதாண்டவம் ஆடியது. புயல் மற்றும் இடைவிடாத கனமழையால் அந்நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின. குறிப்பாக டுபோத், பியாகபோ ஆகிய இருநகரங்களில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைதுவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன
புயல் காரணமாக மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை ஆகிய முடங்கிவிட்டதால் மீட்புப்பணிகள் முடங்கியுள்ளதாகவும், நிவாரணப்பணிகளில் அந்நாட்டு மீட்புப்படையுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் களத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் 'கய்டாக்' என்ற புயல் தாக்கி பலத்த சேதங்களை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது