உலகமெங்கும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா சோதனை கருவிக்கே சோதனை வைத்துள்ளார் தான்சானியா அதிபர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல நாடுகள் கொரோனா இருப்பதை கண்டறிய உதவும் சாதனங்களை பிற நாடுகளிடம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் தான்சானியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சுமார் 480 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள சோதனை கருவிகளை வெளிநாடுகளிலிருந்து வாங்கியுள்ளது தான்சானியா. ஆனால் அந்த கருவிகள் சரியான முடிவுகளை காட்டுகிறதா என்பதில் தான்சானிய அதிபர் மகுபலிக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் அதிகாரிகளுக்கு நூதனமான ஒரு கட்டளையை விடுத்துள்ளார் அதிபர்.
அதன்படி சோதனை கருவிகளில் இரண்டை எடுத்து ஒரு ஆட்டிற்கும், பப்பாளிக்கும் சோதனை செய்து அதை மருத்துவ குழுவிடம் அளித்திருக்கிறார்கள் மேற்கண்ட விவரங்களை சொல்லாமலே! இது தெரியாமல் ஆய்வு செய்த மருத்துவக்குழு அந்த இரண்டு சாம்பிள்களிலும் கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சோதனை கருவிகள் போலியானவை அதை உபயோகப்படுத்த வேண்டாம் என அதிபர் மகுபலி அறிவித்துள்ளார். அத்தோடு அந்த கருவிகளை விற்ற நிறுவனங்களிடம் விசாரணை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.