ஆஃப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெருவது குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் தாலிபான் அமைப்பு பயங்கரவாத செயல்களை கைவிடுவதாக கூறியது. ஆனால் அஃப்கானிஸ்தானில் பல இடங்களிலும் வன்முறைகள் வெடித்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில் நேற்று ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், ஷாஷ் தரக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் முக்கிய அலுவலகம் நிறைந்த சாலையில் ஒரு காரிலிருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ரோமானிய ராணுவ வீரர் ஒருவர், பாதுகாப்பு படையினர் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தாலிபன் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ராஃப் கானி “பயங்கரவாதத்தை கைவிடுவோம் என கூறியும் சாமானியர்களை கொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது” என கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்றும் காபூலில் தாலிபானகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர்.