சுவிட்சர்லாந்து நாட்டில் "புர்கா அணிய தடை" என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில், இஸ்லாமிய பெண்கள் முகம் மற்றும் உடைகளை மறைப்பதற்காக புர்கா அணியும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் புர்கா அணியும் முறையை அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "புர்காவுக்கு தடை" தொடர்பாக தீர்மானம் 2021 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், தூதரக வளாகங்கள் போன்ற இடங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும், வழிபாட்டு தலங்கள் மற்றும் பிற புனித தளங்களில், குறிப்பாக மசூதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளலாம். ஆனால் மதரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக முகத்தை மறைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறுபவர்கள் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்த மறுத்தால், அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரை செலுத்த நேரிடும் என்றும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.