இலங்கையில் ஆளும் ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில் இதுவரை 30க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் தொடங்கி அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்திற்கும் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
அதை தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் வன்முறை வெடித்தது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்கள் வீடுகளை பொதுமக்கள் சூறையாடியும் தீ வைத்து அழித்தும் வருகின்றனர். சமீபத்தில் ராஜபக்சே குடும்பத்தின் வீடு தீ வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து சனத் நிஷாந்தா, குருநாகல் மேயர் மாளிகை, ராஜபக்சே பெற்றோர் கல்லறை, பிரசன்ன ரனதுங்கே வீடு என சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகளை பொதுமக்கள் துவம்சம் செய்துள்ளனர்.
வீடுகளில் இருந்த பொருட்களை சூறையாடியதுடன், வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர். நாளுக்கு நாள் இலங்கையில் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில் மக்கள் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.